திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மிசாவில் கைதானாரா? முரசொலி நிலம் பஞ்சமி நிலத்தில் இருக்கிறதா? என அண்மையில் திடீர் திடீரென சர்ச்சைகள் எழுந்து, பல்வேறு சமூகப் பிரச்சனைகள் இருந்தாலும் தமிழகத்தில் ஸ்டாலினைப் பற்றியும், முரசொலி நிலத்தைப் பற்றியும் சமூக ஊடகங்களில் சர்ச்சையை சிலர் ஏற்படுத்தினர். அ.தி.மு.க மந்திரிகள் வரை இதனை பேசும் அளவுக்கு இந்த விஷயங்கள் மாற்றப்பட்டன. இதனால் தமிழகத்தில் இந்த விவகாரம் மிகப்பெரிய விவாதப் பொருளாகவும் மாறியது.
மேலும் இந்த விவகாரத்தை, திமுகவுக்கு எதிராக இருக்கக்கூடிய அதிமுகவின் ஐ.டி. விங், பாஜக ஐ.டி. விங், பாஜகவுக்கு ஆதரவாக இருப்பவர்கள், பாஜகவுக்கு ஆதரவாக உள்ள அமைப்புகளின் ஐ.டி. விங், நாம் தமிழர் உள்ளிட்ட திராவிட இயக்கத்திற்கு எதிராக சமூக ஊடகங்களில் உள்ளவர்கள் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
தீர்க்கப்பட வேண்டிய பல்வேறு மக்கள் பிரச்சனைகள் உள்ள நேரத்தில் ஆளும் கட்சியான அதிமுகவும், மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜகவும் இந்த விசயத்தில் அதிக கவனம் செலுத்துகிறது. இதற்கு பதிலடி கொடுக்க வேண்டிய இடத்தில் உள்ள திமுக ஐ.டி. விங் மிகவும் தடுமாற்றத்தில் உள்ளது என்று திமுகவினரே குமுறுகின்றனர்.
''தமிழகத்தில் மிகப்பெரிய எதிர்க்கட்சியாக உள்ள திமுக, நாடாளுமன்றத் தேர்தலில் இந்திய அளவில் 3வது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. அப்படிப்பட்ட திமுகவில் உள்ள ஐ.டி. விங், ஆளும் கட்சியின் ஊழல்கள், மக்கள் விரோத செயல்களை அடித்து விளையாடலாம். ஆனால் அதனை செய்யாமல் தடுப்பு ஆட்டம் ஆடிக்கொண்டிருக்கிறது. அதிலும் கூட ரொம்பவே தடுமாறுகிறது.
ஸ்டாலின் மிசாவில் இருந்தார் என்பது நாடறிந்த உண்மை. திமுகவுக்கு எதிராக இருக்கக்கூடிய துக்ளக் குருமூர்த்தியே இதை உறுதிப்படுத்தி விட்டார். ஆனால் திமுக தரப்பில் அதனை அதிகாரப்பூர்வமாக சொல்வதற்கு ஒரு முன்னாள் அமைச்சராலேயே முடியவில்லை. இதனால்தான் சமூக ஊடகங்களில் இந்த விவகாரம் தொடர்ந்து போய்க்கொண்டே இருந்தது. ஐடி விங் அதிகாரப்பூர்வமாக இதற்கு பதிலடி கொடுக்கவில்லை. ஓர் இளம் டீம் ஆர்வத்துடன் செயலாற்றி, ஐடி விங் பொறுப்பில் உள்ளவரின் ஒத்துழைப்புடன் இதற்கு பதில் தருவதற்குள் 10 நாட்களுக்கு மேலாகிவிட்டது.
