Skip to main content

பா.ஜ.க.வின் ஸ்லீப்பர் செல்லாக சபாநாயகர்! கர்நாடகா அரசியலில் பரபரப்பு! 

Published on 01/08/2019 | Edited on 01/08/2019

கர்நாடகாவில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சியை அமைத்து, பெரும்பான்மையையும் சாதுர்யமாக நிரூபித்திருக்கிறார் முதல்வர் எடியூரப்பா. இது தேசிய அளவில் விவாதப்பொருளாகி, "கட்சித் தாவல் தடைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும்' என்கிற குரல்கள் வலிமையடைந்து வருகின்றன. குமாரசாமி தலைமையில் நடந்த கூட்டணி அரசிலிருந்து பா.ஜ.க.வின் வலையில் விழுந்த காங்கிரஸ் மற்றும் ம.ஜ.த. எம்.எல்.ஏ.க்கள் 17 பேர், தங்களது பதவியை ராஜினாமா செய்து சபாநாயகர் ரமேஷ்குமாருக்கு கடிதம் அனுப்பி அதில் உறுதியாக இருந்தார்கள். அவர்களது ராஜினாமாவை ஏற்க மறுத்தார் சபாநாயகர். எனினும், பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் குமாரசாமி அரசு கவிழ்ந்தது. எடியூரப்பாவுக்கு கவர்னர் வஜுபாய்வாலா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அமைச்சரவை பதவி ஏற்காத நிலையில், ஜூலை 29 அன்று பேரவையில் பெரும்பான்மையை எடியூரப்பா நிரூபிக்க, வாக்கெடுப்பு முடிந்ததும், சபாநாயகர் ரமேஷ்குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

 

bjp



அதற்கு ஓரிருநாள் முன்னதாக, குமாரசாமி ஆட்சி கவிழ காரணமாக இருந்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்களில் 3 பேரை கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதிநீக்கம் செய்த சபாநாயகர், மீதமிருந்த 14 பேரின் பதவியையும் கடந்த ஞாயிற்றுகிழமை பறித்தார். இதனால், "பா.ஜ.க.வின் மிரட்டலுக்கு சபாநாயகர் பணிந்துவிட்டார், பா.ஜ.க.வின் ஸ்லீப்பர் செல்லாக செயல்பட்டார்' என கர்நாடக அரசியலில் பரபரப்பு கிளம்பியது. இதனை மறுத்த, சபாநாயகர் ரமேஷ்குமார், "அரசியலமைப்பு சட்டத்தின்படி 17 பேரின் ராஜினாமாவை ஆய்வு செய்ததில், கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டியவர்களாக இருந்தார்கள். அதனால் சட்டத்தின்படி நடவடிக்கை எடுத்திருக்கிறேன். இவர்கள் தற்போதைய ஆட்சியின் காலம் முடியும்வரை (2023, மே மாதம் வரை) தேர்தலில் போட்டியிட முடியாது'' என அழுத்தமாகத் தெரிவித்தார்.

 

congress



17 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்ட நிலையில், சட்டசபையின் பலம் 207 ஆக குறைந்தது. இதன்படி பெரும்பான்மைக்கு 104 எம்.எல்.ஏ.க்கள் போதுமானது. அந்த வகையில் பா.ஜ.க.வின் 105 உறுப்பினர்களும் சுயேட்சை உறுப்பினர் ஒருவரும் என 106 எம்.எல்.ஏ.க்களுடன் பெரும்பான்மையை நிரூபித்திருக்கிறார் எடியூரப்பா. இந்த நிலையில்தான் கட்சித்தாவல் தடை சட்டத்தின் மீது சர்ச்சைகள் எழுந்துள்ளன. இச்சட்டம் குறித்து பல ஆய்வுகளை நடத்தியிருக்கும் பத்திரிகையாளரும் வழக்கறிஞருமான காசிநாதன், "கட்சித்தாவல் தடைச்சட்டத்தின்படி தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள், "மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு ஜெயிக்கும்வரை அமைச்சர் பதவி ஏற்க முடியாது' என கட்சித்தாவல் தடை சட்டத்தில் சொல்லப்பட்டுள்ளதே தவிர, அந்த ஆட்சியின் ஆயுள் காலம்வரை தேர்தலில் போட்டியிட முடியாது என எங்கும் சொல்லவில்லை. அப்படியிருக்கும் நிலையில்... ’"ஆட்சியின் காலம் முடியும்வரை அவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது'’என கர்நாடக சபாநாயகர் சொல்லியிருப்பது சர்ச்சைகளை ஏற்படுத்தும்''‘என்கிறார்.

