
கேரளாவை கலக்கி வரும் அழகி ஸ்வப்னா சுரேஷ் ஒரு சர்வதேச தங்க கடத்தல் ராணி என அவரை விசாரித்து வரும் சுங்கத்துறையும், தேசிய புலனாய்வுத் துறையும் கண்டுபிடித்துள்ளது. ஆனால் அஜித் தோவல் தலைமையிலான தேசிய புலனாய்வுக் குழு ஸ்வப்னா சுரேஷ் வழக்கில் கேரளா முதலமைச்சர் பினராயி விஜயனை சிக்க வைக்க பெரும்பாடு படுகிறது.
ஸ்வப்னா சுரேஷின் வங்கி லாக்கரை பரிசோதித்தபோது, அதில் ஒரு கோடி ரூபாய் பணமும், ஒரு கிலோ தங்கமும் இருந்தது. ஆனால் கடந்த 10 வருடமாக இந்த தொழிலில் ஸ்வப்னா சுரேஷூக்கு தொடர்பு இருந்தது என சுங்கத்துறையால் மதிப்பிடப்படுகிறது. அதிலும் குறிப்பாக கடந்த ஒரு வருடமாக இந்தியாவுக்கு கடத்தப்பட்ட தங்கங்கள் எல்லாம் ஸ்வப்னா சுரேஷ் மூலமாகத்தான் கடத்தப்பட்டது என சுங்கத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
ஆரம்பத்தில் பல்வேறு டிராவல் ஏஜென்ஸிகளில் வேலை செய்த ஸ்வப்னா சுரேஷுக்கும் அங்கிருந்துதான் தங்கத்தை கடத்துபவர்கள் அறிமுகமானார்கள். அதன்பிறகு கேரளாவைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சி பிரமுகரும் மத்திய மந்திரியாக இருந்தவருமான கே.சி.வேணுகோபால் மூலம் ஏர் இந்தியா என்கிற நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்தார். அதன்பிறகு அவர் ஐக்கிய அமீரகத்தின் திரு வனந்தபுரம் கிளையில் பணிக்கு சேர்ந்தார். தான் வேலை செய்த எல்லா இடங்களிலும் அதிகார மையங்களுடன் மிக நெருங்கிய நட்பு பாராட்டி வந்த ஸ்வப்னா சுரேஷ் ஒரு கட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வெளியேற்றப்படுகிறார். அதன்பிறகு கேரளா அரசின் தகவல் தொழில் நுட்பத்துறையில் அதிகாரியாக வேலைக்கு சேரும் ஸ்வப்னா சுரேஷ், கேரளாவில் ஐ.டி. துறையில் முதலீடு செய்ய நடத்தப்பட்ட முதலீட்டார்கள் மாநாட்டை நடத்திக்கொடுக்கும் அளவிற்கு செல்வாக்குடன் இருந்துள்ளார். அதற்கு காரணம் முதன்மை செயலாளராக இருந்த சிவசங்கரன் மற்றும் முதல்வரின் நம்பிக்கைக்குரிய தகவல் தொழில்நுட்ப பணியாளராக இருந்த அருண்பாலச்சந்திரன் ஆகியோரின் நட்புதான்.
இப்படி அதிகார வர்க்கங்களுடன் தனது நெருக்கத்தை வளப்படுத்தி வைத்துக்கொண்ட ஸ்வப்னா சுரேஷ், கடைசி வரை தனது கடத்தல் தொழிலை கைவிடவில்லை. 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் சென்னையில் 20 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த தங்கம் துபாயில் இருந்து ஸ்வப்னா சுரேஷின் ஏற்பாட்டில் இலங்கைக்கு விமானம் மூலம் கொண்டுவரப்பட்டு அங்கிருந்து படகு மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. அதேபோல் ஹாங்காங்கிலிருந்து 20 கிலோ தங்கத்துடன் சென்னையில் வெளிநாட்டு பெண்கள் இருவர் சிக்கினார்கள். அதேபோல் கொரியாவைச் சேர்ந்த இளம் பெண்கள் இருவரிடம் 24 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அத்துடன் திருச்சியில் 10 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த கடத்தல்களில் எல்லாம் ஸ்வப்னா சுரேஷுக்கு தொடர்பு இருப்பது பற்றி திடுக்கிடும் தகவல்கள் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்துள்ளன. கடந்த வாரம் சுங்கத்துறை அதிகாரிகள் அடங்கிய ஒரு டீமும், தேசிய புலனாய்வு ஏஜென்சியின் அதிகாரிகள் குழுவும் தமிழகத்திற்கு வந்தது.
