
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் வேலக்குறிச்சியில் உள்ள தனது இல்லத்தில் வியாழக்கிழமை (01.07.2021) இரவு முன்னாள் அமைச்சர் பூ.ம. செங்குட்டுவன் காலமானார். அவரது இறுதிச் சடங்குகள் சனிக்கிழமை அதே ஊரில் நடைபெறுகிறது.
மணப்பாறையை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் வேலக்குறிச்சியில் பூதன் (எ) மலையாண்டி – நாச்சியம்மாள் தம்பதியினருக்கு 20.06.1941 நாளில் 2வது மகனாக பிறந்தவர் பூ.ம. செங்குட்டுவன். அழகம்மாள் என்ற சகோதரியும், வடமலை, ஈசியம்மாள் என்ற மறைந்த சகோதர சகோதரியும் உடன் பிறந்தவர்கள். முதுகலை தமிழ் இலக்கியம் படிப்பு முடித்தவர். புலவர் என்று முன்னாள் முதல்வர் கலைஞரால் அழைக்கப்பட்டவர். 1966க்கு முன்னரே முன்னாள் முதல்வர் அண்ணா காலத்திலிருந்தே மருங்காபுரி பகுதியின் திமுக ஒன்றியச் செயலாளராக 7 முறை பதவில் இருந்தவர்.
1985 – 91 ஆண்டுகளில் மருங்காபுரி ஒன்றிய பெருந்தலைவராகவும் பதவி வகித்தார். பின் 1996இல் நடைபெற்ற தமிழ்நாடு பொதுத்தேர்தலில் மருங்காபுரி சட்டப்பேரவை உறுப்பினராக வெற்றிபெற்ற செங்குட்டுவன், திமுக அமைச்சரவையில் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் கால்நடைத்துறை அமைச்சராக பதவி வகித்தார். இவருடைய பதவிக் காலத்தில் நகர் புறங்களில் மட்டுமே இருந்துவந்த காவிரி குடிநீர், கிராமப்புறப் பகுதிகளுக்கும் சென்றது குறிப்பிடத்தக்கது. மேலும், மணப்பாறை, மருங்காபுரி பகுதிகளில் அதிக நகரப் பேருந்து வழித்தடங்களும், மணப்பாறை மாரியம்மன் கோயில் திருமண மண்டபம், துவரங்குறிச்சி பூதநாயகி அம்மன் ஆலய மண்டபங்கள் இவருடைய காலங்களில் கொண்டு வரப்பட்டவையாகும். மிசா வழக்கில் கைது செய்யப்பட்ட செங்குட்டுவன் ஒருவருட சிறைவாசம் சென்றவர் என்பதும், திமுக கட்சி சார்பில் சுமார் 60முறை சிறை சென்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. திமுகவின் முன்னாள் தலைவர் மறைந்த கலைஞரின் 'நெஞ்சுக்கு நீதி' புத்தகத்திலும் செங்குட்டுவன் பெயரை கலைஞர் குறிப்பிட்டிருந்தார் என்பது இவருக்கு புகழாரம்.

கடந்த 2013ஆம் ஆண்டு, திமுகவில் இருந்து அதிமுகவுக்குச் சென்ற புலவர் செங்குட்டுவனுக்குத் தலைமை செயற்குழு உறுப்பினர் பதவி அளித்தார் அன்றைய தமிழ்நாடு முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா. பின் கடந்த பிப்ரவரி 25இல் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், முதன்மைச் செயலாளர் கே.என். நேரு, மகளிரணிச் செயலாளர் கனிமொழி, இளைஞரணி துணைச் செயலாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோருடன் சென்று மு.க. ஸ்டாலின் முன்னிலையில் தன்னை மீண்டும் திமுகவில் இணைத்துக்கொண்டார்.

கடந்த 1997இல் இருதய அறுவை சிகிச்சை செய்துகொண்ட செங்குட்டுவன், பின் 2019இல் மீண்டும் காலில் அறுவை சிகிச்சை செய்துகொண்டார். இந்நிலையில், கடந்த 15 தினங்களுக்கு முன் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை முடிந்து வீடு திரும்பிருந்த செங்குட்டுவன், வியாழக்கிழமை (01.07.2021) அன்று முச்சுத்திணறல் ஏற்பட்டு மணப்பாறை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இரவு வீடு திரும்பிய அவர் வெள்ளிக்கிழமை காலை சுமார் 9.25 மணியளவில் வேலக்குறிச்சி அவரது இல்லத்திலேயே உயிரிழந்தார்.
பூ.ம. செங்குட்டுவனுக்கு சின்னம்மாள்(74) என்ற மனைவியும், பன்னீர்செல்வம் (54), சக்திவேல் (50) என்ற மகன்களும் மீனாட்சி (47) என்ற மகளும் உள்ளனர். மேலும் பாரதிதாசன் (33), வள்ளி (47) ஆகிய வளர்ப்பு குழந்தைகளும் உண்டு.
செங்குட்டுவனின் மறைவிற்கு திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என். நேரு, அன்பில்.மகேஷ் பொய்யாமொழி, மணப்பாறை சட்டப்பேரவை உறுப்பினர் ப. அப்துல்சமது ஆகியோர் தங்களது இரங்கலைத் தெரிவித்துள்ளனர். மறைந்த முன்னாள் அமைச்சர் பூ.ம. செங்குட்டுவனின் இறுதிச் சடங்குகள் சனிக்கிழமை காலை சுமார் 12.30 மணியளவில் வேலக்குறிச்சி அவரது ஊரில் நடைபெறுகிறது.