மக்கள் நீதி மய்யம் தேர்தலுக்கான வேலை, விருப்பமனு, நேர்காணல், இறுதிப் பட்டியல் என மும்முரமாக இருக்கும் வேளையில் நேற்று மாலை கடலூர் மற்றும் நாகப்பட்டினம் பொறுப்பாளர் குமரவேல் கட்சியிலிருந்து விலகினார். அதைத்தொடர்ந்து நக்கீரனுக்கு அவர் அளித்த பேட்டி.
கட்சியில் இணையும்போது என்ன எதிர்பார்த்து இணைந்தீர்கள்?
தமிழ்நாடு இரண்டு கட்சிகளிடம் மாட்டி முழித்துக்கொண்டிருந்தது. ஒரு வெற்றிடம் இருந்தது. தமிழ்நாடு புது அரசியலுக்கும், இளைஞர்கள் மாற்று அரசியலுக்கும் விரும்பினோம். 1980களில் யாராவது லஞ்சம் வாங்கினவர்கள் என்று தெரிந்தாலே, அவர்கள் தலை குனிந்து செல்வார்கள். 2019ல் யாராவது லஞ்சம் வாங்கவில்லையென்றால் அவர்களை வீட்டில் சேர்க்க மாட்டார்கள். இந்த மாதிரியான நிலைக்கு நாம் ஆளாகிவிட்டோம். நமக்கே தெரியாமல் நாம் அனைவரும் கரெப்ட் ஆகிவிட்டோம். இதில் இந்த இரண்டு கட்சிகளுக்கும் முக்கிய பங்கிருக்கிறது. அது மாறவேண்டுமென்றால் மாற்று அரசியல் வேண்டும். யார் அந்தப் பூனைக்கு மணி கட்டுவார்கள் என்று பார்க்கும்போதுதான் கமல் சார் வரேன்னு சொன்னாரு. இத்தனை நாட்களாக நடிகராக பார்த்தவர், சமூக அடையாளமாக வந்தது, அவரின் பேட்டிகள், கட்டுரைகள் இதையெல்லாம் பார்த்தது, ஜெயலலிதா இருக்கும்போது எல்லாரும் பயந்துகொண்டிருந்தபோது சமூக ஊடகத்திலும், மற்றவையிலும் பேசினார். இவையெல்லாம் பிடித்திருந்தது. அவர் வரும்போது, அவர் தலைமையிலான மாற்று அரசியல் வரும் என எதிர்பார்த்து சேர்ந்தேன்.
கட்சிக்குள் புதியவர்கள் வந்தவுடன் கட்சியின் பாதை மாறிவிட்டது எனக் கூறியிருந்தீர்கள், யார் வந்தவுடன் அதை நீங்கள் உணர்ந்தீர்கள்..
டாக்டர் மகேந்திரன் பொள்ளாச்சியிலிருந்து வந்தார். வந்த முதல் நாளிலேயே துணைத் தலைவர் ஆகிவிட்டார், எனக்கு தெரிந்து அவர் இன்னும் இந்திய துணைத்தலைவர்தான் ஆகவில்லை. எனக்கு தெரிந்து யாரும் இப்படி ஆனதில்லை, இப்படியொரு கட்சியில். அதற்குமுன் பத்து மாதமாக படிப்படியாக கட்சியை வளர்த்து, ஒரே நாளில் இவர் வந்து இழுத்துக்கொண்டு சென்றால் எப்படி இருக்கும். அதேபோல்தான் கோவை சரளாவும், எட்டு நாளைக்கு முன்வந்து, நேர்காணலில் உட்காந்திருக்கிறார்.
அதற்கு என்ன காரணம்...
அவர் புதுமை விரும்பியாய் இருப்பார். புது ஆள், புது ஐடியா அது சில இடங்களில் அது நல்லதாகக்கூட இருக்கும். புது ஐடியா தேடும்போது அது நல்லதாக இருக்கும், புது ஆள் தேடும்போது, பழைய ஆட்களையும் சேர்த்து அழைத்துக்கொண்டு போகவேண்டும். அது முடியவில்லையென்றால் இதுபோல் நடக்கும்.
ஒரு வருடம், இரண்டு மாதம் கட்சியில் இருக்கும் என்னிடம் கமல் சார் நம்பர்கூட இல்லை என கூறியிருந்தீர்கள். யார் தடுக்கிறார்கள் என நீங்கள் நினைக்கிறீர்கள்.
