Skip to main content

குழந்தைகளை கைது செய்கிறது அரசு! ​- காஷ்மீர் குறித்து உண்மை அறியும் குழு 

Published on 17/08/2019 | Edited on 17/08/2019

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வதோடு, அதை  இரண்டு யூனியன் பிரதேசங்களாகப்பிரிக்கும் மசோதாவை நாடாளுமன்றத்தின்  இரு அவைகளிலும் நிறைவேற்றி இருக்கிறது மத்திய அரசு. இது தொடங்கிய  நாள் முதல், காஷ்மீர் மிகப்பெரிய இருளுக்குள் சிக்கிக் கொண்டிருக்கிறது.  

 

jammu kashmir report

 

 

மோடி அரசும், இந்தியாவின் பெரும்பான்மை ஊடகங்களும் காஷ்மீரில் அமைதிநிலை திரும்புவதாகவும்,  காஷ்மீரிகள் சகஜமாக உலாவுவதாகவும் செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. அதேசமயம்,  இந்தியாவின் எஞ்சியிருக்கும் மற்றசில ஊடகங்களும், பிபிசி உள்ளிட்ட சர்வதேச  ஊடகங்களும், காஷ்மீரிகள் வீதிகளில் இறங்கி போராடுவதாக செய்திகளை வெளியிட்டன.  

ஸ்ரீநகருக்கு அருகிலுள்ள சவுரா என்கிற பகுதியில் மிகப்பெரிய அளவிலான மக்கள்  போராட்டம் வெடித்ததாக செய்திகள் வெளியாகின. இதை தொடக்கத்தில் மறுத்துவந்த  நிலையில், ஒருகட்டத்தில் வேறு வழியின்றி அங்கு மட்டுமே போராட்டம் நடந்ததாக  ஒப்புக்கொண்டது மோடி அரசு. அங்கிருக்கும் எதிர்கட்சித் தலைவர்கள் வீட்டுச்சிறையில்  இருந்து இன்னமும் விடுவிக்கப்படவில்லை. முடக்கப்பட்ட இண்டர்நெட் உள்ளிட்ட எந்த  வசதியும் அங்கு செய்து தரப்படவில்லை. 

இந்நிலையில், அனைத்திந்திய முற்போக்கு மாதர் சங்கத்தைச் சேர்ந்த கவிதா கிருஷ்ணன்,  பொருளாதார வல்லுநர் ஜீன் ட்ரீஸ், அனைத்திந்திய மாதர் சங்கத்தைச் சேர்ந்த  மைமூனா மொல்லா மற்றும் சமூக செயற்பாட்டாளர் விமல் பாய் உள்ளிட்டோர்  அடங்கிய உண்மை அறியும் குழு ஆகஸ்ட் 9 முதல் 13-ஆம் தேதி வரை காஷ்மீரில் ஆய்வு செய்திருக்கிறது. அவர்களின் ஆய்வு தொடர்பாக  ஆங்கில ஊடகமொன்றிற்கு பேட்டியளித்த கவிதா கிருஷ்ணன், காஷ்மீரில் 7 வயது  சிறுவர்களும் கைது செய்யப்படுவதாக அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.  

சவுராவில் நடைபெற்ற போராட்டம் குறித்து பி.பி.சி. வெளியிட்ட வீடியோ பரபரப்பை  ஏற்படுத்தியது. ஆனால், மோடி அரசு அங்கொன்றும், இங்கொன்றுமாக மட்டுமே  போராட்டம் வெடிப்பதாக கூறுகிறதே…  

கவிதா கிருஷ்ணன் : ஆமாம். போராட அனுமதிப்பதில்லை என்பதுதான் உண்மை.  அங்கொன்றும், இங்கொன்றுமாக போராட்டம் நடப்பது உண்மைதான். ஸ்ரீநகருக்கு அருகிலுள்ள  சவுராவில் போராட்டம் வெடித்தது. அது மிகப்பெரிய போராட்டம். பெல்லட் குண்டுகளால்  தாக்கப்பட்டவர்களைப் பார்த்தோம். அவர்கள் போராட்டக்காரர்கள் அல்ல; வேடிக்கை  பார்த்துக் கொண்டிருந்தவர்கள். அவர்களில் சில குழந்தைகளும் இருந்தனர்.  

காஷ்மீரில் உள்ள பெரும்பான்மையான கிராமங்களைச் சேர்ந்த மக்களைச் சந்தித்தோம்.  அங்கே குழந்தைகள்… வேறு வார்த்தை சொல்லமுடியாது… போலீசார் அவர்களைக்  கடத்தினார்கள் என்றுதான் சொல்லவேண்டும். நள்ளிரவில் உறங்கிக் கொண்டிருந்த  அந்தக் குழந்தைகளை, பலவந்தமாக, சட்டவிரோதமாக கடத்திச் சென்றார்கள்.  அவர்கள் ராணுவ முகாம்களிலோ, காவல்நிலையங்களிலோ தங்க வைக்கப் பட்டிருக்கலாம்.  அவர்கள் தாக்கப்பட்டிருக்கிறார்கள். அந்த பாவப்பட்ட பெற்றோர்களுக்கு தங்களது  குழந்தைகள் திரும்பி வருவார்களா என்பதுகூட தெரியவில்லை. கடத்திச் செல்லப்பட்ட  குழந்தைகளின் மீது எஃப்.ஐ.ஆரோ, வழக்கோ பதியப்படவில்லை. நாங்கள் சென்ற  ஒவ்வொரு கிராமத்திலும் இதுபோன்ற கைது நடவடிக்கை நடந்தது என்பதை என்னால்  உறுதியாக சொல்லமுடியும்.  

ஏழாம் வகுப்பு படிக்கும் சிறுவன் கைது செய்யப்பட்டதாக சொல்கிறீர்களா? 

கவிதா கிருஷ்ணன் : ஒரு சிறுவன் அல்ல.. ராணுவப் படையினரால் கைது செய்யப்பட்ட  ஏழாம் வகுப்பு மாணவனைப் பார்த்தோம். தன்னைவிட இளமையான, சின்னஞ்சிறு  குழந்தைகள் கடத்தப்பட்டு, காவலில் வைக்கப்பட்டிருப்பதாக அவன் எங்களிடம் கூறினான்.  இது அப்பட்டமான தீவிரவாதம்.  

சிறுவர்களைக் கைது செய்வதன் நோக்கமென்ன? 

கவிதா கிருஷ்ணன் : மிரட்டுவதற்குத்தான்.. வேறெதற்காக இருக்க முடியும். அவர்களது  பெற்றோர், தங்கள் குழந்தைகள் கற்களை வீசவில்லை என்று உறுதியாக கூறுகிறார்கள்.  வீடுகளில் சோதனையிட வேண்டும் என்று சொல்லிக்கொண்டு உள்ளே நுழைந்து,  குழந்தைகளைக் கடத்திச் சென்றுள்ளார்கள். இது மிகப்பெரிய அச்சத்தை, குறிப்பாக பெண்களின் மத்தியில் உண்டாக்கி இருக்கிறது. சோதனை என்கிற பெயரில்  சில பெண்கள் மீது பாதுகாப்புப் படையினர் அத்துமீறியதாகவும் சொன்னார்கள். இந்திய  ஊடகங்கள் என்னதான் செய்கின்றன. ஏன் இன்னமும் இங்கு வர மறுக்கின்றன?” என்கிறார் ஆவேசமாக. 

நன்றி:

huffingtonpost