ஜெயலலிதா மரணம் தொடர்பாக வெளியான ஆறுமுகசாமி அறிக்கை நேரடியாகவே சசிகலாவைக் குற்றம் சாட்டியுள்ளது. அவர் நினைத்தால் ஜெயலலிதாவைக் காப்பாற்றி இருக்கலாம் என்ற பதத்தில் அந்த அறிக்கையில் ஆறுமுகசாமி கருத்து தெரிவித்திருந்தார். எடப்பாடி அணியில் இருக்கின்ற முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலாவைக் குற்றம்சாட்டி பேசிவரும் சூழ்நிலையில், ஆறுமுகசாமி அறிக்கையை அடிப்படையாக வைத்து திராவிட இயக்க பேச்சாளர் நாஞ்சில் சம்பத்திடம் நாம் கேள்விகளை முன்வைத்தோம். இதுதொடர்பாக அவர் கூறியதாவது, " இன்றைக்கு பல்வேறு குற்றச்சாட்டுக்களை எடப்பாடி மீதும், சசிகலா மீதும் கூறும் கே.பி.முனுசாமி ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் ஓரே நேரத்தில் ஆறு துறைக்கு அமைச்சராக இருந்தார்.
முதல் நாள் ஒரு துறையை ஜெயலலிதா பிடுங்குகிறார், அடுத்த நாள் அடுத்த துறை, அதற்கடுத்த நாள் மற்றொரு துறையைப் பிடுங்கிக் கொள்கிறார். ஒவ்வொன்றாய் பிடுங்கிக்கொண்ட போதும் அவர் உயிரோடுதான் இருக்கிறார். வேறு யாராவது இருந்தால் தூக்கில் தொங்கியிருப்பான். சில நாட்கள் இலாக்கா இல்லாத அமைச்சராக இருக்கிறார். பிறகு அந்த அமைச்சர் பதவியையே பறிக்கிறார். அடுத்த சில நாட்களில் மாவட்டச் செயலாளர் பதவியையும் எடுத்துவிட்டார். எதற்காக ஜெயலலிதா இப்படிச் செய்தார் என்று சொல்லட்டுமா? இவரின் யோக்கிதை என்ன என்று அப்போதுதான் அனைவருக்கும் தெரியும்.
சொந்தக் கட்சிக்காரனைத் தோற்கடிக்கத் தேர்தலில் மாற்றுக் கட்சியினரோடு இணைந்து செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டுக்காக அவரின் கட்சிப் பதவியைத் தவிர அனைத்தையும் பிடுங்கி எறிந்தார் ஜெயலலிதா. அவர் தற்போது உத்தமர் போல் பேசுகிறார். ஜெயலலிதா மரணம் அடைந்தபோது எடப்பாடி முதல்வராக சசிகலாவால் ஆக்கப்பட்டபோது இவர் எதிர்க்க வேண்டியதுதானே? ஏன் செய்யவில்லை. சசிகலாவால் அடையாளம் காட்டப்பட்ட எடப்பாடி பின்னால் இப்போது அணிவகுத்து நிற்கிறார். அரசியல் அநாதையாக இருந்த இவரை யார் அரவணைத்து அடைக்கலம் கொடுத்தது.
அண்ணன் பன்னீர்செல்வம் தானே அவருக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி கொடுத்தார், அது பத்தாது என்று சட்டமன்ற உறுப்பினர் பதவியும் அவருக்குக் கொடுத்தார். அவர் கொடுத்த பதவியில் அமர்ந்துகொண்டு இன்று வீர வசனம் பேசுகிறார். அதிமுக தொண்டனுக்கும், கட்சிக்கும் துரோகம் செய்த துரோகி இந்த கே.பி.முனுசாமி அவரெல்லாம் யாரைப் பற்றியும் குறை சொல்லிப் பேசத் தகுதியில்லாதவர். அவர் நினைத்தால் காப்பாற்றியிருக்கலாம், இவர் நினைத்தால் காப்பாற்றியிருக்கலாம் என்று கூறுவதெல்லாம் பேசுவதற்குக் கூட வகையில்லாத வார்த்தைகள். மனதுக்குத் தோன்றியதை அறிக்கை என்று இந்த ஆணையம் கொடுத்திருக்கிறது. அதை நாம் தூக்கிப் பரணில் போட்டுவிட்டு வேலையைப் பார்க்க வேண்டியது தான்.
சசிகலாவுக்கு இவ்வளவு சொத்து எப்படி வந்தது. அவருக்கும் ஜெயலலிதாவுக்கும் உறவு சரியில்லை என்று கேள்வி எழுப்புவதற்கு நீங்கள் யார்? சசிகலாவின் திருமணப் பத்திரிகை தங்கத்தை இணைத்து உருவாக்கப்பட்டது. அவரின் கணவர் நடராஜன் தமிழ்நாட்டின் முதல் பிஆர்ஓ, இந்தி எதிர்ப்பு போராளி, ஈழ விடுதலைக்காகக் கடைசி மூச்சு உள்ள வரை பாடுபட்டவர். வாழ்நாளில் கடைசியில் கூட முள்ளி வாய்க்கால் முற்றம் அமைத்துக் கொடுத்தவர். எனவே கேள்வி யார் வேண்டுமானாலும் எழுப்பலாம். பதில் தெரிந்தவர்கள்தான் கூறமுடியும். அந்த வகையில் ஜெயலலிதா சசிகலா உறவு சரியில்லை என்று கூறுவதற்கு நீங்கள் யார் ? உங்களிடம் ஜெயலலிதா மரணத்துக்கு முன்பு சொன்னாரா? பொய்யைத் திரும்பத் திரும்பச் சொன்னால் உண்மையாகாது.