மார்க்ஸ் டிரியர் உயர்நிலைப் பள்ளியிலிருந்து விலகிய சமயத்தில் அவருடைய வகுப்பில் 32 மாணவர்கள் இருந்தார்கள்; அவர்களில் பெரும்பாலானவர்களின் வயது பத்தொன்பதிலிருந்து இருபத்தேழு வரை இருந்தது. அதாவது அவர்கள் பள்ளியில் படிக்கின்ற வயதைக்காட்டிலும் அதிக வயதானவர்கள், அநேகமாக ஒவ்வொரு வகுப்பிலும் இரண்டு வருடங்கள் தங்கிப் படித்தவர்கள்.
இவர்களில் பதின்மூன்று மாணவர்கள் பள்ளி இறுதித்தேர்வில் தோல்வி அடைந்தார்கள். மார்க்சுடன் படித்த மாணவர்களில் பலர் குட்டி முதலாளி வர்க்க, விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், அவர்கள் குருட்டுத்தனமான மதப்பற்றில் மூழ்கியிருந்தார்கள். மதகுருவின் வேலையே அவர்களுடைய கனவுகளின் சிகரம். அந்த வகுப்பைச் சேர்ந்த 25 கத்தோலிக்க மாணவர்கள் எழுதிய பள்ளியிறுதிக் கட்டுரைகளை ஆராயும்பொழுது அவர்களில் பாதிக்கும் அதிகமானவர்கள் இறைப் பணிக்குத் தங்களை அர்ப்பணித்துக் கொள்ளத் தயாராக இருந்தார்கள் என்பது தெரிகிறது.
அவர்களுடைய கனவுகள் நனவாயின. 1835ம் வருடத்தில் டிரியர் பள்ளியிலிருந்து பள்ளி இறுதித் தேர்வை முடித்து வெளியேறிய மாணவர்களில் பிரஷ்யாவுக்கு 13 கத்தோலிக்க மதகுருக்களும் 7 வழக்குரைஞர்கள் மற்றும் உயர்நிலை அதிகாரிகளும் 2 டாக்டர்களும் கிடைத்தனர். ஆனால், அந்தப் பள்ளி உலகத்துக்கு ஒரு கார்ல் மார்க்சைக் கொடுக்கும் என்று யாராவது நினைத்திருப்பார்களா?
அந்தப் பள்ளியின் ஆசிரியர்கள் நிச்சயமாக நினைத்திருக்க மாட்டார்கள், ஏனென்றால் கார்ல் மார்க்ஸ் தனிச்சிறப்புடைய மாணவர் என்று யாரும் கருதவில்லை. அவர் எல்லாப் பாடங்களிலும் சுமாரான மதிப்பெண்களைத்தான் பெற்றார். எதிர்காலத்தில் வரலாற்றுப் பொருள் முதல்வாதத்தைப் படைக்கப் போகிற மாணவர் வரலாற்றுத் தேர்வில் மற்ற பாடங்களைக் காட்டிலும் குறைவான மதிப்பெண்களைத்தான் பெற்றிருந்தார்.
இதைப் பற்றி ஆச்சரியமடைவதற்கு ஒன்றுமில்லை. அந்த ஆசிரியர்கள் சில விதிமுறைகளைப் பின்பற்றினார்கள். மார்க்சுக்கு அவை பொருந்தவில்லை. அவருடைய சுயசிந்தனை அவர்களை அச்சுறுத்தியது. ஒரு பிரச்சினையின் மூலவேர்களை அறிவதற்கு, ஒவ்வொரு பாடத்தையும் விரிவாக அறிந்துகொள்வதற்கு, தன்னுடைய சிந்தனைகளை தத்ரூபமாக வர்ணிப்பதற்கு அவர் செய்த முயற்சியை அவர்கள் கண்டித்தார்கள். அவற்றை “மிகையான அலங்கார நடை”, “அதிகமான பளுவை அவசியமில்லாமற் சுமத்துதல்”, “சலிப்பூட்டும் சொற்குவியல்” என்று அவர்கள் கூறினார்கள். மார்க்சின் கையெழுத்து அழகாக இல்லாததும் அவர்களுக்கு எரிச்சலூட்டியது. “வெறும் கிறுக்கல்” என்று இலத்தீன மொழி ஆசிரியர் புகார் செய்தார். அதை மற்ற ஆசிரியர்களும் ஒத்துக்கொண்டார்கள்.
“இளைஞர்களுக்குக் கற்பிக்கும்” ஆசிரியர்களின் ஏட்டுப்புலமை மார்க்சுக்கு அருவருப்பைக் கொடுத்தது. அது பிந்திய வருடங்களிலும் அவரிடம் நிலைத்திருந்தது. அவர் 1862ல் எங்கெல்சுக்கு எழுதிய கடிதத்தில் இந்த ஏட்டுப் படிப்பாளிகளில் ஒருவரை வர்ணித்தார். இந்த ஆசிரியர் வெளித்தோற்றத்தில் கௌரவமான மனிதர், ஆனால் படிப்பது மற்றும் கற்பிப்பதில் உருப்போடுகின்ற முறைக்கு அப்பால் அவர் ஒருக்காலும் போவதில்லை. அவருடைய புலமை ஏற்கெனவே தயாரிக்கப்பட்ட பதில்களைத் தேடி எடுப்பதைத் தவிர வேறு ஒன்றுமில்லை. அவர் கணிதப் பாடங்கள் எல்லாவற்றையும் படித்தவர், ஆனால் கணிதவியலை அறியார்.
இந்த ஏட்டுப்படிப்பாளி நேர்மையானவராக இருந்தால் அவர் தன்னுடைய மாணவர்களுக்கு உபயோகமாக இருக்கக்கூடும். அவர் போலித்தந்திரங்களில் ஈடுபடாமல் உண்மையைச் சொல்லியிருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். இங்கே ஒரு முரண்பாடு இருக்கிறது. சிலர் இப்படிச் சொல்கிறார்கள். மற்றவர்கள் வேறுவிதமாகச் சொல்கிறார்கள். இந்தப் பிரச்சினையில் எனக்குச் சொந்த அபிப்பிராயம் இல்லை, நீங்களே சிந்தியுங்கள், இப்பிரச்சினையின் அடிமட்டத்துக்குப் போக முடியுமா என்று பாருங்கள்! “இந்த அணுகுமுறையைப் பின்பற்றினால் ஒரு பக்கத்தில் மாணவர்களுக்குச் சில விவரங்கள் கிடைக்கும், மறு பக்கத்தில் அவர்களைத் தாமே உழைக்கும்படி உற்சாகப்படுத்தியதாகவும் இருக்கும்”. ஆனால் ஏட்டுப்படிப்பாளியின் இயல்புக்கு மாறான ஒரு நிபந்தனை இது என்பதை நான் அறிவேன்.