Skip to main content

“தனித்து விடப்பட்ட மணிப்பூர் மக்கள்; பிரதமரின் வாயைத் திறக்க வைத்த வீடியோ” - ‘மனிதி’ செல்வி 

Published on 25/07/2023 | Edited on 25/07/2023

 

Manithi Selvi Interview

 

மணிப்பூரின் நிலை குறித்து தன்னுடைய கருத்துக்களை மனிதி செல்வி பகிர்ந்துகொள்கிறார் 

 

மணிப்பூர் சம்பவம் குறித்த முதல் தகவல் அறிக்கையில் மூன்று பெண்கள் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டதாகப் பதிவாகி இருக்கிறது. ஆனால் வீடியோவில் நாம் பார்த்தது இரண்டு பெண்கள் தான். அந்த இன்னொரு பெண்ணுக்கு என்ன ஆனது என்பதே தெரியவில்லை. பெரும்பான்மையினரான மெய்தேய் மக்கள், குக்கி இனத்தவர் போல் தங்களையும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கேட்டனர். அங்கு தற்போது இருக்கும் முதலமைச்சரும் மெய்தேய் இனத்தைச் சேர்ந்தவர் தான். எனவே அவர்களுடைய கோரிக்கைக்கு அவர் ஒப்புதல் அளித்தார்.

 

இதை எதிர்த்து குக்கி மக்கள் போராட்டத்தில் இறங்கினர். அதன் பிறகு மிகப்பெரிய கலவரம் வெடித்தது. இத்தனை நாட்கள் நடந்த கலவரத்திற்குப் பிறகு, இறுதியில் வீடியோ வெளியானதால் தான் பிரதமர் வாய் திறக்கிறார். கலவரத்தில் ஈடுபடுபவர்கள் பாஜகவைச் சேர்ந்தவர்களாகவோ, பாஜகவால் தூண்டப்பட்டவர்களாகவோ தான் இருக்கின்றனர். இந்துக்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையிலான சண்டையாக இதை மாற்றுகின்றனர். குக்கி, நாகா உள்ளிட்ட பழங்குடியின மக்கள் மீது நிகழ்த்தப்படும் இனப்படுகொலை என்றே இதைச் சொல்லலாம். 

 

இதுபோன்ற பிரச்சனைகளின் போது பெண்களை வன்முறைக்கு உள்ளாக்குவது தான் தொடர்ந்து நடந்து வருகிறது. இவர்கள் போற்றும் மகாபாரதத்தில் கூட பாஞ்சாலிக்கு இது தான் நடந்தது. இவ்வளவு பெரிய கலவரத்தைத் தடுக்க முடியாத மாநில அரசை வைத்துக்கொண்டு அந்த மக்களை நிச்சயம் காப்பாற்ற முடியாது. மாநில அரசு உடனடியாகப் பதவி விலக வேண்டும். ஒன்றிய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வளவு காலம் ஒட்டுமொத்த இந்தியாவும் இந்த வன்முறையை வேடிக்கைதான் பார்த்துக் கொண்டிருந்தது. 

 

இவ்வளவு கொடுமைகள் நடந்த பிறகு தான் உச்சநீதிமன்றமும் இதில் கவனம் செலுத்துகிறது. இந்தக் கொடுமைகளுக்கான ஆவணமாக வீடியோ வெளியே வந்ததற்கு சமூகவலைத்தளங்கள் தான் காரணம். டிஜிட்டல் இந்தியா என்று சொல்கிறார்கள். ஆனால் கலவரம் நடந்த மணிப்பூரில் இன்டர்நெட் முழுமையாகத் துண்டிக்கப்பட்டது. நடக்கும் கொடுமைகள் வெளியே தெரியக்கூடாது என்று அரசே நினைக்கிறது. மணிப்பூரில் இருக்கும் பாஜகவினரே பாஜகவுக்கு எதிராக இன்று திரும்பிவிட்டனர். மக்கள் இன்று கேள்வி கேட்கின்றனர். மக்களின் மனசாட்சி தட்டி எழுப்பப்பட்டுள்ளது.

 

விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வரும் மக்களை மதம் குறித்த தவறான தகவல்களைப் பரப்பித் திசைதிருப்புகிறது பாஜக. மீடியாக்களின் உதவியோடு மோடி குறித்த நல்ல பிம்பத்தை உருவாக்குகின்றனர். மணிப்பூர் சம்பவத்தை வெளியே கொண்டுவந்த ட்விட்டர் நிறுவனத்தை அரசு கேள்வி கேட்கிறது. ஆயுதம் தாங்கி நிற்பதால் அரசைக் கண்டு மக்களும் பயப்படுகின்றனர். கலவரங்கள் செய்வது, எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்குவது போன்ற காரியங்களினால் தான் பல இடங்களில் பாஜக ஆட்சிக்கு வந்துள்ளது. 2024 தேர்தலில் இந்தியப் பெண்கள் அனைவரும் மோடிக்கு எதிராகத் தான் வாக்களிப்பார்கள்.