




கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே குமராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஜெயங்கொண்டப்பட்டினம் ஊராட்சியில் அக்கரை ஜெயங்கொண்டப்பட்டினம், திட்டுகாட்டூர், கீழகுண்டலபாடி கிராமங்கள் உள்ளது. இது ஜெயங்ககொண்டப்பட்டினம் - அக்கரை ஜெயங்கொண்டப்பட்டினம் கிராமத்திற்கு இடையே உள்ள பழைய கொள்ளிடம் ஆற்றின் அக்கரையில் உள்ளது. இந்த கிராமத்தில் 1800க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள்.
இயற்கை வளம் உள்ள இந்த கிராமத்தில் உள்ள மக்கள் ஊரைவிட்டு வெளியே வரவேண்டும் என்றால் கொள்ளிடம் ஆற்றை கடந்து தான் வரவேண்டும். ஆற்றில் குறைவாக தண்ணீர் இருந்தால் அனைவரும் ஆற்றில் இறங்கி வந்துவிடுகிறார்கள். மழைகாலங்களில் தண்ணீர் அதிகமாக செல்லும் போது 5 கீ.மீ தூரம் சுற்றிகொண்டு பெராம்பட்டு கிராமத்தின் அருகே அமைக்கப்பட்டுள்ள பாலத்தின் வழியாக வெளியுலகிற்கு சென்று வருகிறார்கள்.
மேலும் இந்த கிராமத்தில் இருந்து மாணவ, மாணவிகள் ஜெயங்கொண்டபட்டினம் கிராமத்தில் உள்ள பள்ளிக்கு வரவேண்டும் என்றாலும் துணிகளை கையில் எடுத்துகொண்டு ஆற்றில் இறங்கி கரைக்கு வந்து துணிகளை போட்டுகொண்டு பள்ளிக்கு சென்று வருகிறார்கள். கொள்ளிடம் ஆற்றில் முதலைகள் பல உள்ளது. பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகள் ஆற்றில் இறங்கி செல்லும் போது உயிரை கையில் பிடித்து செல்வது போல் தினம் தினம் உயிர் பயத்தில் சென்று வருகிறார்கள். முதலைகளிடம் இருந்து தப்பிக்க ஆற்றில் இறங்கி நடந்து வரும் போது கையில் குச்சியை வைத்துக்கொண்டு தண்ணீரை அடித்தவாறு சத்தமிட்டுகொண்டு ஆற்றை கடந்து சென்று வருகிறார்கள்.
ஜெயங்கொண்டபட்டினத்திற்கும் - அக்கரைஜெயங்கொண்டபட்டினத்திற்கும் இடையே கடந்த 14 ஆண்டுகளுக்கு முன் சிமெண்டால் தரைபாலம் அமைக்கப்பட்டது. அமைக்கப்பட்ட மூன்று ஆண்டுகளில் கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளபெருக்கில் இந்த பாலம் அடித்துசென்றுவிட்டது. அதன் பின்னர் பாலம் அமைத்து தரக் கோரி குமராட்சி வட்டார வளர்ச்சி அதிகாரிகளிடமும், ஆட்சியாளர்களிடமும் வலியுறுத்தி மனுகொடுத்துள்ளனர்.
ஆனால் அரசு அதிகாரிகள் இதனை ஒரு பொருட்டாக எடுத்து கொள்ளவில்லை. இதனால் அரசின் மீது விரக்தி அடைந்த அந்த கிராமத்தில் உள்ள இளைஞர்கள் கிராமத்தில் உள்ள மக்களிடம் ரூபாய் 25 ஆயிரம் நிதி திரட்டி மூங்கில் கழியால் தற்காலிக பாலம் அமைத்துள்ளனர். இளைஞர்களின் செயல்பாட்டை அந்த கிராம மக்கள் மட்டுமல்லாமல் இந்த தகவலை அறிந்த அனைவரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.
இதுகுறித்து அந்த கிராமத்தை சேர்ந்த மகேஸ்வரி (27) என்ற பெண் கூறுகையில், நான் சின்னபிள்ளையாக இருந்தபோது ஆற்று தண்ணீரில் இறங்கி தான் கிராம மக்க போய் வந்தாங்க. அதன் பிறகு தரை பாலம் போட்டாங்க. அதுவும் தண்ணீல அடிச்சுட்டு போயிடுச்சு. அதன் பிறகு 10 வருஷசத்துக்கு மேல அரசிடம் பாலம் கட்டிதரகோரி மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கல. அதனால் ஆத்துல தண்ணீர் கொஞ்சமா இருக்கும் போது இறங்கி போவோம். முதலை எப்ப கடிக்குமோ என்ற பயத்திலேயே போவோம்.
எங்க ஊரில் இயற்கை முறையில் காய்கறிகளை விளைய வைத்தோம். எங்க ஊரில் விளையும் காய்களுக்கு தனி மவுசு இருக்கும். விளைந்த காய்கறிகளை எடுத்து செல்ல சரியான வழி இல்லாததால் விவசாயிகள் காலை 5 மணிக்கு காய்கறிகளை தலையில் தூக்கிகொண்டு ஆற்றில் இறங்கி சென்று சிதம்பரம், கொள்ளிடம் பகுதியில் வித்துட்டு வருவாங்க.
இப்படி இயற்கை வளமிக்க எங்க ஊரில் கடல் நீர் உட்புகுந்து நிலத்தடி நீர் உப்பாக மாறியுள்ளது. குடிக்க 4 கி.மீ தூரம் சென்று தண்ணீர் எடுத்து வரும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். ஊரில் ஒரு மேல்நிலை நீர்தேக்க தொட்டி உள்ளது. அதில் உப்பு தண்ணீயை தான் ஏற்றி கொடுக்கிறார்கள். உப்பு தண்ணீரால் அந்த குடிநீர் தொட்டியும் பழுதடைந்து எப்ப இடிந்து விழுமோ என்ற நிலையில் உள்ளது.
கடல் நீர் உட்புகுவதற்கு அரசின் மெத்தனபோக்கு தான் காரணம் இந்த பகுதியில் உள்ள மக்கள் உப்புநீர் புகாமல் இருக்க கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்டகோரி பலகட்ட போராட்டங்களை நடத்தினார்கள். ஆனால் அரசு தடுப்பணை கட்ட எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எங்க ஊர் வாழ்வாதரத்தை இழந்து குடி தண்ணீருக்கு தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே எங்களுக்கு கொள்ளிடம் கூட்டுகுடிநீர் திட்டத்தில் குடிநீர் கிடைக்கவும், உடனடியாக காங்கிரீட்சிமண்ட் பாலம் அமைத்து தரவேண்டும் என்றார்.
இதுகுறித்து குமராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அதிகாரி சுப்பிரமணியனை தொடர்பு கொண்டு கேட்ட போது, நான் வந்து சில மாதங்கள் தான் ஆகிறது. அதற்கு முன் மனு கொடுத்தார்களா? என்று தெரியவில்லை. தற்போது நாங்கள் அனைவரும் வேலைநிறுத்த போராட்டத்தில் உள்ளோம். நான் அலுவலகம் வந்தவுடம் அதுகுறித்து மனு உள்ளதா? என்று பார்கிறேன் என்றார்.