இந்தியாவில் பொது சிவில் சட்டம் அமல்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியதைத் தொடர்ந்து அது தொடர்பான விவாதங்கள் எழுந்துள்ளன. பொது சிவில் சட்டம் குறித்து பல்வேறு கேள்விகளை அரசியல் விமர்சகர் புதுமடம் அலீமைச் சந்தித்து அவரிடம் கேட்டோம். அவர் நமக்கு அளித்த பேட்டியில் சிலவற்றை தொகுத்து வழங்கியிருக்கிறோம்.
தேர்தல் நெருங்கும் நேரத்தில் பொது சிவில் சட்டம் அவசியம் என்று மோடி கூறியிருக்கிறாரே?
அண்ணல் அம்பேத்கர் அரசியலமைப்பு சட்டத்தை இந்த நாட்டிற்கு அர்ப்பணித்த போது அவர் பேசிய பேச்சுக்கள் இன்றைக்கும் இருக்கிறது. ஆனால், அம்பேத்கர் கூறாததை எல்லாம் கூறியதாக பிரதமர் மோடி பேசி வருகிறார். கடந்த 75 ஆண்டுகளில் நாம் அனைவரும் அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் தான் இயங்கிக் கொண்டிருக்கின்றோம். இதைப்பற்றியெல்லாம் தெரிந்தும் பொது சிவில் சட்டம் அவசியம் வேண்டும் என்று கூறுகிறார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக வெற்றி பெற்ற பின் 2016 ஆம் ஆண்டில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று கருத்து கணிப்பு நடத்தினார்கள். அதே போன்று 2018 ஆம் ஆண்டிலும் நடத்தினார்கள். அதன் பின்பு அடுத்த 2024 ஆம் ஆண்டில், வரவிருக்கும் தேர்தல் நேரத்தில் மீண்டும் பொது சிவில் சட்டத்தை கையில் எடுத்திருக்கிறார்கள். ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக பொது சிவில் சட்டம் அவசியம் என்று கூறும் இவர்களுடைய பேச்சில் எந்த விதத்திலும் உண்மைத் தன்மை இருக்காது. ஏனென்றால் இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது என்பது மிகவும் கடினமான ஒரு விசயமாகும். அது பிரதமர் மோடிக்கும் தெரியும்.
ஆர்.எஸ்.எஸ்-ன் குருஜி என்று பாஜக தரப்பிடமிருந்து அழைக்கக்கூடிய கோல்வால்கரிடம் ஒருமுறை பொது சிவில் சட்டம் அவசியம் தானே என்று கேட்டார்கள். ஆனால், அவர் இந்தியாவில் பொது சிவில் சட்டம் ஏற்படுத்துவது மிகவும் கடினமான ஒன்றாகும். மேலும் அப்படிப்பட்ட சட்டத்தை அமல்படுத்துவதற்கு எந்த தேவையும் இல்லை என்று கூறினார். அதனால், இந்த பொது சிவில் சட்டம் என்பது இந்த தேசத்திற்கு உகந்த சட்டமே அல்ல என்பது தான் நிதர்சனமான உண்மை. இருந்தாலும் அடிக்கடி பொது சிவில் சட்டத்தை பற்றியே பேசி வருகிறார்கள் என்றால் பெரும்பான்மை இந்துக்களின் வாக்குகளை பெறுவதற்காகத் தான்.
பொது சிவில் சட்டத்தின் சாராம்சங்கள் என்ன என்பதை விவரித்து சொல்லுங்கள்
திருமணம், சொத்துரிமை, குழந்தைகளை தத்தெடுப்பது என்று இதை உள்ளடக்கிய சட்டம் தான் பொது சிவில் சட்டம். அரசியலமைப்பின் சட்டம் கொடுத்திருக்கக்கூடிய மத சுதந்திரம் என்பது அவர்களது மதம் தரும் வழிப்பாட்டு நெறிமுறைகளை அவர்கள் பின்பற்றலாம் என்பதே. இந்து, கிறிஸ்துவ மதம் கொடுக்கும் உரிமைகளை போல் இஸ்லாம், சீக்கியர் என அவர்கள் மதம் சார்ந்தும் சட்டம் இயற்றப்பட்டிருக்கிறது. இதுதான் மத சுதந்திரம். ஆனால் பொது சிவில் சட்டம் மூலம் இவர்கள் சிறுபான்மையினரை தூண்டிவிடப் பார்க்கிறார்கள்.
