தென்சென்னை மாவட்ட தி.மு.க. நிர்வாகிகளுடன் காணொளி காட்சி மூலம் 13.8.2020 அன்று ஆலோசனை நடத்தினார் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின். மாவட்டச் செயலாளர் மா.சுப்ரமணியன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் ஸும் செயலியில் இணைந்திருந்தனர். சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வது குறித்து நிர்வாகிகளிடன் கலந்துரையாடினார் ஸ்டாலின். மாவட்டத்தில் நடந்து வரும் பணிகள் குறித்து நிர்வாகிகள் எடுத்துச் சொன்னார்கள்.
கே.கே.நகர் தனசேகரனுக்கு பேசும் வாய்ப்பு வந்த போது, "நிறைய நிர்வாகிகள் உங்களோட(ஸ்டாலின்) பேச நினைக்கிறார்கள். ஆனா, அவங்களுக்கு வாய்ப்பு கொடுக்க மாட்டேங்கிறாங்க" என வருத்தத்தில் இருப்பதுபோல பேசியிருக்கிறார். உடனே ஸ்டாலின், "அப்படி எதுவும் இல்லையே யாருக்கு வாய்ப்பு கிடைக்கலைன்னு ரெண்டு பேரைச் சொல்லுங்க" என தனசேகரனிடம் கேட்க, "பேரெல்லாம் வேண்டாம் தளபதி" என அவர் இழுக்க, "கட்சியோட தலைவர் நான் கேட்கிறேன். சொல்லுங்க" எனச் சொல்லியும் பெயர்களைச் சொல்லவில்லை தனசேகரன்.
உடனே கோபமான ஸ்டாலின், "நிகழ்ச்சியை தலைமைதான் ஏற்பாடு செய்திருக்கிறது. இதில் எல்லோரிடமும் நான் பேசுகிறேன். எல்லோருக்கும் வாய்ப்பும் தரப்படுகிறது. அப்புறம் எப்படி வாய்ப்புத் தரலைன்னு உங்கக்கிட்டே சொல்வாங்க. இதா பாருங்க, தனசேகர், உங்களைப் பத்தி நிறைய புகார் வருது. போனா போகிறதுன்னு விட்டு வெச்சிருக்கேன். கு.க.செல்வம் இஷ்யூவால நீங்க தப்பிச்சிக்கிட்டு இருக்கீங்க. உங்க மேல வர்ற புகாரை சொன்னா தாங்கமாட்டீங்க. உங்க ஏரியாவுல கட்சி ஆஃபிசையே இழுத்துப் பூட்டி வெச்சுருக்கீங்க. பார்த்து நடந்துக்குங்க!" எனக் கோபமாக எச்சரிக்கை செய்திருக்கிறார் ஸ்டாலின்.
பதில் பேசாமல் அமைதியாக இருந்துள்ளார் தனசேகரன். தனசேகரனுக்கு விழுந்த டோஸ், மாவட்ட நிர்வாகிகளிடன் எச்சரிக்கை உணர்வை ஏற்படுத்தியுள்ளது என்கிறார்கள் தி.மு.க. நிர்வாகிகள்.