இத்தனை வருடங்கள் என்னை நம்பியிருக்கும் ரசிகர்களை ஏமாற்றமாட்டேன். சட்டமன்றத் தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்கத் தயாராக இருக்கிறேன், கட்சிப் பெயரையும் அப்போது அறிவிக்கிறேன்.''ஏப்.18-ஆம் தேதி ஓட்டுப் போட்டுவிட்டு ஏப்ரல் 19-ல், இப்படி ஒரு அதிரடி அறிவிப்பையும் வெளியிட்டு விட்டு, "தர்பார்'’ஷூட்டிங்கிற்காக மும்பை பறந்துவிட்டார் ரஜினி. தனது தம்பி ரஜினியின் அரசியல் பயணம் வெற்றி பெறுவதற்காக, தமிழகத்தில் இருக்கும் முக்கிய கோவில்களுக்குச் சென்று வழிபாடு நடத்தி வரும் அண்ணன் சத்தியநாராயண ராவ்வும் ரஜினி கண்டிப்பாக அரசியலுக்கு வருவார் என்பதை ஓங்கி அடித்துச் சொல்கிறார்.
மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை ஆரம்பித்து, ஒரு வருடம் கழித்து வந்த எம்.பி. தேர்தலில் வேட்பாளர்களை களமிறக்கிய கமல்ஹாசன் பல தொகுதிகளில் தடுமாறத்தான் செய்தார். இடைத்தேர்தல் நடைபெறும் 22 சட்டமன்றத் தொகுதிகளிலும் ம.நீ.ம. களமிறங்கியது. ஆனால் ரஜினியோ சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவித்ததும் கட்சிப் பெயரை அறிவிக்கிறேன் என்கிறார். இந்தளவுக்கு ரஜினி உறுதியாகவும் கறாராகவும் இருப்பதன் பின்னணி குறித்து ரஜினி ஏரியாவில் விசாரித்தோம்.
"கமல் கட்சிக்கு எந்தளவுக்கு வரவேற்பு இருக்கிறது என்பது மே.23-ஆம் தேதி தெரிந்துவிடும். அந்த ரிசல்டைப் பார்த்துவிட்டுத் தான் எங்கள் தலைவர் அடுத்த ஸ்டெப்பை வைப்பார். மேலும் டெல்லியில் ஏற்படும் ஆட்சி மாற்றத்தையும் உன்னிப்பாக கவனித்து, அதற்கேற்ப சில முடிவுகளை எடுப்பார். கமல் கட்சிக்கு மேல்தட்டு வர்க்கத்தில்தான் ஆதரவு உள்ளது. ஆனால் எங்களைப் பொறுத்தவரை அடித்தட்டு மக்களைக் கவரவேண்டும் என்பதுதான் முக்கியம். அதுதான் தேர்தல் களத்தில் சப்போர்ட்டாக இருக்கும். தேர்தல் கள வேலைகளில் முன்அனுபவம் உள்ளவர்கள் தன்னுடன் இருக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார் எங்கள் தலைவர். அதனால் மு.க.அழகிரி எங்கள் தலைவருடன் கரம் கோர்ப்பது நிச்சயம். மதுரையில் பிரம்மாண்டமான அரசியல் மாநாட்டை நடத்தும் அளவுக்கு அழகிரியுடன் பேசியிருக்கிறார் எங்கள் தலைவர்'' என்கிறது ரஜினிக்கு நெருக்கமான நட்பு வட்டம்.
