ஏன்யா நானெல்லாம் ராஜீவ்காந்தி காலத்திலிருந்து டெல்லியில் அரசியல் செய்துக் கிட்டிருக்கேன். நேற்று பெய்த மழையில் முளைச்ச காளான் உன் மகன். எலெக்ஷன்ல நீ அவன ஜெயிக்க வச்சா மந்திரி பதவி வாங்கிடுவியா? நான் அவன் பின்னாடி போகணுமா? என்னய்யா நினைச்சுக்கிட்டிருக்க'' என ஓ.பி.எஸ்.சின் சட்டையை பிடிக்காத குறையாக கேட்டிருக்கிறார் தம்பிதுரை. பல் வலியால் அவதிப்பட்ட எடப்பாடி வீட்டில்தான் இந்த பஞ்சாயத்து கிளம்பியது. வெல வெலத்துப் போன ஓ.பி.எஸ். அங்கிருந்து வெளியேறினார். "என் மகன் மந்திரி இல்லையென்றால் அ.தி.மு.க.விற்கு மத்திய அமைச்சரவையில் இடம் கிடையாது' என ஓ.பி.எஸ். சொல்லி அடித்தார் என்கிறார்கள் அ.தி.மு.க.வினர்.
ஜூன் 5 அன்று, அ.தி.மு.க. வின் இஃப்தார் விருந்தில் பேசிய ஓ.பி.எஸ்., ஆண்டவன் கெட்டவனுக்கு நிறைய கொடுப்பார். ஆனால் கைவிட்டு விடுவார். நல்லவங்களை நிறைய சோதிப்பார். ஆனால் கைவிட மாட்டார்'' என்று ரஜினி டயலாக்கை பேசினார். இதை எதற்காக ஓ.பி.எஸ். சொல்கிறார் என பத்திரிகையாளர்களுக்கே புரியவில்லை. ஆனால் ஓ.பி.எஸ். "ஆண்டவன்' என குறிப்பிட்டது மத்திய பா.ஜ.க.வை. "கெட்டவன்' என சொன்னது எடப்பாடியை என்கிறார்கள் ஓ.பி.எஸ்.சுக்கு நெருக்கமானவர்கள்.
தம்பிதுரை ஓ.பி.எஸ்.சிடம் எகிறிய போது எடப்பாடி அதை தடுக்கவில்லை. தம்பிதுரை பக்கம் நியாயம் இருப்பதாக அவர் உணர்கிறார். அதுதான் ஒட்டு மொத்த அ.தி.மு.க.வினரின் உணர்வுகளாக இருக்கிறது. பா.ஜ.க. என்பது தமிழக மக்களுக்கும் அவர்களின் உணர்வுகளுக்கும் எதிரான கட்சி. அதனுடன் கூட்டணி என்பது வலுக்கட்டாயமாக அ.தி.மு.க.வின் தலையில் வைத்தார்கள். உத்தர பிரதேசத்தில் அகிலேஷ் யாதவும் மாயாவதியும் கூட்டணியை அறிவித்தபோது பா.ஜ.க. மிரண்டு போனது. உடனடியாக அ.தி.மு.க. வுடன் கூட்டணி என்கிற அறிவிப்பு வந்தால்தான் அகில இந்திய அளவில் பா.ஜ.க.வின் இமேஜ் கூடும் என டெல்லி பா.ஜ.க. திட்டமிட்டது.
அதற்காக எடப்பாடியை பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்க நிர்பந்தம் அளித்தார்கள். எடப்பாடி பா.ம.க.- தே.மு.தி.க. என ஒரு விரிவான கூட்டணியை பா.ஜ.க.வுடன் சேர்த்து அமைத்தார். ஆனால் பா.ஜ.க.வை தூக்கி சுமந்ததால்தான் அ.தி.மு.க.வுக்கு இவ்வளவு பெரிய தோல்வி வந்தது. பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்காமல் அ.தி.மு.க. போட்டியிட்டு இருந்தால் குறைந்தது பத்து தொகுதிகளிலாவது வெற்றி பெற்றிருக் கும் என்பதுதான் தேர்தல் தோல்வி குறித்து அ.தி.மு.க.வின் பார்வையாக இருக்கிறது.