கு.ப.கிருஷ்ணன் ஶ்ரீரங்கம் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவர் எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்து அரசியலில் உள்ளவர். திருச்சியை சுற்றி உள்ள மாவட்டங்களில் பெரும்பான்மையாக இருக்கும் ஒரு சமூகத்தை சேர்ந்தவர். அந்த சமூகத்தில் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த முக்கிய நபராக இருக்கிறார்.
திருச்சியில் தற்போது இந்த சமூகத்தில் இருக்கும் அதிமுக முக்கிய பிரபலங்கள் பரஞ்சோதி, கே.கே.பாலசுப்ரமணியன், வளர்மதி, அண்ணாவி, லால்குடி. எஸ்.எம்.பாலன், சிவபதி, பிரின்ஸ்தங்கவேல், செல்வராஜ், பரமேஸ்வரி என பெரிய பட்டியலே உள்ளது. அதிமுகவை பொறுத்தவரையில் இவர்கள் அனைவருக்குமே ஜெ. பல முறை வாய்ப்பு கொடுத்திருக்கிறார். ஆனாலும் ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கி தங்களுடைய பதவியை இழந்திக்கிறார்கள். இவர்கள் அனைவருமே கு.ப.கிருஷ்ணனிடம் அரசியல் பாடம் கற்றுக்கொண்டவர்கள் என்பதும் குறிப்பிடதக்கது. ஜெயலலிதா, அதிமுக சீனியரும் ஒருங்கிணைந்த மா.செ.வாகவும் இருந்த ரத்தினவேலை அதிமுக புறநகர் மா.செ.வாக நியமித்தார்.
ஜெ.வினால் நேரடியாக ஒரங்கட்டப்பட்ட என்.ஆர்.சிவபதி, சில காலம் அமைதியாக இருந்து விட்டு எடப்பாடி பழனிசாமி வந்தவுடன் அவரும் நானும் மாமா, மாப்பிள்ளை என பேசிக்கொள்ளும் பழக்கம் என பெருமையாக பேசிக்கொண்டு கரோனா காலத்திலும் வீட்டை விட்டு வெளியே வராமல் அடுத்த மா.செ. நான்தான் என புறநகர் அதிமுக அரசியலை அவ்வப்போது குழப்பிக்கொண்டு இருக்கிறார். இதனாலயே புறநகர் நகர் பகுதியில் அவ்வப்போது சில கோஷ்டி சிக்கல் ஏற்பட்டாலும் மா.செ. ரத்தினவேல் பழைய அனுபவத்தின் துணையோடு சாதி அரசியலில் சிக்காமல் சிக்கலை சமாளித்து வருகிறார்.
எம்.பி. தேர்தலுக்கு முன்பு அதிமுகவில் உள்ள அந்த சமூகத்தை சேர்ந்த பிரமுகர்களும், அமைச்சர் வளர்மதி தலைமையில் ஒருங்கிணைந்து எங்கள் சமூகத்திற்கு முக்கிய பொறுப்பு வேண்டும் என கோரிக்கை வைத்தார். ஆனால் முதல்வர் எடப்பாடி பழனிசாமியோ உங்களில் ஒருவரை நீங்களே தேர்ந்தெடுங்கள் என்று சொல்ல, அந்த ஒருவர் யார் என்பது தற்போதுவரை குழப்பம் நீடித்துக்கொண்டே இருக்கிறது.
இந்த நேரத்தில் திருச்சி மாநகர அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் திமுக கே.என்.நேருவுக்கு எதிராக அரசியல் செய்வதில் தடுமாற்றம் கொண்டிருப்பதால்தான் எடப்பாடி பழனிசாமியின் கண் அசைவிலுள்ள முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் காந்தி மார்கெட் – கள்ளிக்குடி மார்கெட், அரசியலை கையில் எடுத்திருக்கிறார் என்கிறார்கள் அதிமுக கட்சியின் உயர் மட்டத்தில் உள்ள தலைவர்கள்.