மதுரையில் அழகிரி ஏரியாவில் நமது விசாரணையைத் தொடர்ந்த போதும் இதை உறுதிப்படுத்தினார்கள். "கலைஞர் உடல்நலம் சரியில்லாமல் காவேரி ஆஸ்பத்திரியில் இருந்த போது, நலன் விசாரிக்க வந்ததுடன்... தேடிப் போய் அண்ணன் அழகிரியைச் சந்தித்தார் ரஜினி. தலைவர் மறைந்த பின் கோபாலபுரத்திலும் ராஜாஜி ஹாலிலும் நடந்த விஷயங்கள் எல்லாம் உங்களுக்குத் தெரியும். இப்போது பி.எம்.மன்னனைத் தவிர, வேறு யாரும் அழகிரியுடன் இல்லை. தி.மு.க.வில் மீண்டும் சேர்வாரா அல்லது சேர்த்துக்கொள்வார்களா என்பதும் தெரியல. அதனால் விரக்தி மனநிலையில் இருக்கும் அழகிரிக்கு அடுத்த அடியாக துரை தயாநிதியின் சொத்துக்களை முடக்கும் நீதிமன்ற உத்தரவு வந்தது.
இப்படிப்பட்ட நெருக்கடியான நிலைமையை ரஜினியிடம் மனம்விட்டுப் பேசினார் அழகிரி. என்ன நடந்ததோ ஏது நடந்ததோ, சமீபத்தில் சென்னைக்குப் போய், அரசியல் ஏரியாவில் செல்வாக்குடன் இருக்கும் அந்த ஆடிட்டரை சந்தித்தார். ஏற்கனவே ஆளுங் கட்சியில் பிரிந்திருந்தவர்களை ஒட்டவைப்பதில் வெற்றி பெற்றிருக்கும் அந்த ஆடிட்டரோ, "எல்லாத்தையும் ரெகவர் பண்றதுக்கு நானாச்சு, ஒரே ஒரு கண்டிஷன். ரஜினி கட்சி ஆரம்பிக்கும் போது, அவருக்கு பக்கபலமா நீங்க இருங்க. மத்ததெல்லாம் தானா நடக்கும்'' என கொக்கியைப் போட்டுள்ளார். அழகிரியும் டபுள் ஓ.கே. சொல்லிவிட்டார். இப்போது கொடைக்கானலில் ஓய்வெடுக்கும் அழகிரியைத் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார் அந்த ஆடிட்டர். அதனால் ரஜினியுடன் அழகிரி கைகோர்ப்பார்'' என உறுதியாகச் சொல்கிறார் அழகிரி முகாமைச் சேர்ந்த ஒருவர்.
கடந்த வாரம் மதுரையில் நடந்த மங்கல நிகழ்ச்சி ஒன்றில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளிடம் பேசிய அழகிரியின் வலதுகரமான பி.எம்.மன்னன், “ஏம்பா எங்க அண்ணனும் உங்க தலைவரும் கூட்டுசேரப் போறாங்கப்பா''’என உற்சாகமாக பேசியிருக்கிறார். ஜூன் முதல் வாரம் வரை தர்பார் ஷூட்டிங்கிற்காக மும்பையில் இருக்கிறார் ரஜினி. அதனால் மே.23-க்குப் பிறகு, மும்பை சென்று ரஜினியை சந்திக்கும் ஐடியாவில் உள்ளாராம் அழகிரி. இதற்கிடையே ரஜினி மக்கள் மன்றத்தின் தலைமையில் நடந்த ஏகப்பட்ட குளறுபடிகளால், எல்லாப் பணிகளும் அப்படியே முடங்கிவிட்டதாம். மதுரை மாவட்ட ர.ம.ம.வின் மகளிரணி, இளைஞரணியைக் கலைத்துவிட்டு, புதிய நிர்வாகிகளை நியமிக்க ராகவேந்திரா மண்டபத்திலிருந்து உத்தரவு வந்துள்ளதாம். இப்படிப்பட்ட குளறுபடிகளை சரி செய்வதற்காக, கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு விலக்கி வைக்கப்பட்டிருந்த ராஜூ மகாலிங்கம் மீண்டும் ர.ம.ம.வில் எண்ட்ரியாகிறார். ஜூலை மாதத்தில் அனைத்து நிர்வாகிகளையும் ராகவேந்திரா மண்டபத்தில் சந்திக்கிறார் ரஜினி. அப்போது தெரியும் அவரின் அரசியல் மனநிலை.