Skip to main content

வென்ற நால்வருமே பாஜக பக்கம் தான்... தேர்தல் முடிவுகள் சொல்வது என்ன..?

Published on 26/05/2019 | Edited on 05/02/2020

நடந்து முடிந்த 17வது மக்களவை தேர்தல் முடிவுகளில் 303 இடங்கள் பெற்ற பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க இருக்கிறது. அதே நேரம் சிக்கிம், ஒடிசா, அருணாச்சல பிரதேசம், ஆந்திர பிரதேசம் என நான்கு மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல்களும் நடந்தன.

 

fiur state assembly election and bjp

 

 

இதில் சிக்கிம் மாநிலத்தில் சிக்கிம் க்ரந்திகாரி மோர்ச்சா கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. அதுபோல அருணாச்சல பிரதேசம் மாநிலத்தில் 60 தொகுதிகளில் 41 தொகுதிகளை கைப்பற்றி மீண்டும் பாஜக ஆட்சியமைக்கிறது. ஒடிசா மாநிலத்தில் ஐந்தாவது முறையாக மீண்டும் நவீன் பட்நாயக் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சட்டமன்ற தேர்தல் நடந்த மற்றொரு மாநிலமான ஆந்திராவில் 175 தொகுதிகளில் 151 தொகுதிகளில் வென்று சாதனை படைத்து ஆட்சியமைக்கிறது ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி.

இதில் 3 மாநிலங்களில் வென்றதும் பாஜக நட்பு கட்சிகளே. இந்த நான்கு மாநில தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ள கட்சிகளில் சிக்கிம் க்ரந்திகாரி மோர்ச்சா ஏற்கனவே பாஜக கூட்டணியில் உள்ளது. அருணாச்சல பிரதேசத்தில் பாஜக நேரடியாகவே ஆட்சியை பிடித்துள்ளது. ஆந்திர மாநில ஒய்.எஸ்.ஆர் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி பாஜக நட்பு வட்டாரத்தில் இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபட்டுவரும் நிலையில், அதைக்கேற்றாற்போல அவரும் அமித்ஷாவையும், மோடியையும் சந்தித்து வந்துவிட்டார்.

அதுபோல ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக், தேர்தலுக்கு பின்னர் பாஜக அரசு ஒடிசாவிற்கு சிறப்பு அந்தஸ்து கொடுத்தால் ஆதரவு தருவேன் என கூறியுள்ளார். பாஜக அவரது கோரிக்கைக்கு செவிசாய்க்கும் நிலையில் அவரும் பாஜக வுக்கு ஆதரவாக செயல்படுவார் என்று தெரிகிறது.

அந்த வகையில் சில மாதங்களுக்கு நடந்த ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல்களில் காங்கிரஸின் கை ஓங்கியிருந்தது. இதனையடுத்து பாஜக தனது ஆட்சிக்குட்பட்ட பகுதிகளை இழந்து வருகிறது என கருத்துக்கள் எழுந்தது. இந்நிலையில் இந்த வெற்றிகளின் மூலம் பாஜக சட்டமன்ற தொகுதிகளின் வலிமையையும் நிரூபித்துள்ளதாகவே கருதப்படுகிறது.