Skip to main content

அறிவாலயத்துக்கு அல்வா! சேலம் திமுகவில் சலசலப்பு!!

Published on 20/07/2020 | Edited on 20/07/2020

 

salem district

 

உள்ளாட்சித் தேர்தலின்போது, ஆளுங்கட்சிக்கு முரட்டு விசுவாசம் காட்டியதாக எழுந்த புகாரின்பேரில் கட்டம் கட்டப்பட்ட ஏற்காடு ஒன்றியச் செயலாளர் ஏ.டி.பாலு மீண்டும் கட்சிக்குள் சேர்த்துக் கொள்ளப்பட்டதால், கிழக்கு மாவட்ட தி.மு.க.வில் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.


தமிழகத்தில் கடந்த டிசம்பரில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்தல் நடந்தது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டம் என்றாலும் கூட, சேலம் மாவட்டத்தில் 65 சதவீத ஊராட்சி மன்றத் தலைவர் பதவிகளைத் தி.மு.க. கைப்பற்றி கெத்து காட்டியது. அதேநேரம், 20 ஒன்றியக்குழுத் தலைவர் மற்றும் மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் பதவிகளை மொத்தமாக அ.தி.மு.க. கூட்டணி வாரிச்சுருட்டியது. 


இவற்றில் சேலம் கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட சேலம், ஏற்காடு, அயோத்தியாப்பட்டணம் ஆகிய ஒன்றியங்களில் தலைவர் பதவியைத் தி.மு.க. கைப்பற்றி விடும் நிலை இருந்தும் கூட, உடன்பிறப்புகளின் உள்ளடிகளால் கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டாத நிலை ஏற்பட்டது. ஆளுங்கட்சியின் குதிரை பேரத்தில், தி.மு.க.வில் யாரெல்லாம் ட்ரம்ப் கார்டாக இருந்தார்களோ அவர்கள் எல்லோருமே விலை போனார்கள். அந்தளவுக்கு கச்சிதமாக காய் நகர்த்தி இருந்தார், சேலத்தின் நிழல் முதல்வரான பெத்தநாயக்கன்பாளையம் இளங்கோவன்.


உடன்பிறப்புகளின் உள்ளடி வேலைகள் குறித்த புகார்கள் தலைமைக்கு பறந்ததால், உடனடியாகக் களையெடுப்பில் இறங்கினார் மு.க.ஸ்டாலின். சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் வீரபாண்டி ராஜாவை உடனடியாக அப்பதவியில் இருந்து தூக்கினார். அதுவரை மேற்கு மாவட்டச் செயலாளராக இருந்த எஸ்.ஆர்.சிவலிங்கம், கிழக்கு மாவட்டத்தின் புதிய பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். தேர்தல் பணிக்குழுவில் இருந்த டி.எம்.செல்வகணபதி, மேற்கு மாவட்ட பொறுப்பாளரானார்.


ஏற்காடு ஒன்றிய தி.மு.க. செயலாளராக இருந்த ஏ.டி.பாலு, தேர்தல் நேரத்தில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக முரட்டு விசுவாசத்துடன் நடந்து கொண்ட புகாரின்பேரில் கடந்த 21.1.2020ஆம் தேதி அதிரடியாக கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்நிலையில், அவரை ஜூலை 8ஆம் தேதி முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினராக தொடர்வார் என்றும், அவர் மீதான நடவடிக்கை ரத்து செய்யப்படுவதாகவும் கட்சித் தலைமை அறிவித்து இருப்பது சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க.வில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

 

sss

 

இது தொடர்பாக சேலம் கிழக்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் நம்மிடம் பேசினர்.


''உள்ளாட்சித் தேர்தலில் ஏற்காடு ஒன்றியக்குழுவில் மொத்தமுள்ள 6 இடங்களில் தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளிலும் தலா 3 பேர் கவுன்சிலர்களாக வெற்றி பெற்றனர். தி.மு.க. தரப்பில் கோகிலா சித்தேஸ்வரன், சின்னவெள்ளை, சேகர் ஆகியோர் வெற்றி பெற்றனர். இவர்களை அ.தி.மு.க. பக்கம் இழுக்க பெரிய அளவில் குதிரை பேரம் நடந்தது. அப்போது ஏற்காடு ஒன்றிய தி.மு.க. செயலாளராக இருந்த ஏ.டி.பாலு, ஆளுங்கட்சியினரிடம் இருந்து 40 லட்சம் ரூபாய் வாங்கிக் கொண்டு, அ.தி.மு.க.வுக்கு சாதகமாக ஓட்டுப்போடுமாறு வற்புறுத்தினார். இதற்காக கோகிலா சித்தேஸ்வரனுக்கு 5 லட்சம் ரூபாய் கொடுத்தார். ஆனால் அதன்பிறகு நடந்த பேரங்களில் தி.மு.க. தரப்பில் வெற்றி பெற்ற சேகரை துணைத்தலைவராக்கிவிட்டு அ.தி.மு.க.வுக்கு தலைவர் பதவியை விட்டுக் கொடுத்துவிட்டனர்.