சென்னை, திருச்சி ஆகிய இரண்டு நகரங்களிலும் இந்த தங்க கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களிடமும் தங்கக் கடத்தலை விசாரித்த மத்திய புலனாய்வு குழு அதிகாரிகளையும் விசாரித்தது. அதில் ஸ்வப்னா சுரேஷுக்கு இருக்கும் தொடர்புகள் பற்றி புதிய தகவல்கள் கிடைத்தன என்கிறார்கள் ஸ்வப்னா சுரேஷின் வழக்கை விசாரிக்கும் அதிகாரிகள்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் மன்னர் குடும்பத்திற்கு நெருக்கமான குடும்பத்தில் பிறந்த ஸ்வப்னா, காதலித்து திருமணம் செய்து கொண்டார். அந்த திருமணத்தின் மூலம் ஒரு பெண் குழந்தையை பெற்றார். அவரது திருமண உறவு பாதியிலேயே முடிந்த பின்னர், வளைகுடா நாடுகளில் இருக்கும் மலையாளிகளின் பிரச்சனைகளை தீர்த்து வைக்கும் கட்டப் பஞ்சாயத்துகளில் இறங்கினார்.
இந்த கட்டப்பஞ்சாயத்தும் அதனுடன் அவர் மேற்கொண்ட சுற்றுலா தொழில் தொடர்பும் அவரை கடத்தல் தொழிலில் ஈடுபட வைத்தது. அந்த கடத்தல் தொழிலுக்காக பல்வேறு நிறுவனங்களில் வேலைக்கு சேர்ந்த அவர் இறுதியாக திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதரக அலுவலகத்தில் வேலைக்கு சேர்ந்தார்.
இதுவரை நூற்றுக்கணக்கான கிலோ தங்கத்தை பல்வேறு நாடுகளில் இருந்து கடத்திய ஸ்வப்னா சுரேஷின் வங்கி லாக்கரில் வெறும் ஒரு கோடி ரூபாய் பணமும், வெறும் ஒரு கிலோ தங்கமும் கண்டுபிடிக்கப்பட்டது. ஸ்வப்னாவின் தலைமையிலான தங்க கடத்தலை வெறும் ஒரு கோடி ரூபாய்தான் அவருக்கு கிடைத்ததா என இந்த வழக்கை விசாரிக்கும் மத்திய அரசு அதிகாரிகள் சந்தேகப்படுகிறார்கள்.
ஸ்வப்னா மூலம் தமிழகம், கேரளா உள்பட தென் மாநிலங்களில் இயங்கும் தீவிரவாத குழுக்களுக்கு பண விநியோகம், தங்க கடத்தல் மூலம் செய்யப்பட்டதா? அதனால்தான் சொற்பத்தொகையான ஒரு கோடி ரூபாயும், ஒரு கிலோ தங்கம் மட்டும் ஸ்வப்னா வங்கி லாக்கரில் வைத்திருக்கிறாரா என சுங்கத்துறை அதிகாரிகளும் தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகளும் ஆராய்ந்து வருகிறார்கள்.