திமுக மீது விமர்சனம், ஸ்டாலின் மீது விமர்சனம் என்பதை தாண்டி ஒரு கட்டத்தில் தனி மனித தாக்குதல், ஸ்டாலின் குடும்பம் மீதான தாக்குதல், பர்சனல் விஷயங்கள் சமூக வலைத்தளங்களில் திமுக திணறடிக்கப்படுகிறது. நாலாந்தர மேடைப் பேச்சாளர்கள் பேசும் அளவுக்கு வம்பு இழுக்கப்படுகிறது. இதற்கெல்லாம் பதிலடி கொடுக்க வேண்டிய திமுக ஐ.டி. விங், பெரிய அளவில் எதுவும் தனது பங்கை செய்யவில்லை.
தனிப்பட்ட முறையில் திமுகவை ஆதரக்கக்கூடியவர்கள், திமுக ஐ.டி. விங் குரூப்பில் இல்லாத திமுக உறுப்பினர்கள்தான் எதிர்க்கட்சிகளின் விமர்சனத்திற்கு சமூக ஊடகத்தில் பதிலடி கொடுத்து வருகின்றனர். பதிலடி கொடுத்ததோடு மட்டுமல்லாமல், எதிர்த் தரப்பு மீதும் பல்வேறு கேள்விகளை வைக்கிறார்கள்.
திமுக ஐ.டி. விங் குரூப்புக்கு தலைமைப் பொறுப்பாக இருக்கக்கூடியவர் மதுரை மத்திய தொகுதி எம்எல்ஏவான பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன். அவர் இந்த அணியை உருவாக்கும்போதே தான் தன்னிச்சையாக செயல்படக்கூடிய சுதந்திரம் வேண்டும் என்று கேட்டு பெற்றுக்கொண்டார். மேலும் ஸ்டாலின் மருமகன் சபரீசனுக்கு உறவினர் என்பதாலும் அவர் சொல்வதை ஐ.டி. விங் நிர்வாகிகள் எல்லோரும் கேட்டுக்கொள்கிறார்கள்.
தேர்தல் விவரங்கள், வாக்குச்சாவடி விவரங்கள் போன்ற புள்ளிவிவரங்களை சொல்லி, கட்சியின் அடிப்படை கட்டமைப்பு விசயத்தில்தான் கவனம் செலுத்துகிறார்கள். சமூக ஊடகங்ளில் திமுகவுக்கு எதிராக வரும் விமர்சனங்களுக்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் ஐ.டி. குரூப்பில் ஒரு கட்டமைப்பு இல்லை. திமுக மீது அபாண்டமாக குற்றச்சாட்டு சொல்பவர்களிடம் போதிய விவரமும் இல்லை, ஆதாரமும் இல்லை. அப்படி இருக்கும் நிலையில் தக்க பதிலடி கொடுத்தால் என்ன?
தமிழக அளவிலும், இந்திய அளவிலும் பல்வேறு சமூகப் பிரச்சனைகள் இருந்தாலும் அவை மிகப்பெரிய அளவில் பேசப்படுவதில்லை. தமிழகத்தைப் பொறுத்தவரை இரண்டாவது முறையாக அதிமுக ஆட்சியில் இருக்கிறது. பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்கள் உள்ளது. பல்வேறு அமைச்சர் வீடுகளில் ரெய்டு நடந்திருக்கிறது.
எடப்பாடி பழனிசாமி வெளிநாடு சென்றார் என்பதற்காக, இப்போது துணை முதலமைச்சர் என்ற பெயரில் ஓ.பி.எஸ். சென்றிருக்கிறார். வெளிநாட்டு முதலீடுகள் வருதோ இல்லையோ விருதுகளை வாங்கி குவிக்கிறார்.
நாடாளுமன்றத் தேர்தலில் லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த அதிமுக, எப்படி மூன்று மாதத்தில் நடந்த விக்கிரவாண்டி, நாங்குநேரியில் வெற்றி பெற்றது. ஒட்டுமொத்த அமைச்சர்கள் அங்கேயே முகாமிட்டிருந்தனர். இதனையெல்லாம் திமுக ஐ.டி. விங் ஸ்டிங் ஆபரேசன் செய்யாமல் விட்டுவிட்டது. கண்ணுக்கு தெரிந்த பல்வேறு முறைகேடுகள், ஊழல்களை இந்த ஐ.டி. விங் பொதுமக்களுக்கு எடுத்து சொல்லாமல்விட்டுவிட்டது. யாருக்காக இந்த குழு செயல்படுகிறது, எதற்காக செயல்படுகிறது என்றே தெரியவில்லை.