கவுன்சிலர்கள் கோகிலா சித்தேஸ்வரன், சின்னவெள்ளை மற்றும் ஏற்காடு ஒன்றிய தி.மு.க. நிர்வாகிகள் சிலர் ஏ.டி.பாலுவும், அப்போதைய கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் வீரபாண்டி ராஜாவும் உள்ளாட்சித் தேர்தலின்போது அ.தி.மு.க.வுக்கு சாதகமாக வேலை செய்த விவரங்களை எல்லாம் அறிவாலயத்திற்கு நேரில் சென்று புகார் அளித்தனர். ஏ.டி.பாலு, அ.தி.மு.க.வை ஆதரிக்கச் சொல்லி தனக்குக் கொடுத்த 5 லட்சம் ரூபாயையும் தளபதியிடம் ஒப்படைத்தார், கோகிலா.


அதற்கு அடுத்த நாள் விளக்கம் அளிப்பதற்காக ஏ.டி.பாலு அறிவாலயம் சென்றபோது அவரை நேரில் சந்திப்பதையே தளபதி தவிர்த்து விட்டார். உடனடியாக அவரை கழகத்தில் இருந்து சஸ்பெண்ட் செய்து முரசொலியில் கட்டம் கட்டி அறிவிப்பும் வெளியானது. கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட பிறகும்கூட, ஏற்காடு ஒன்றியத்தில் கடைகள் ஏலம் விட்டபோது தி.மு.க. பெயரைச் சொல்லி ஆளுங்கட்சிக்காரர்களிடம் ஏ.டி.பாலு 'கட்டிங்' வாங்கினார். அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சித்ரா இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்டார். கட்சிக்கு விசுவாசமில்லாத ஏ.டி.பாலுவை சில நாள்களுக்கு முன்பு மீண்டும் கட்சியில் சேர்த்திருப்பது, எங்களுக்கு எல்லாம் மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது.


என்ன தப்பு செய்தாலும் கட்சி நம்மீது நடவடிக்கை எடுப்பதுபோல் எடுத்துவிட்டு மீண்டும் சேர்த்துக் கொள்ளும் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. மேலும், ஏ.டி.பாலுவை மீண்டும் கட்சிக்குள் கொண்டு வர, அவரிடம் இருந்து சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் எஸ்.ஆஸ்.சிவலிங்கத்துக்கு 5 லட்சம் ரூபாய் கைமாற்றப்பட்டு உள்ளது. இந்த விவரங்களை எல்லாம் அறிவாலயத்தில் நிர்வாகப் பொறுப்பில் இருக்கும் மூன்று பேர் தளபதியின் கவனத்துக்குக் கொண்டு செல்வதில்லை. தளபதிக்கு தெரிந்து இதுபோன்ற தவறு நடந்திருக்க வாய்ப்பே இல்லை. அவரையே ஏமாற்றித்தான் ஏ.டி.பாலுவை மீண்டும் கட்சிக்குள் கொண்டு வந்திருக்க வேண்டும்,'' என்கிறார்கள் கழக உடன்பிறப்புகள்.


ஏ.டி.பாலுவிடம் இருந்து கிழக்கு மாவட்டத்திற்கு பணம் வசூலித்துக் கொடுக்கும் தரகு வேலையை எஸ்.ஆர்.சிவலிங்கத்துக்கு நெருக்கமான கட்சிக்காரர் ஒருவர் செய்து கொடுத்ததாகவும் ஒரு தகவல் சொல்லப்படுகிறது. மேலும், கரூர் மாவட்ட தி.மு.க.வை முன்னுதாரணமாக வைத்து, சேலம் கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பத்து ஒன்றியங்களையும் அமைப்பு ரீதியாக இரண்டாக பிரிக்கவும் மாவட்டத் தலைமை யோசித்து வருவதாகவும் சொல்கிறார்கள். இதுவும் கட்சிக்குள் புதுக்குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 

 

salem district


இது தொடர்பாக நாம் சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் எஸ்.ஆர்.சிவலிங்கத்திடம் கேட்டோம்.