1951 ஆம் ஆண்டு அம்பேத்கர் சட்ட அமைச்சராக இருந்த போது, இந்துக்களுக்கு பொதுவான சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று கூறினார். ஆனால், அன்று இவர்கள் மறுத்தபோது அம்பேத்கர் தனது சட்ட அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அதே போன்று 1947 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் ஆர்.எஸ்.எஸ் பின்புலம் கொண்ட எம்.ஆர்.மாசானி என்பவர் பொது சிவில் கொண்டு வர வேண்டும் என்று முன்மொழிகிறார். அப்போது பலரும் எதிர்த்து வந்தனர். ஆனால் அம்பேத்கர், இந்த தேசத்தில் பொது சிவில் சட்டம் அமல்படுத்துவதற்கு வாய்ப்பே இல்லை. ஏனென்றால் இந்த தேசம் மொழி, கலாச்சாரம், பண்பாடு எனப் பிரிந்து இருக்கின்ற ஒற்றை தேசம் எனக் கூறியிருக்கிறார்.
பொது சிவில் சட்டத்தில் பெண்களுக்கு சொத்துரிமை வழங்குவதும், எளிதாக விவாகரத்து பெற முடியாது என்றும் தெரிவிக்கின்றனர். இதே சட்டம் தான் இஸ்லாம் மதத்திலும் இருக்கின்றன. பின் ஏன் அதை எதிர்க்கிறார்கள்?
சிறுபான்மை மக்களை பிரித்து பெரும்பான்மை இந்து மக்களின் வாக்குகளை பெறுவதற்காக தான். மேலும், எதன் மீது கை வைத்தால் இஸ்லாமிய மக்கள் கோபடைந்து கொந்தளிப்பார்களோ அதில்தான் இவர்கள் பொது சிவில் போன்ற சட்டத்தை வைத்து அவர்களை பிரிக்கிறார்கள். பொதுவாகவே, அனைத்து மதத்தினரும் திருமணம் செய்து அரசு சார்பில் பதிவு செய்து தான் வருகின்றனர். அதே போல், எத்தனையோ விவாகரத்து நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அதனால் பொது சிவில் சட்டம் அல்லாமல் ஏற்கனவே இந்த சட்டமெல்லாம் நடைமுறையில் இருந்து வருகிறது. ஆக, 99 சதவீத மக்களின் விருப்பத்தை எதிர்த்து வெறும் 1 சதவீத விசயத்தை மட்டும் முன்னெடுத்து இவர்கள் எதை நோக்கி வருகிறார்கள் என்று தெரியவில்லை.
பொது சிவில் சட்டம் அமலுக்கு வந்தால் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?
ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது. முத்தலாக் சட்டம் வந்தபோது கூட இஸ்லாமிய மக்கள் ஷரியத் அடிப்படையில் தான் திருமணம் செய்து அதற்கு விலக்கும் பெற்றார்கள். மிகவும் குறுகிய சதவீதம் மக்கள் தான் அந்த குற்றவியல் சட்டத்தை பயன்படுத்தினார்கள். இஸ்லாமிய மக்கள் ஷரியத் அடிப்படையில் திருமணம் செய்து கொண்டு ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் நீதிமன்றத்திற்கு சென்று அந்த பிரச்சனையை தீர்க்கலாம். அதற்கு எந்த வித தடையுமில்லை. முத்தலாக் சட்டம் எப்படி எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லையோ அதுபோல் இந்த பொது சிவில் சட்டமும் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.
இஸ்லாமிய மக்கள் 4 திருமணம் செய்து கொள்ளலாம் என்று இஸ்லாத்தில் இருக்கின்றது. ஆனால் இந்த சட்டம் அமலுக்கு வந்தால் விவாகரத்து வாங்கி விட்டுத்தான் அடுத்த திருமணம் செய்து கொள்ளலாம் என்று இருக்கிறதே?
