சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளராக இருந்த ஜெ.அன்பழகன், கரோனா வைரஸ் தொற்றால் காலமானார். ஜெ.அன்பழகன் காலமானதையடுத்து அந்த பதவி நிரப்படாமல் இருந்த நிலையில், சென்னை மேற்கு மாவட்ட கழக பொறுப்பாளரை நியமித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தி.மு.கவை பொறுத்தவரை, அதன் கட்சி கட்டமைப்பில் மாவட்ட செயலாளர் பதவிதான் வலிமைமிக்கது. எம்.எல்.ஏ., எம்.பி., அமைச்சர் என்கிற பதவிகளைவிட வலிமையானது மா.செ.பதவி. அந்த வகையில், சென்னை மேற்கு மா.செ. பதவியைக் கைப்பற்ற பலரும் குறி வைத்திருந்தினர். அதற்கான முயற்சிகளையும் செய்து வந்தனர்.
இந்த நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சென்னை மேற்கு மாவட்ட கழக செயலாளர் ஜெ.அன்பழகன் மறைவெய்திய காரணத்தினால் மாவட்ட கழக பணிகள் செவ்வனே நடைபெற நே.சிற்றரசு சென்னை மேற்கு மாவட்ட கழக பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார். ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட கழக அமைப்பின் பிற நிர்வாகிகள் அவருடன் இணைந்து பணியாற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன்'' என குறிப்பிட்டுள்ளார்.
திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சென்னை மேற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி அமைப்பாளராக நியமிக்கப்பட்டிருந்த நே.சிற்றரசு அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார்.
அவருக்கு பதிலாக ராஜா அன்பழகன் சென்னை மேற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி அமைப்பாளராக தலைமை கழக ஒப்புதலோடு நியமிக்கப்படுகிறார். ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ள இளைஞர் அணி நிர்வாகிகள் இவருடன் இணைந்து பணியாற்றுவர்” என குறிப்பிட்டுள்ளார்.