 

''ஏற்காடு ஒன்றியத்தில் ஏ.டி.பாலு கட்சியின் அடிப்படை உறுப்பினராகத்தான் சேர்க்கப்பட்டுள்ளார். இப்போதும் சொல்கிறேன், அவர் ஒருநாளும் ஒன்றிய பொறுப்புக்கு வரமாட்டார். கட்சித் தலைமைக்கு அவர் தன் தவறை உணர்ந்து வருத்தம் தெரிவித்து கடிதம் கொடுத்ததன் பேரில், கட்சித் தலைமைதான் அவரை மீண்டும் உறுப்பினராகச் சேர்த்து இருக்கிறது. இதில் என் பரிந்துரை எதுவும் இல்லை.


யாராவது அடிப்படை உறுப்பினராகச் சேர்வதற்காக 5 லட்சம் ரூபாய் கொடுப்பார்களா?. அந்தளவுக்கு பணம் கொடுக்கும் அளவுக்கு ஏ.டி.பாலு ஒன்றும் கோடீஸ்வரனும் கிடையாது. என் மீதான காழ்ப்புணர்வு காரணமாக கட்சிக்காரர்கள் சிலர் இவ்வாறான புகார்களைச் சொல்கிறார்கள். அதேபோல்தான், ஒன்றியங்களைப் பிரிக்கும் திட்டமும் என்னிடம் இல்லை. இருந்த இடத்தில் இருந்தே நிர்வாகம் செய்யும் அளவுக்கு தொழில்நுட்ப வசதிகள் எல்லாம் வந்துவிட்டது. அப்படியே செய்தாலும் அதெல்லாம் கட்சித் தலைமைதான் தீர்மானிக்கும்.


இரண்டுமுறை எம்.எல்.ஏ. ஆக இருந்தும்கூட நானெல்லாம் பரம்பரைச் சொத்துகளை விற்று கட்சிக்காக வேலை செய்பவன். இப்போதுகூட வாடகை வீட்டில்தான் இருக்கிறேன். சில பேர், கட்சிக்குள் குழப்பதை ஏற்படுத்த இப்படியெல்லாம் புகார்களைச் சொல்கிறார்கள்,'' என்றார் எஸ்.ஆர்.சிவலிங்கம்.

 

dddd

 

ஏற்காடு முன்னாள் ஒன்றியச் செயலாளர் ஏ.டி.பாலுவிடம் கேட்டபோது, ''உள்ளாட்சித் தேர்தலில், ஏற்காடு ஒன்றிய கவுன்சிலராக வெற்றி பெற்ற கோகிலா சித்தேஸ்வரன் அ.தி.மு.க.விடம் பேரம் பேசி வந்தார். அவரை தி.மு.க.வுக்கு ஆதரவாக ஓட்டுப்போடத்தான் 5 லட்சம் ரூபாயை துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சேகர் கொடுத்திருந்தார். அவர் அ.தி.மு.க. அணிக்கு போய்விடக்கூடாது என்பதற்காக, அவர் உள்பட தி.மு.க. .கவுன்சிலர்களை அப்போது டாப்சிலிப்பில் ஒரு ஹோட்டலில் அறை எடுத்து தங்க வைத்திருந்தேன். 

 

அந்தப் பணத்தைதான் நான் கொடுத்ததாக அவர் கட்சித் தலைமையிடம் கொடுத்தார். அந்தப் பணத்தையும் கட்சித் தலைமை கோகிலாவிடமே திருப்பிக் கொடுத்துவிட்டது. நான் ஒருபோதும் அ.தி.மு.க.விடம் பணம் பெறவில்லை. லாக் டவுனுக்கு முன்பே, என் தரப்பு விளக்கத்தை கட்சித் தலைமையிடம் கடிதம் மூலம் தெரிவித்து இருந்தேன். கிழக்கு மாவட்டக் கழக பொறுப்பாளரும் என் மீது தவறு இல்லை என்று தளபதியிடம் கூறினார். அதையடுத்துதான் நான் மீண்டும் கழகத்தில் சேர்க்கப்பட்டு உள்ளேன்,'' என்றார்.