மரியாதை என்பது கேட்டு பெறுவதில்லை, அவர்களாகவே கொடுக்க வேண்டும். அவருக்கே தெரியும் பாதி பேரிடம்தான் இருக்கிறது, பாதி பேரிடம் இல்லையென்று. அவருக்கு வேண்டும் என்பவர்களுக்கெல்லாம் கொடுக்கிறார். எங்களை ஒரு நாள் கூட ஃபோனில் தொடர்பு கொண்டதில்லை.
கட்சியில் இணையும்போது என்ன சொன்னார், இப்போது வெளியில் செல்கிறேன் என்றபோது என்ன சொன்னார்.
கட்சியைவிட்டு வெளியேறுகிறேன் எனக் கூறியபோது அவர் கூப்பிட்டுக்கூட பேசவில்லை. பொதுச்செயலாளர்தான் பேசினார். நீங்கள் போகக்கூடாது, நீங்கள் நல்லவர் என்றார்கள். நான் கட்சியை விட்டு செல்ல எனக்கு ஒரு சரியான காரணம் உள்ளது. மக்கள் நீதி மய்யத்திற்கோ, கமல்ஹாசனுக்கோ நான் விசுவாசி கிடையாது, அவருடைய நேர்மை, அவருடைய குறிக்கோளுக்குதான் நான் விசுவாசி. அந்த குறிக்கோளே சென்றடையாதபோது, அதைவிட்டு வேறு பாதைக்கு செல்லும்போது, நான் அதைவிட்டு விலக வேண்டிய கட்டாயம் வருகிறது.
கட்சியில் சேரும்போது, அப்போது கட்சியும் புதிது, கட்சியில் சேருபவர்களும் புதிது, அவரும் புதிது. கட்சியில் யார் வந்தாலும் சேர்த்துக்கொண்டார்கள், அவர்களை நன்றாகதான் நடத்தினார்கள். கட்சி குறித்து எல்லோரும் இணைந்து பேசுவோம். எங்கள் யாருக்கும் அரசியல் பின்புலம் கிடையாது. அதனால் அவர்களுக்கு புரிந்தவகையில் நடந்தோம். அதற்குபின் மாறிவிட்டது.
நேர்காணலுக்கு சென்றேன் எனக்கூறியிருந்தீர்கள், அங்கு உங்களுக்கு அந்நியமாக பட்டது எது.
கோவை சரளா இருந்தது மட்டும்தான் அந்நியமாக இருந்தது. வேறு இருவரும் உட்கார்ந்திருந்தார்கள், அவர்கள் இருவரும் வல்லுநர்கள், மதன் சாரும், ராவ் சாரும் உட்கார்ந்திருந்தது ரொம்ப நல்லதாகவே தெரிந்தது. இவுங்க உட்கார்ந்திருந்ததுதான் ‘என்னடா இவுங்க இங்கே’ என்று இருந்தது.
சினிமாவிலும், அரசியலிலும் ஒரே நேரத்தில் பயணிக்கிறார் என்று கூறியிருந்தீர்கள். அது எந்த விதத்தில் குறையாக இருந்தது.
முக்கியமான நேரத்தில் அரசியலா, சூட்டிங்கா என வரும்போது அவர் சூட்டிங்கைத்தானே கவனிப்பார். அது பிக்பாஸாக இருக்கலாம், விஸ்வரூபமாக இருக்கலாம். இந்தியன் படம் இப்போது தள்ளிப்போய்விட்டது. இல்லையென்றால் அதற்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பாரா அல்லது நாடாளுமன்ற தேர்தலுக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பாரா எனத் தெரியவில்லை.
கட்சிதான் எனக்கு முக்கியம் எனக் கூறுகிறாரே கமல்.
கண்டிப்பாக அவர் கட்சிக்குதான் முக்கியத்துவம் கொடுப்பார். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அது போதாது. மக்கள் நீதி மய்யம் ஒரு சின்னக் குழந்தை அதை பதினெட்டு மணிநேரம் பார்த்துக்கொள்ளக்கூடாது, 24 மணிநேரமும் பார்த்துக்கொள்ள வேண்டும். நடந்து, ஓட ஆரம்பித்தவுடன் அதன்பின் ஆறு மணிநேரம் மட்டும் கூட பார்த்துக்கொள்ளலாம்.