மண்டல அலுவலக ஊழியர்களில் பத்து பேருக்கு அடுத்தடுத்து கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், மற்ற ஊழியர்களும் நோய்த்தொற்று பீதியில் உறைந்து போயுள்ளனர். இதனால் சேலம் மாநகராட்சி ஊழியர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சேலம் மாநகராட்சியில் 60 கோட்டங்கள் உள்ளன. சுமார் பத்து லட்சம் பேர் வசிக்கின்றனர். ஒப்பீட்டளவில், கிராமப்புறங்களைக் காட்டிலும் மாநகர பகுதிகளில் கரோனா நோய்த்தொற்றின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இதையடுத்து, நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்த நுண்மேலாண்மை உத்தியையும் மாநகராட்சி நிர்வாகம் கையாளத் தொடங்கியுள்ளது.
எந்தெந்த பகுதிகளில் நோய்த்தொற்று அதிகமாக இருக்கிறதோ அங்கெல்லாம் நோய்த் தொற்றாளர்களுடன் நேரடியாகவும், மறைமுகமாகவும் தொடர்பில் இருந்தவர்களின் முழு விவரங்களும் சேகரிக்கப்பட்டு வருகிறது. அப்பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாகவும் அறிவிக்கப்பட்டு, அங்கிருந்து ஆள்கள் வெளியேறவும், வெளி ஆள்கள் அங்கு செல்லவும் தடை விதிக்கிறது.
இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும், மாநகர மக்களுக்கு நோய்ப்பரவலைத் தடுப்பதில் தீவிரம் காட்டும் மாநகராட்சி நிர்வாகம், அதன் ஊழியர்களுக்கு நோய் பரவும் ஆபத்து இருப்பது தெரிந்தும் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லை என்ற புலம்பலும் ஊழியர்களிடையே அதிகரித்துள்ளது. இது தொடர்பாக மாநகராட்சி ஊழியர்கள் நம்மிடம் பேசினர்.
''சேலம் மாநகராட்சியில் அம்மாபேட்டை மண்டல அலுவலகத்தில் உதவி ஆணையர், பொறியாளர்கள், வரித்தண்டலர்கள், சுகாதார ஊழியர்கள், குடிநீர் பொருத்துநர்கள், அலுவலகப் பணியாளர்கள் என 60 பேர் பணியாற்றி வருகிறார்கள். கரோனா ஊரடங்கு காலத்திலும் கூட சொத்து வரி, குடிநீர் வரி வசூல் உள்ளிட்ட அன்றாடப் பணிகளைச் செய்து வருகிறோம். எப்படி இருந்தாலும் நாங்கள் மக்களை நேரடியாகச் சந்தித்தே ஆக வேண்டிய சூழல் இருக்கிறது.
இந்நிலையில், அம்மாபேட்டை மண்டல உதவி ஆணையரின் கார் ஓட்டுநர் ஒருவருக்கு முதலில் கரோனா தொற்று வந்தது. அதன்பிறகு, வரித்தண்டலர்கள் இருவர், எழுத்தர், மின்பணியாளர், தொலைபேசி இயக்குநர், டி.பி.சி. பணியாளர்கள் இருவர் என மொத்தம் 9 பேருக்கு கரோனா நோய்த்தொற்று வந்தது. இதனால் ஊழியர்களுக்குள் பீதியும், பதற்றமும் ஏற்பட்டதை அடுத்து, உடனடியாக எல்லோருக்கும் சளி தடவல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அனைவருக்கும் தொற்று இல்லை என்று முடிவுகள் வந்தன.
ஆனாலும், ஒரு குறிப்பிட்ட தெருவில் ஓரிருவருக்கு கரோனா தொற்று வந்தாலே அந்தத் தெருவை இருபுறமும் அடைத்து விடுகிறோம். கட்டுப்படுத்தப்படுத்தப்பட்ட பகுதியாக மாநகராட்சி நிர்வாகம் அறிவித்து விடுகிறது. தொடர்ந்து பதினான்கு நாள்களுக்கு புதிதாக அந்தத் தெருவில் யாருக்கும் நோய்த்தொற்று ஏற்படவில்லை என்றால்தான் கட்டுப்படுத்தப்பட்ட பகுதி என்பது ரத்து செய்யப்படுகிறது.
அம்மாபேட்டை மண்டல அலுவலக ஊழியர்கள் 9 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டும் கூட இன்னும் மண்டல அலுவலகத்தை மூடாமல் தொடர்ந்து அலுவலகத்திற்கு வந்து பணிகளை மேற்கொள்ளும்படி மாநகராட்சி நிர்வாகம் கட்டாயப்படுத்துகிறது. மக்களின் உயிர் எந்தளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்கு அவர்களுக்குச் சேவை செய்யும் ஊழியர்களையும் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் மாநகராட்சி ஆணையரிடம் இல்லை.
கொண்டலாம்பட்டி மாநகராட்சி மண்டல அலுவலகத்திலும் பெண் ஊழியர் ஒருவருக்கு கரோனா உறுதிப்படுத்தப்பட்டது. மாநகராட்சி ஆணையர் வீட்டிலேயே மூன்று பணியாளர்களுக்கு கரோனோ தொற்று ஏற்பட்டதாகவும் சொல்கின்றனர். கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வெளிப்படையாக அறிவிக்கும் மாநகராட்சி நிர்வாகம், அதன் பாதிக்கப்பட்ட ஊழியர்கள் குறித்தும் தகவல்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்,'' என்றார்கள்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ''அம்மாபேட்டை மண்டல அலுவலகத்தில் சிலர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உண்மைதான். உதவி ஆணையர்கள், பொறியாளர்கள், வரித்தண்டலர்கள் வரை அனைத்து ஊழியர்களும் களப்பணியில்தான் இருக்கிறார்கள். அலுவலகத்தில் அமர்ந்து வேலை பார்ப்பது கொஞ்ச நேரம்தான். நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்க கபசுர குடிநீர், ஆர்சனிக் ஆல்பம் மாத்திரைகள் ஆகியவை அனைத்து ஊழியர்களுக்கும் வழங்கப்பட்டு உள்ளன.
சுழற்சி முறையில் பணியாளர்களை அமர்த்தும் அளவுக்கு மாநகராட்சியில் போதிய ஊழியர்கள் இல்லை. ஆள்கள் பற்றாக்குறையால் நோய்த்தொற்று உள்ளவர்களைத் தவிர மற்றவர்களைப் பணிக்கு அழைத்திருக்கிறோம். பொதுமக்களுக்கு அறிவுறுத்துவது போலதான், சோதனைச்சாவடி, தனிமை முகாம்களில் பணியாற்றும் ஊழியர்கள் உள்பட அனைவருமே முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தும் பணியாற்ற வேண்டும் என்று அறிவுறுத்துகிறோம். ஊழியர்களுக்கு விடுப்பு கூட அளிக்க முடியாத நிலை உள்ளது,'' என்று பட்டும்படாமலும் கூறினார்.