தமிழகத்தின் அரசியலைக் கரைத்துக்குடித்த அவர் இன்றுவரையிலும் அதிமுகவில் ஒரு அடிமட்டத் தொண்டர்தான். விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த அவர், அவ்வப்போது, நடப்பு அரசியலை நம்மிடம் பகிர்ந்துகொள்வார்.

MGR Jayalalithaa

மே 23-ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியானதிலிருந்து “மனக்குமுறல் நிறைய இருக்கிறது. கொட்டித் தீர்க்க வேண்டும்.’ என்று நம்மைத் தொடர்ந்து அழைத்தபடியே இருந்தார். அவரைச் சந்தித்தோம்.“அதிமுக தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களுக்குக் கடிதம் எழுதும் அளவுக்கு எனக்குப் பொறுமை இல்லை. கோர்வையாக எனக்குச் சொல்ல வராதே...” என்றபடி குமுறலை வெளிப்படுத்தினார். அந்த அதிமுக அடிமட்டத் தொண்டரின் ஆதங்கம் இதோ –

என்ன நடந்தாலும் இரட்டை இலைதான்!

“எனக்கு விபரம் தெரிந்த நாள் முதல் நான் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகனாக இருந்தேன். பின், அவருடைய மன்றத்தில் இணைந்தேன். மன்றத்தின் வளர்ச்சிக்காக உழைத்தேன். எம்.ஜி.ஆர்., கட்சி துவங்கிய பின், என்னைப் போன்ற கோடிக்கணக்கானோர், எதையுமே எதிர்பார்க்காமல் அவருடைய கட்சியில் இணைந்தோம். கட்சி வளர்ச்சிக்காக, அடிமட்டத் தொண்டர்களாக நிறைய பணியாற்றினோம். அரசியலில் என்ன மாற்றம் நடந்தாலும், காலம் காலமாக நான் மட்டுமல்ல, என்னைப் போல் உள்ள லட்சோபலட்சம் தொண்டர்களின் குடும்பங்களும் இரட்டை இலையைத் தவிர வேறு கட்சி சின்னத்துக்கு ஓட்டுப் போட்டதில்லை.

Advertisment

எம்.ஜி.ஆர்., மறைவுக்குப் பின், திக்குத் தெரியாமல் கட்சி போய்விடுமோ என்று அச்சப்பட்டோம். ஆனால், ஆபத்பாந்தவனாக வந்து நின்னாங்க ஜெயலலிதா. இயக்கம் பிளவுபட்டது. ஆனாலும், பிளவுபட்ட இயக்கம், பின்னாளில் இணைந்தது. அப்போது ஆனந்தக் கூத்தாடி அகமகிழ்ந்த தொண்டர்களில் நானும் ஒருவன். ஜெயலலிதாவுக்குப் பிறகு, இந்த இயக்கம் சுயநலக் கும்பலின் கரங்களுக்குச் சென்றது. அதை, மீட்டெடுப்பதற்கு, இன்னொரு ஆபத்பாந்தவனை ஜெயலலிதா ஆன்மா அனுப்பாதா? என்று ஏங்கிக் கிடந்த ஒன்றரைக் கோடித் தொண்டர்களில் நானும் ஒருவன்.

மீட்கப்பட்டது; முறியடிக்கப்பட்டது!

முதலில் சுயநலக் கும்பலுக்கு, பன்னீர்செல்வம், பழனிச்சாமி ஆகிய நீங்கள் இருவரும் அடிபணிந்தீர்கள். இருந்தாலும், சிறிது காலத்திலேயே, அடிமைப் பெண் எம்.ஜி.ஆரைப் போல நிமிர்ந்து நின்று, சசிகலா கும்பலிடம் இருந்து இந்த இயக்கத்தை மீட்டு விட்டீர்கள். சாதாரணத் தொண்டர்களாக இருந்து, கட்சியில், படிப்படியாக வளர்ந்தவர்கள்தான் நீங்கள் இருவரும். எடப்பாடி பழனிச்சாமி முதல்வர்; ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்வர். கட்சியில் இருவருக்கும் முக்கிய பொறுப்புகள்; கட்சியை வழி நடத்தும் பொறுப்புகள். இந்த நிலை உருவானதும், நாங்களே பதவிக்கு வந்து விட்டது போன்ற உணர்வில் மகிழ்ந்தோம். அ.தி.மு.க. என்னும் ஆலமர கட்சியில் மட்டும்தான், சாதாரண தொண்டனும் உயர் பொறுப்புகளுக்கு வர முடியும் என்பதை, மீண்டும் ஒரு முறை தாங்கள் இருவரும் ஒருங்கிணைப்பாளர்; இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பொறுப்புக்கு வந்து நிரூபித்துவிட்டீர்கள்.

Advertisment

admk

இருந்த போதும், இந்த இயக்கத்தை எப்படியாவது அழித்து விட வேண்டும் என்று, துரத்தியடிக்கப்பட்ட சசிகலா கும்பல், பண பலத்தாலும், குறுக்கு எண்ணத்தாலும், தொடர்ந்து முயற்சித்தது. இருந்தாலும், தங்கள் இருவரின் சாதுர்யத்தாலும், எங்களைப் போன்ற லட்சோபலட்சம் தொண்டர்களின் பலத்தாலும், அவையெல்லாம் முறியடிக்கப்பட்டன.

