பேனாவை பொருளாக பயன்படுத்திய அன்றைய கவிஞர்கள் மத்தியில், பேனாவை சமூக அநீதியை கிழிக்கும் கத்தியாக பயன்படுத்தியவர் மக்கள் கவிஞர் இன்குலாப். இந்தி எதிர்ப்பு போராட்டம் உருவாக்கிய கூர்மையான பேனாமுனை கவிஞர் இன்குலாப். 1944ம் ஆண்டு, கீழக்கரையில் பிறந்த இன்குலாப்பின் இயற்பெயர் செ.கா.சீ. சாகுல் அமீது. மதுரை தியாகராஜன் கல்லூரியில் இளங்கலை படித்து, சென்னை புதுக்கல்லூரியில் பணிபுரிந்தார். இந்தி எதிர்ப்பு போரில் தன் நண்பர்களுடன் இணைந்து போராடியவர். தொடக்கத்தில் திமுக ஆதரவாளராக இருந்தாலும், கீழ்வெண்மணி கொடுமைக்கு பிறகு மார்க்சிய சித்தாந்தத்தில் தீவிரமாக இயங்கினார். கடைசிவரை கடவுள் மறுப்பாளராக, பகுத்தறிவுவாளராகவே வாழ்ந்தார்.
நம்மால் வலிகளைக்கூட தாங்கிக்கொள்ள முடியும், ஆனால் வலிக்குமோ என்ற அச்சத்தைதான் தாங்க முடியாது, குரல்கொடுக்காதவர்களெல்லாம் அநீதிக்கு துணை போகிறவர்கள் அல்ல, அவர்கள் அச்சமுடையவர்கள், மக்களுக்குளுள்ள அச்ச உணர்வுதான் அவர்கள் போராடுவதைத் தடுக்கிறது என்று கூறுவார். இவர் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாகவும் இருந்தார். விடுதலை புலிகள் பிரபாகரனை நேரில் சந்தித்து வந்தவர்களில் இவரும் ஒருவர். இறுதி ஈழப்போரில் நடந்த இன அழிப்பைக் கண்டித்து, தமிழக அரசு தனக்களித்த கலைமாமணி விருதையும், ஒரு இலட்சம் ரொக்கத்தையும் திருப்பி அளித்தார். அடிப்படையிலேயே விருதுகளை விரும்பாத அவர், அதன்பிறகு அவர் எந்த விருதுகளையும் ஏற்கவில்லை. அவர் இறந்தபோது அவருக்கு அளித்த சாகித்திய அகாடமி விருதையும் அவரது குடும்பத்தினர் ஏற்க மறுத்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அவரின் கவிதைகளில் சில,
எழுதியதெல்லாம்
மொழிபெயர்ப்புத்தான்.
இளைஞர் விழிகளில்
எரியும் சுடர்களையும்,
போராடுவோரின்
நெற்றிச் சுழிப்புகளையும்
இதுவரை கவிதையென்று
மொழிபெயர்த்திருக்கிறேன்!
உயிர்ப்பின் முதல்
நொடியை
உணர முயல்கிறேன்
மீண்டும்
பொருளில் உணர்வு
தோன்றிய கணம்
ஓடுவரா முட்டையின் முதல்
அசைவு
வித்தின் மண்தேடும்
ஆதி விழைவு
நரைத்து ஒரு முடி உதிர்ந்த
சமயம்
உணர்ந்தேன்
அது
என் மறதியின்
முதல் நொடி
உழைப்பவர் மேனியை உயிரோடு கொளுத்தி
வெந்த சாம்பலைப் பூசிய தெய்வங்கள்
சாம்பல் மேட்டில் சாம்பலாய்க் குவிய…
ராஜமகேந்திர சதுர்வேதி மங்கலம்
யாக குண்டம் போல எரிகிறது.
சில்லென்று நெருஞ்சிக் காடே!
சிரிக்காதே:
உன் மீது
கால்கள் அல்ல -
களைக் கொத்திகளே இனி நடக்கும்…
எங்களைப்
பிறாண்டிச் சிவந்த உன் நகங்களை நீட்டாதே
ஏனெனில் வெட்டப்படுவது இனிமேல்
நகங்களல்ல
விரல்கள்.
போர்விமானம் எம் தலைக்கு மேலெனில்
புகையும் எங்கள் துப்பாக்கி
போர்க்கப்பல் எம் அலைக்கு மேலெனில்
கடலே எதிரிக்குச் சமாதி -இதை
ஏழுகடல்களும் பாடட்டும்……
சமயம் கடந்து மானுடம் கூடும்
சுவரில்லாத சமவெளிதோரும்
குறிகளில்லாத முகங்களில் விழிப்பேன்
மனிதம் என்றொரு பாடலை இசைப்பேன்
மனுசங்கடா நாங்க மனுசங்கடா
உன்னப் போல அவனப் போல எட்டுச்சாணு ஒசரமுள்ள
மனுசங்கடா நாங்க மனுசங்கடா
எங்களோட மானம் என்ன தெருவில கிடக்கா - உங்க
இழுப்புக்கெல்லாம் பணியுறதே எங்களின் கணக்கா
உங்களோட முதுகுக்கெல்லாம் இரும்புல தோலா
நாங்க ஊடு புகுந்தா உங்க மானம் கிழிஞ்சு போகாதா
உங்க தலைவன் பொறந்த நாளு போஸ்டர் ஒட்டவும்
உங்க ஊர்வலத்துல தர்ம அடிய வாங்கிக் கட்டவும் - அட
எங்க முதுகு நீங்க ஏறும் ஏணியாகவும் - நாங்க
இருந்தபடியே இருக்கணுமா காலம் பூராவும்
குளப்பாடி கிணத்து தண்ணி புள்ளய சுட்டது
தண்ணியும் தீயாச் சுட்டது - இந்த
ஆண்டைகளின் சட்டம் எந்த மிராசைத் தொட்டது
சதையும் எலும்பும் நீங்க வச்ச தீயில் வேகுது - உங்க
சர்க்காரும் கோர்ட்டும் அதுல எண்ணய ஊத்துது
எதை எதையோ சலுகையின்னு அறிவிக்கிறீங்க நாங்க
எரியும்போது எவன் மசுரப் புடுங்கப் போனீங்க - டேய்
மனுசங்கடா நாங்க மனுசங்கடா
உன்னப் போல அவனப் போல எட்டுச்சாணு ஒசரமுள்ள
மனுசங்கடா நாங்க மனுசங்கடா!
கடைசிவரை தனது கொள்கையில் மாற்றம் கொண்டிராத அவர், சமூக அநீதிகளுக்கு எதிராக தனது படைப்புகளை படைத்தார். இன்று அவரது மறைந்த நாள். அவர்தான் மறைந்தாரே தவிர, அவரது நினைவும், அவரது படைப்புகளும் மறையவில்லை. அதற்கு ஒரு எடுத்துக்காட்டு இன்றுவரை சமூக அநீதிகளுக்கு எதிராக நடக்கும் போராட்டங்களிலெல்லாம் ஒலிக்கும் மனுசங்கடா நாங்க மனுசங்கடா பாடல்...