பத்து வருடங்களுக்கு முன்பிருந்தே அதாவது கடந்த 2009ல் இருந்தே சமூக ஊடகங்களில் தன்னிச்சையாக செயல்படக்கூடிய திமுகவினர் பலர் இருக்கிறார்கள். அவர்களில் பலர் ஆதாரப்பூர்வமான செய்திகளை, பதிவுகளை, திமுகவின் சாதனைகளை சமூக ஊடகங்களில் போடுவார்கள். அவர்களை ஐ.டி விங் பயன்படுத்திக்கொள்வதில்லை. இன்னும் சொல்லப்போனால் அவர்கள் யார்? யார்? என்ற விவரங்கள் கூட திமுக ஐ.டி. விங்கிற்கு தெரியாது.
ஐ.டி. விங்கில் இருக்கும் ஒரு சிலர் மட்டும் தங்களோட சொந்த முயற்சியில் பல ஆவணங்களை தோண்டி எடுத்து திமுக மீதான குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்கிறார்கள். தவிர, ஐ.டி. விங்கோட அதிகாரப்பூர்வ செயல்பாடு மிக மிக குறைவாக உள்ளது. சபரீசன் உறவினராக பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இருப்பதால், நாம் ஏதாவது சொன்னால் நமக்கு ஏதாவது சிக்கல் வந்துவிடுமோ என்ற தயக்கமும், பயமும் திமுக முன்னணி நிர்வாகிகளுக்கே இருக்கிறது.
ஃபாரீன்ல படிச்சோம், ப்ளைட்டில் போனோம் என்ற நினைப்பிலேயே ஐ. டி. விங் தலைமை இருப்பதால் அந்த விங் எப்போதும் பிளைட் மோடுலேயே இருக்கிறது.
''நான் மிசாவில் இருந்தேன் என்று சொல்வதற்கே எனக்கு வெட்கமாக இருக்கிறது'' என கடந்த நவம்பர் 10ஆம் தேதி நடந்த திமுக பொதுக்குழுவில் வேதனையோடு பேசினார் மு.க.ஸ்டாலின். இந்த அளவுக்கு வேதனைப்பட்டு பேசுவார் என்று நாங்கள் கனவிலும் நினைக்கவில்லை. கட்சித் தலைவரை, கட்சியின் முன்னணி நிர்வாகிகளை தனிப்பட்ட முறையில் எதிர்க்கட்சியினர் தாக்கும் நிலையிலும், இன்னும் பிளைட் மோடு போட்டுவிட்டு காராபூந்தி, காராச்சேவு, மிக்சர் என சாப்பிட்டுக்கொண்டிருக்கிறது இந்த ஐ.டி. விங்.
நாங்கள் ஐ.டி. விங் குரூப்புக்குள் புகுந்து ஏதேனும் பதவியை பிடித்துவிடுவோம் என்ற பயம் வேண்டாம். தகுந்த ஆதாரங்களை, தக்க பதிலடிகளை, ஆவணங்களை தர தயாராக இருக்கிறோம். அதனை அவர்கள் பயன்படுத்தி கட்சிக்கு பலம் சேர்த்தால் போதும், நாங்கள் எங்கள் பதிலடிகளை கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறோம். இருப்பினும் இது வாட்ஸ் அப், பேஸ்புக், டுவிட்டர் காலம் என்பதால்தான் ஐ.டி. விங்கோட ஒத்துழைப்பு வேண்டும் என்கிறோம்" என நம்மிடம் வருத்தப்பட்டனர் திமுகவின் உண்மையான சமூக வலைத்தள செயல்பாட்டாளர்கள்.