இந்தச் சமயத்தில்தான், கட்சிக்கு சோதனை வைப்பது போல, லோக்சபா தேர்தல் வந்தது. நம்மை வீழ்த்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு, சசிகலா கும்பல், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற பெயரில், ஜெயலலிதாவின் படத்தையும், பெயரையும் பயன்படுத்தி, தேர்தல் களத்தைச் சந்தித்தது.

தோற்றாலும் ஆறுதல் அடைந்தோம்!

குறிப்பிட்ட இன மக்களை மட்டுமே நம்பி நின்ற சசிகலா கும்பல், அவர்களை வைத்து எப்படியும் கரையேறிவிடுவோம் என நம்பினர். அந்தக் குறிப்பிட்ட இனம் அதிகமாக இருக்கும் சில பகுதிகளில் மட்டுமே, குறிப்பிட்டுச் சொல்லும்படியான ஓட்டுக்களை அவர்கள் பெற்றனரே தவிர, அவர்களால், களத்தில் இரட்டை இலையை வீழ்த்தி வெற்றி பெற முடியவில்லை.

இதற்குக் காரணம், அ.தி.மு.க.,வின் ஆணி வேராக இருக்கும் அடிமட்டத் தொண்டர்கள் அத்தனை பேரும், அ.தி.மு.க.,வை காப்பாற்ற ஓட்டளித்ததுதான். ஆனாலும், வெற்றி விளிம்புக்கு இரட்டை இலையால் செல்ல முடியவில்லை; அது தான் வேதனை. பூலாவரி சுகுமாரன், வத்தலக்குண்டு ஆறுமுகம், அண்ணாமலைப் பல்கலைக் கழக மாணவர் உதயகுமார் போன்றோரின் குருதியில் பூத்த மலர்தான் அ.தி.மு.க. இந்த இயக்கத்தை அழிக்க, சுயநலக் கும்பலான சசிகலா கும்பலால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்பதே, மாபெரும் வெற்றிதான். இப்படிச் சொல்வதைவிட, பெரும் ஆறுதல் என்று கூறமுடியும்.

தோல்வியின் போதெல்லாம் ஜெயலலிதா!

இந்தத் தேர்தல் தோல்விக்குப் பின், நாம் முழுமையான சுய பரிசோதனை மேற்கொள்ளத் தயாராகி இருக்க வேண்டும். அதைச் செய்யாமல் இருப்பதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். அதெல்லாவற்றையும் புறம் தள்ளி வைத்து விட்டு, அதைத்தான் நாம் செய்திருக்க வேண்டும்.

jayalalithaa

இப்படித்தான், கடந்த காலங்களில் நடந்துள்ளது. கட்சிக்கு தேர்தல் களத்தில் தோல்வி என்ற சோதனை வரும்போதெல்லாம், இதுதான் நடந்திருக்கிறது. 1996-ல், மிக மோசமான தோல்வியை அ.தி.மு.க., சந்தித்தது. அப்போது, கட்சியின் பொதுச் செயலாளராக இருந்தவர் ஜெயலலிதா. தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருந்த கட்சி, படு தோல்வியைச் சந்தித்தது. அவர் சற்றும் தாமதிக்கவில்லை. தோல்விக்கான காரணங்களை ஆய்வு செய்யத் துவங்கினார். கட்சியின் ஒவ்வொரு மாவட்ட நிர்வாகியையும் சென்னைக்கு வரவழைத்து, தனித்தனியாகக் கேட்டறிந்தார். சென்னை, வட பழனி, விஜய சேஷ மகாலில்தான், இந்த ஆய்வுக் கூட்டம் நடந்தது.

அதோடு அவர் நிறுத்தவில்லை. கட்சியின் மூத்த தலைவராக இருந்த கே.ஏ.கிருஷ்ணசாமியை, தமிழகம் முழுக்க சுற்றுப் பயணம் செய்து, தொண்டர்களைச் சந்தித்துப் பேசச் சொன்னார். தொண்டர்களின் உணர்வுகளை அறிந்து வந்து, தோல்விக்கான காரணங்களைச் சொன்னார் கிருஷ்ணசாமி. வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு சசிகலா கும்பல்நடத்திய ஆடம்பரத் திருமணமும், அந்தக் கும்பல் தமிழகம் முழுவதும் ஆட்சி அதிகாரத்தைக் கையில் எடுத்துக் கொண்டு போட்ட ஆட்டமும்தான் தோல்விக்கான காரணம் என, வெளிப்படையாக ஜெயலலிதாவிடம் எடுத்துச் சொன்னார். தொண்டர்களின் உணர்வுகளை ஜெயலலிதாவும் அறிந்து கொண்டார். பின், 1999-ல் லோக்சபா தேர்தல் வந்தது. அப்போதும் கட்சிக்குப் பெரும் பின்னடைவுதான். இம்முறையும், தோல்விக்கான காரணத்தை அறிய முயன்றார் ஜெயலலிதா. சென்னை, கிண்டி, டான்சி வளாகத்தில் வைத்து கட்சிக்காரர்களைச் சந்தித்தார். தொகுதிவாரியாக தோல்விக்கான காரணங்கள் அலசப்பட்டன. கழக நிர்வாகிகளிடம் நேரடியாகவே கேட்டறிந்தார் ஜெயலலிதா.

அடுத்த பகுதி:

ஜெயலலிதா இல்லியே! யாரும் இல்லியே! -அதிமுக ஸ்கேன் ரிப்போர்ட்! பகுதி 2