ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா. அப்பல்லோ மருத்துவமனைக்குள் அனுமதி மறுக்கப்பட்டதில் தொடங்கி, "எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை' தொடங்கியதுவரை ஏகப்பட்ட பிரச்சனைகள் அவருக்கு. தற்போது அ.தி.மு.க.வில் இணையப்போவதாக அவர் அறிவித்துள்ள நிலையில், பொறுப்புகளில் இருக்கும் அனைவரும் தங்களுக்கு பதவி கிடைக்குமா என்ற குழப்பத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கின்றனர்.
இது ஒருபுறமிருக்க, காஞ்சிபுரம் மாவட்ட எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை பொறுப்பாளர் ராமச்சந்திரன், தீபா மற்றும் அவரது டிரைவர் ஆயில் ராஜாவிடம், தான் கொடுத்த ஒரு கோடியே 12 லட்சத்தை திருப்பிக் கேட்டதற்காக... "நகையைப் பறித்துவிட்டார்' என்று புகார் கொடுத்திருக்கிறார் தீபா.
இதுதொடர்பாக ராமச்சந்திரன் நம்மிடம், ஆரம்பத்தில் "நம் கட்சி வளர்ச்சியை எட்டியுள்ளது. இந்த சமயத்தில் யாரிடமும் பணம் கேட்க முடியாது. அதனால், சும்மா வேண்டாம்,…கடனாக ரூ.50 லட்சம் கொடுங்கள்'' என ஆயில் ராஜா கேட்டார். இதை தீபாவும் உறுதிசெய்து, அடையாறுக்கு வரச்சொல்லி கடற்கரை செல்லும் சாலையில் வைத்தே பணத்தை வாங்கிக்கொண்டார். அதன்பிறகு, என்னோடு சண்டை போட்டுட்டு "பணத்தையெல்லாம் மாதவன் எடுத்துட்டு போயிட்டான்'’என்று கண்ணீர் வடித்த தீபா, "கட்சி செலவிற்கு பணம் தேவைப்படுகிறது. என் அத்தை சொத்துகள் எல்லாமே எனக்குதான் வரும். வந்ததும் திருப்பித் தருகிறேன் என்று கையைப் பிடித்துக்கொண்டு அழுதார். நானும் நம்பி ரூ.25 லட்சம் கொடுத்தேன். தொடர்ந்து ஆயில் ராஜாவை அனுப்பி இதுவரை ஒரு கோடியே 12 லட்சம் வாங்கிவிட்டார். இவைபோக, அலுவலகத்திற்கு ஏ.சி., சோபா என எல்லாமே வாங்கிப் போட்டேன். இருந்தாலும், "நான் கொடுத்த பணத்தையாவது கொடுங்களேன்' என்று கேட்டதற்கு, கழுத்தில் இருந்த நகையைப் பிடுங்கிக்கொண்டதாக புகார் கொடுத்துவிட்டார்''’என்றார் பரிதாபமாக.
தொடக்கத்தில் தீபாவுடன் இருந்தவர்கள் யாரும் இப்போது இல்லை. பணம் கொடுத்தவர்களும் நச்சரிக்கத் தொடங்கிவிட்டனர். நீதிமன்றத்தில் ஜெயலலிதாவின் சொத்தை அரசுடைமையாக்கும் வழக்கும் திணறடிக்கிறது. இந்த நிலையில்தான் இனிமேல் நிலைமை மோசமாகிவிடும் என்பதை யோசித்துதான் அ.தி.மு.க.வில் இணையும் முடிவுக்கே தீபா வந்திருப்பதாக அவரது கட்சி வட்டாரத்தில் சொல்கின்றனர்.
அத்தையின் சொத்துகளில் பாதியாவது தனக்குக் கிடைத்தால் போதும் என்று ஓ.பி.எஸ். பேச்சுவார்த்தை நடத்தியே தற்போதைய இணைப்பு அறிவிப்பையும் வெளியிட்டிருக்கிறார் தீபா. அதேசமயம், "தீபாவின் தம்பி தீபக், சசிகலா பக்கம் இருக்கும்போது, தீபா தங்கள் பக்கம் இருப்பதை சாதகமாக்கிக் கொள்ளலாம்' என்ற கண்ணோட்டத்தில்தான் எடப்பாடியிடம் வலியுறுத்துகிறார் ஓ.பன்னீர்.