 

mjk



தமிழகத்தில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரை சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்த விவகாரத்தில் அவர்களை இடைத்தேர்தலிலும் நாடாளுமன்றத் தேர்தலிலும் போட்டியிட அனுமதித்திருக்கிறது தேர்தல் ஆணையம். அப்படியிருக்கும் நிலையில், "ஆட்சிக் காலம் முடியும்வரை தேர்தலில் போட்டியிட முடியாது' என கர்நாடக சபாநாயகரின் உத்தரவு, பல்வேறு கோணங்களில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதுகுறித்து காங்கிரஸின் மூத்த வழக்கறிஞர் ராஜசேகர் நம்மிடம், "தமிழகத்தில் 18 எம்.எல்.ஏ.க்களையும் தகுதிநீக்கம் செய்த சபாநாயகர் தனபால், அவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது என சொல்லவில்லை. காரணம், தகுதிநீக்கம் செய்யப்பட்டவர்கள் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி தேர்தலில் போட்டியிட தடை இல்லை என்பதால்தான் தகுதி நீக்கம் செய்ததைத் தாண்டி வேறு எந்த உத்தரவையும் அவர் பிறப்பிக்கவில்லை. தேர்தல் ஆணையமும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி அவர்களை தேர்தலில் போட்டியிட அனுமதித்தது. இப்படிப்பட்ட நிலையில், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் ஷரத்துகளை அறிந்துள்ள கர்நாடக சபாநாயகர், "போட்டியிட முடியாது' என சொல்லியிருப்பது புதிய அத்தியாயத் தையும் பல கேள்விகளையும் உருவாக்கியிருக்கிறது.

இதற்கிடையே, பாதிக்கப்பட்ட கர்நாடக எம்.எல்.ஏ.க்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், "சபாநாயகரின் இந்த உத்தரவு செல்லுமா? செல்லாதா?' என்கிற சர்ச்சை எழுந்துள்ளது. ’"சபாநாயகரின் அதிகாரத்தில் நாங்கள் தலையிட முடியாது. அவர் சுதந்திரமாக முடிவெடுக்கலாம்'’என ஏற்கனவே உச்சநீதிமன்றம் தெரிவித்திருப்பதால், சபாநாயகரின் இந்த உத்தரவு வலிமையடையலாம். அதேசமயம், கட்சித்தாவல் தடைச் சட்டம் மாநிலத் துக்கு மாநிலம் வெவ்வேறு கோணங்களில் பயன் படுத்தப்படுவதால் இச் சட்டத்தின் நோக்கம் நிறைவேறுவதில்லை. தகுதி நீக்கம் செய்யப் பட்டவர்களை தேர்தலில் போட்டியிட தேர்தல் ஆணையம் அனுமதிப்பதால் கட்சித் தாவல் தடைச் சட்டமே பயனற்றதாகிறது. கட்சி தாவும் எம்.எல்.ஏ.க் களை தண்டிக்க, கட்சித் தாவல் தடைச் சட்டத்தை யும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தையும் ஒன்றுக் கொன்று முரண்பாடு இல்லாமல் திருத்தி அமைக்க வேண்டும். அப்போதுதான் எம்.எல்.ஏ.க்கள் தங்களது கட்சிக்கு துரோகம் செய்யாமல் இருப்பார்கள். ஜன நாயகம் காப்பற்றப்படுவதுடன் ஆட்சி கவிழ்ப்பும் நடக்காமல் இருக்கும்'' என்கிறார் அழுத்தமாக.