 

http://onelink.to/nknapp


உள்ளாட்சித் தேர்தலில் கழகத்திற்கு எதிராகச் செயல்பட்டு வந்ததால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டவர்தான் ஏ.டி.பாலு. அப்போது எதிராகச் செயல்பட்டவர், மீண்டும் சட்டமன்ற பொதுத்தேர்தலின்போது ஆளுங்கட்சியிடம் சோரம் போகமாட்டாரா? என பதிலுக்கு கேள்வி எழுப்புகின்றனர் கழக உடன்பிறப்புகள். நியாயமான கேள்வி; தலைமைக்குப் புரிந்தால் சரிதான்.

 


 

சார்ந்த செய்திகள்

 

Next Story

“சூரியனை ஒருபோதும் மறைக்க முடியாது” - முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 13/07/2024 | Edited on 13/07/2024
The sun can never be hidden Chief Minister M.K. Stalin

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி திமுக எம்.எல்.ஏ புகழேந்தி உயிரிழந்ததைத் தொடர்ந்து அந்தத் தொகுதிக்குக் கடந்த 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா, பாஜக கூட்டணியில் உள்ள பாமக சார்பில் அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் சி.அன்புமணி ஆகியோர் போட்டியிட்டனர். இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (13.07.2024) எண்ணப்பட்டன. அதன்படி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில் முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது.

இதனையடுத்து 20 சுற்றுகள் முடிவில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 1 லட்சத்து 24 ஆயிரத்து 53 வாக்குகள் பெற்று 67 ஆயிரத்து 757 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாகத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதே வேளையில் பாமக வேட்பாளர் சி.அன்புமணி 56 ஆயிரத்து 26 வாக்குகளும், நாதக வேட்பாளர் அபிநயா 10 ஆயிரத்து 479 வாக்குகளும் பெற்றனர். 

The sun can never be hidden Chief Minister M.K. Stalin

இதற்கிடையே விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வெற்றி உறுதியான நிலையில் அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் சென்னையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகமான அறிவாலயத்திற்கு வருகை தந்துள்ளார். அங்குத் திரண்டிருந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினார்.

இந்நிலையில் விக்கரவாண்டி தேர்தலில் திமுக வெற்றி பெற்றது தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “எத்தனை பொய்களை ஒன்றாகத் தைத்துப் போர்வை நெய்தாலும், சூரியனை ஒருபோதும் மறைக்க முடியாது என்று விக்கிரவாண்டி மக்கள் உணர்த்தியுள்ளனர். அண்ணா அறிவாலயத்தில் பொங்கும் மகிழ்ச்சி தமிழ்நாடெங்கும் எதிரொலிக்கட்டும்!” எனக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பான காணொளி ஒன்றையும் அப்பதிவில் இணைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story

இடைத்தேர்தல் முடிவுகள்; இந்தியா கூட்டணி அபார வெற்றி!

Published on 13/07/2024 | Edited on 13/07/2024
by election results India alliance is a huge success

தமிழகம், மேற்கு வங்கம் உட்பட நாடு முழுவதும் உள்ள 7 மாநிலங்களில் காலியாக உள்ள 13 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இதனையடுத்து இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (13.07.2024) எண்ணப்பட்டன. இந்நிலையில் 13 தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் 10 தொகுதிகளில் இந்தியா கூட்டணி அபார வெற்றி பெற்றுள்ளது.

அதன்படி ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள டெஹ்ரா மற்றும் நலகர் ஆகிய இரு தொகுதிகளில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் பத்ரிநாத் மற்றும் மங்களூர் ஆகிய இரு தொகுதிகளில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. தமிழகத்தில் விக்கிரவாண்டி தொகுதியிலும், பஞ்சாப் மாநிலத்தில் ஜலந்தர் மேற்கு தொகுதியிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. மேலும் மேற்கு வங்கத்தில் உள்ள ராய்கஞ்ச், ரணகாட் தக்ஷின், பாக்தா மற்றும் மாணிக்தலா ஆகிய நான்கு தொகுதிகளில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.

இந்த இடைத்தேர்தல் முடிவின் படி காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலா 4 தொகுதிகளையும், ஆம் ஆத்மி, திமுக சார்பில் தலா ஒரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. அதே சமயம் பீகாரில் உள்ள ரூபவுலி தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் சங்கர் சிங் வெற்றி பெற்றுள்ளார். இமாச்சல பிரதேசத்தின் ஹமீர்பூர் உள்பட இரு தொகுதிகளில் மட்டுமே பாஜக வெற்றி பெற்றுள்ளது.