அத்துடன் முதல்வரின் செயலாளராக இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கரனுக்கும் ஸ்வப்னாவுக்கும் என்ன உறவு? என விசாரணையை தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். சிவசங்கரனை தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள் பலமுறை விசாரித்தார்கள். எனக்கு வேலைச்சுமை அதிகம். ஒவ்வொருநாளும் நள்ளிரவு வரை நான் முதல்வர் அலுவலகத்தில் வேலை செய்தேன். எனக்கு ரிலாக்ஸ் தேவைப்பட்டது. அதை எனக்கு ஸ்வப்னா தந்தார். அவரது வீட்டில் நடக்கும் மது விருந்துகளுக்கு நான் அடிக்கடி செல்வேன்.
ஸ்வப்னாவின் நட்பும் மதுவும் எனக்கு தினமும் தேவைப்பட்டதால் ஸ்வப்னாவிற்கு தலைமை செயலகத்திற்கு அருகே ஒரு வீடு பிடித்து கொடுத்தேன். அந்த வாடகை வீட்டில் ஸ்வப்னாவும், ஸ்வப்னாவின் நண்பர்களுடன் நான் மது குடித்தேன். ஸ்வப்னாவின் நண்பர்கள் தங்கத்தை கடத்துகிறார்கள் என எனக்கு தெரியாது. அவர்கள் ஐக்கிய அரபு அமீரக தூதரக பதவியில் இருந்து நீக்கப்பட்டனர். அவர்களுக்கு எனது செல்வாக்கை பயன்படுத்தி தகவல் தொழில்நுட்ப துறையில் வேலை வாங்கிக்கொடுத்தேன். நான் ஸ்வப்னாவுடன் நெருங்கி பழகி வந்தேன். ஆனால் அவரது தங்க கடத்தல் தொழிலுக்கு உதவியாக கேரள போலீசாரை நான் பயன்படுத்தவில்லை. கேரள போலீஸ் வாகனங்களில் தங்க கடத்தலை செய்ய நான் எந்த உதவியும் செய்யவில்லை.
ஜூலை மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதரக அலுவலகத்திற்கு 30 கிலோ தங்க கட்டிகள் அடங்கிய பார்சல் வந்தது. 15 கோடி மதிப்புள்ள அந்த பார்சலை சுங்கத்துறை அதிகாரிகள் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் விடுவிக்க மறுத்தனர். ஸ்வப்னாவுடன் ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதரக அலுவலகத்தில் மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றி ஸ்வப்னாவுடன் சேர்ந்து பணியில் இருந்து நீக்கப்பட்ட ஷரீப் என்பவர் அந்த பார்சலை சுங்கத்துறை அதிகாரிகளின் பிடியில் இருந்து மீட்டுத் தருமாறு எனக்கு போன் செய்து சொன்னார். அதே போல் ஸ்வப்னாவும் எனக்கு போன் செய்து அந்த பார்சலை விமான நிலையத்தில் இருந்து வெளியே கொண்டுவர உதவுமாறு கேட்டார்.
நான் அது கேரள அரசின் நற்பெயரை கெடுக்கும் என உதவி செய்ய மறுத்து விட்டேன். ஸ்வப்னாவுடன் இருந்த நட்பால் நான் அவருக்கு அவரது போலி டிகிரி சான்றிதழ் பற்றி விசாரிக்காமல் கேரள அரசின் தகவல் தொழில்நுட்பத்துறையில் வேலை வாங்கிக்கொடுத்தேன் என்பதை தவிர நான் எந்த குற்றமும் செய்யவில்லை. எனக்கும் இந்த தங்கம் கடத்தலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என சிவசங்கரன் தேசிய புலனாய்வு அதிகாரிகளிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதனால் தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். சிவசங்கரனை கைது செய்து, அவர் மூலம் கேரள முதல்வர் பினராயி விஜயனை விசாரணைக்கு அழைத்து கேரள அரசை அவமானப்படுத்தலாம் என்கிற அஜீத் தோவலின் திட்டம் மாபெரும் தோல்வியில் முடிந்துவிட்டது என்கிறார்கள் கேரள பத்திரிகையாளர்கள்.