தமிழக பா.ஜ.க மாநில செயற்குழு கூட்டம் இன்று காணொளி காட்சி மூலம் மாநில தலைவர் எல்.முருகன் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அகில பாரத தலைவர் ஜெ.பி.நட்டா சிறப்புரையாற்றினார். அப்போது, ''தேசிய மற்றும் தமிழக வளர்ச்சிக்கு தி.மு.க தடையாக இருக்கிறது. நாட்டின் நலனுக்காக உழைக்காதவர்களுக்கு, புகலிடமாக தி.மு.க உள்ளது. அவர்களுக்கு பதிலடி கொடுக்க நாம் விழிப்புடன் செயல்பட வேண்டும் என குறிப்பிட்டார் ஜெ.பி.நட்டா.
இதுதொடர்பாக நக்கீரன் இணையத்தளத்திடம் கருத்தினை பகிர்ந்துகொண்ட தி.மு.க.வின் மாநிலத் தகவல் தொழில்நுட்ப அணியின் துணைச் செயலாளர் எம்.எம்.அப்துல்லா, ''தமிழக நலனுக்கும் வளர்ச்சிக்கும், நாட்டின் நலனுக்கும் வளர்ச்சிக்கும் எதிராக தி.மு.க இருப்பதாக ஜெ.பி. நட்டா சொல்கிறார், அதே ஜெ.பி.நட்டா பொருளாதாரப் பட்டியலை எடுத்து, நாட்டின் வளர்ந்த மாநிலம் எது என்று அவர் பார்க்கட்டும். எந்த ஆட்சி இருந்த காலத்தில் தமிழ்நாடு வளர்ந்தது என்பதையும் அவர் பார்க்கட்டும். இதனைப் பார்த்தால் தமிழக வளர்ச்சிக்குக் காரணம் தி.மு.க என அவருக்குத் தெரிய வரும்.
இன்றைக்கு மிக அதிக அளவில் ஜி.எஸ்.டி கொடுக்கக்கூடிய மாநிலமாக, மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக தமிழ்நாடுதான் உள்ளது. மத்திய அரசுக்கு ஜி.எஸ்.டி வருவாய் அதிகம் கிடைக்கக்கூடிய மாநிலமும் தமிழகம்தான்.
இந்தியாவின் பல பகுதிகளில் தொழிற்சாலைகள் இருந்தால்கூட, மும்பை வணிக தலைநகரம் என்பதால் அந்தத் தொழிற்சாலைகளின் தலைமையகம் மும்பையில் இருக்கும். உதாரணமாக ரிலையன்ஸ் கம்பெனிகள் குஜராத்தில் இருக்கும், ஆனால் அவர்களுடைய தலைமையகம் மும்பையில் இருக்கும். அதனால் அவர்கள் காட்டும் பொருளாதார கணக்குகள் மகாராஷ்டிராவில் வரும்.
ஆனால் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அப்படியில்லை. இங்கேயே தொழிற்சாலை, இங்கேயே அந்த நிறுவனத்தின் அலுவலகமும் இருக்கும். அப்படிப் பார்த்தால் தமிழகம் இரண்டாவது இடத்தில் அல்ல, முதலிடத்தில்தான் உள்ளது. இந்த ஜி.எஸ்.டி. காசை மத்திய பா.ஜ.க அரசு வாங்கிக்கொண்டு திரும்பத் தருவதில்லை. நியாயமாக என்ன சொல்ல வேண்டும் என்றால் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக இருப்பது மத்திய பா.ஜ.க அரசுதான். பா.ஜ.க.வை ஒழிக்க வேண்டும் என்று சொல்லுவதுதான் சரியான வாதமாக இருக்கும்.
தமிழகத்திற்கு ஜி.எஸ்.டி. வரவேண்டியது மட்டும் கிட்டதட்ட 13 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் பாக்கி உள்ளது. அது தமிழகத்தின் பங்கு. தமிழகத்தில் இருந்து வசூல் செய்ததில் இருந்து தர வேண்டிய பங்கு. பிச்சை கிடையாது. கேட்டால் கரோனாவில் செலவாகிவிட்டது என்கிறார்கள்.
தமிழ்நாட்டின் வளங்களைத் திருட வந்தது பா.ஜ.க. தமிழ்நாட்டின் வளங்களைத் திருடி வளர்ச்சிக்கு தடையாக இருப்பது பா.ஜ.க.தான். தி.மு.க தமிழ்நாட்டையும் வளர்த்திருக்கிறது. இங்குள்ள வரி காசுகளைக் கொடுத்து இந்தியாவையும் வளர்த்திருக்கிறது. குறிப்பாக வட இந்தியா இயங்கிக் கொண்டிருப்பதே தமிழகத்தின் வரி காசில்தான் என்கிறார் உறுதியாக.