இந்தியாவில் உள்ள கணக்குப்படி அதிகமாக இரண்டாம் திருமணம் செய்தவர்கள் இஸ்லாமியர்கள் அல்ல இந்துக்கள் தான் என்று புள்ளி விவரம் சொல்கிறது. இஸ்லாத்தில் கண்டிப்பாக 4 திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று எங்கேயும் சொல்லவில்லை. அவர்கள் விருப்பப்பட்டால், இரண்டாம் திருமணம் செய்து கொண்டு அவர்களுக்கு சம உரிமை கொடுக்க வேண்டும் என்றுதான் இஸ்லாம் சொல்கிறது. ஆனால் அது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. பொருளாதாரம், உடல் வலிமை, சமூகம் போன்று அனைத்து விசயத்திலும் பலம் பெற்றவர்களாக இருக்க வேண்டும். அதனால் அதற்கு சமூகமே அனுமதிக்காத போது அந்த திருமணத்தை செய்யும் வாய்ப்பு மிக மிகக் குறைவு தான்.
இந்திய ஒருமைப்பாட்டை கருத்தில் கொண்டு பொது சிவில் சட்டம் அவசியம் வேண்டும் என உச்சநீதிமன்றம் அடிக்கடி மேற்கோள் காட்டி கூறியிருக்கிறதே?
அரசியலமைப்பு சட்டம் 49வது விதி இதைப் பற்றி பேசுவதனால் இந்த பொது சிவில் சட்டத்தை நீதிபதிகள் மேற்கோள்காட்டி பேசி வருகின்றனர். ஆனால், இந்த பொது சிவில் சட்டத்தை உடன்படாமல் அரசியலமைப்பு சட்டத்தின் படி 16 விதிகள் இருக்கின்றன. பொது சிவில் சட்டம் இருக்கும் கோவாவில் இருப்பவர்கள் அதிகப்படியான மக்கள் கிறிஸ்துவ மதத்தை சார்ந்தவர்கள். அதனால் அவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்பட வாய்ப்பு இல்லை. ஆனால், இந்த பொது சிவில் சட்டம் கொண்டு வருவதன் மூலம் இந்தியாவில் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை.
இந்த சிவில் சட்டம் என்பது இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல இந்துக்களுக்கும், கிறிஸ்துவர்களுக்கும், சீக்கியர்களுக்கும் எதிரானதாகும். தேர்தல் வரும் நேரத்தில் இந்த பொது சிவில் சட்டத்தினால் இஸ்லாமிய மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று பாஜகவினர் கருத்துக்களை தெரிவித்து அதன் மூலமாக இஸ்லாமிய மக்களை தூண்டிவிடுவதற்கான செயல் தான் இது. அதனால், இந்த சட்டத்திற்கு எதிராக கருத்துகளை மட்டும் தெரிவிப்பதே நல்லது.
இதே போன்று கர்நாடகாவில் முந்தைய ஆட்சியில் இந்துத்துவா அமைப்பையே நடத்தினார்கள். ஆனால், அதை மக்கள் பொறுத்துக் கொண்டு தேர்தல் நேரத்தில் வாக்களித்து மிகப் பெரிய ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினார்கள். அதே போன்று தான் வருகிற 2024 ஆம் ஆண்டு தேர்தலில் ஒரு மௌன புரட்சி நடக்கப் போகிறது. அதனால் இவர்களை எதிர்த்து போராடத் தேவை இல்லை. இவர்கள் நம்மிடம் மடைமாற்றும் வேலையை செய்கிறார்கள். பாஜகவின் மோசமான ஆட்சியில் மணிப்பூர் பற்றி எரிந்து கொண்டிருக்கும் போது அவர்களுக்காக ஒரு பதிலும் இதுவரை சொல்லவில்லை. ஆக அவர்களை எதிர்த்து மக்கள் யாரும் கேள்வியே கேட்கக்கூடாது என்பதற்காக கொண்டு வரப்பட்டது தான் இந்த பொது சிவில் சட்டம். அதனால், இதை கண்டு கொள்ளாமல் கடந்து செல்வது தான் நல்லது.