
பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று (18.01.2021) டெல்லி சென்றார். மாலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார். இன்று காலை மோடியை சந்தித்துப் பேசினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா உடனான சந்திப்பில் அரசியல் எதுவும் பேசப்படவில்லை. தமிழகத்தில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைக்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளேன் என தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நக்கீரன் இணையதளத்திற்கு கருத்து தெரிவித்துள்ள அரசியல் விமர்சகர் நாஞ்சில் சம்பத், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணத்தில் அவர் நினைத்தது நடக்கவில்லை என்றே நான் கருதுகிறேன். அரசியல் ரீதியாக எதையும் விவாதிக்கவில்லை, பேசவில்லை என்று அவர் சொல்லியிருப்பது அண்டப் புழுகு, ஆகாசப் புழுகு.
பாஜக என்கிற கட்சி தன்னுடைய கட்டுப்பாட்டில் அதிமுகவை வைத்திருக்க வேண்டும் என்று கருதுகிறது. எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக பாஜக ஏற்கவில்லை. இவர்தான் முதலமைச்சர் என்று எடப்பாடி பழனிசாமியை அதிமுக வழிமொழிந்ததற்குப் பிறகு பாஜக அதனை வழிமொழியவில்லை.
தமிழ்நாட்டின் முதலமைச்சர் வேட்பாளரை டெல்லி தலைமை அறிவிக்கும் என்று அடுத்த நிமிடத்திலேயே அறிக்கை விட்டார் தமிழக பாஜக தலைவர். ஆனால் இன்றைக்கு அதைப்பற்றி எதுவும் பேசவில்லை, அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பது அண்டப் புழுகு என நான் சொல்வதற்கு காரணம், தேர்தல் தேதி அறிவிக்கிற நாள் நெருங்கி வருகிற காலக்கட்டத்தில் திட்டங்கள் குறித்து விவாதிப்பதற்கும், கோரிக்கைகளை வைப்பதற்கும் டெல்லி சென்றேன் என்று சொல்வதை ஏற்க முடியாது. திட்டங்களை நிறைவேற்றவும், கோரிக்கைகளை வைப்பதற்கும் இது உகந்த நேரமல்ல.
ஆட்சியில் அந்திசாயும் நேரத்தில் இருக்கிற எடப்பாடி பழனிசாமி இனிமேல் தமிழ்நாட்டில் திட்டங்களைத் தொடங்கவும், அதனை நிறைவேற்றவும் காலம் வாய்ப்பு கொடுக்காது. பாஜகவும் அதை இவரிடத்தில் எதிர்பார்க்காது. ஆகவே இவர் என்ன நினைத்து அங்கு சென்றாரோ, நினைத்தது நடக்கவில்லை என்றே நான் கருதுகிறேன். திட்டமிட்டே முதலமைச்சர் ஒரு உண்மையை மூடி மறைத்திருக்கிறார்.
தமிழ்நாட்டிற்கு திட்டங்கள் குறித்துதான் பேசியிருந்தால் எந்த திட்டங்கள் குறித்துப் பேசினார். இன்று காலை பத்திரிகை செய்தி, தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய நிலுவைத் தொகை ரூபாய் 19 ஆயிரம் கோடி என்று தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மத்திய நிதி அமைச்சர் கூட்டத்தில் பேசியிருப்பதாக வந்திருக்கிறது. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய அந்த நிலுவைத் தொகை பற்றி எடப்பாடி பேசியிருக்கிறாரா?

சசிகலா வெளியே வந்தாலும் அதிமுகவில் எந்த பாதிப்பும் ஏற்படாது என கூறியிருக்கிறாரே?
சசிகலா வந்தால் அதிமுகவில் எந்த மாற்றமும் இருக்காது என்று சொல்வது, இவர் தப்பிப்பதற்காக சொல்லக்கூடிய வார்த்தைதான். சசிகலா வந்தால் அதிமுகவில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும். ஒரு மிகப்பெரிய அரசியல் சரிவில் இவர் விழப்போகிறார். முதலமைச்சர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு ஆபத்து வரப்போகிறது. நன்றி கொன்ற மகற்கு உரிய தண்டனையை இவர் அனுபவிக்கப்போகிறார். அதனால் சசிகலாவை ஏற்க மனமில்லாத அருவடைய நிலையை அவர் தெளிவுப்படுத்தியிருக்கிறாரேயொழிய வேறொன்றும் இல்லை.
சசிகலா சிறையில் இருந்து திரும்ப வந்ததற்குப் பிறகு அந்தக் கட்சியை வழிநடத்தப்போவது அவர்தான். அது நடக்கப்போகிறது. ஓ.பி.எஸ். என்று சொல்லக்கூடிய அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் அதற்கான வேலைகளில்தான் இப்போது கவனம் செலுத்திக்கொண்டிருக்கிறார். எடப்பாடி பழனிசாமியினுடைய அரசியல் அஸ்தமனமாகப் போகிறது. பொறுத்திருந்து பாருங்கள்.
சசிகலா அதிமுகவில் இணைய 100 சதவிகிதம் வாய்ப்பே இல்லை என தெரிவித்திருக்கிறாரே?
ஜெயலலிதா இருந்தபோதே அவர் அதிமுகவில் இருந்தாரா இல்லையா என்பது இப்போது கேள்வி அல்ல. சசிகலாதான் கூவத்தூரில் அதிமுக எம்எல்ஏக்களை அழைத்து கலந்தாலோசித்து இவரை முதலமைச்சராக்கியவர். ஆனால் அதிமுக எம்எல்ஏக்கள்தான் தன்னை தேர்ந்தெடுத்தார்கள், சசிகலாவுக்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை என்று சொன்ன அந்த நிமிடத்திலேயே இவர் நன்றி கொன்றிருக்கிறார் என்பதைவிட, நாளை நடக்கப்போவதை அனுமானிப்பதற்கான ஆற்றலும் எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை என்பது வெட்ட வெளிச்சமாகிவிட்டது.