தீபாவளி வரப் போகிறது நம் பகுதியில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் ஏங்கித் தவிக்கக் கூடாது என்பதற்காக சுமார் 25 குழந்தைகளை சுற்றுலா வேனில் அழைத்துச் சென்று புத்தம், புது உடைகள் வாங்கிக் கொடுத்து கண்ணாடி, செப்பல், காதணிகள் என அவர்கள் விரும்பிய பொருட்களை வாங்கிக் கொடுத்து மதியம் அசைவ உணவளித்து கடற்கரைக்கு அழைத்துச் சென்று குதிரை ஏற்றம், ரயில் பயணம், மாலையானதும் பட்டாசு பாக்ஸ்கள் வழங்கி குழந்தைகளின் மகிழ்வான முகங்களைப் பார்த்து மகிழ்ந்திருக்கிறார்கள் ‘பாரதப் பறவைகள்’ இளைஞர்கள்.
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகில் உள்ள குளமங்கலம் கிராமத்தில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு உள்ளூர் மற்றும் வெளியூர், வெளிநாடுககளில் உள்ள இளைஞர்கள் இணைந்து தங்கள் ஊரில் உள்ள நலிவடைந்தவர்களுக்கு உதவும் நோக்கில் தொடங்கிய பாரதப் பறவைகள் சமூக நல அமைப்பு மூலம் சந்தா வசூலித்து பலருக்கும் வாழ்வாதாரம் கொடுத்தனர். தையல் இயந்திரம், சைக்கிள்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர சைக்கிள்கள், சலவைப் பெட்டிகள், சிறுவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் கொடுப்பதுடன் விளையாட்டுப் போட்டிகள் நடத்துவது, பொது இடங்களில் மரக் கன்றுகள் நட்டு வளர்ப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.
தொடர்ந்து சொந்தப் பணத்தில் மக்கள் நலப்பணிகளில் ஈடுபட்டுள்ள பாரதப் பறவைகளைப் பற்றி அறிந்த கீரமங்கலம், கொத்தமங்கலம், எரிச்சி எனப் பல கிராமங்களில் இருந்தும் ஏராளமான இளைஞர்கள் தங்களையும் இணைத்துக் கொண்டனர். சில வருடங்களுக்கு முன்பு சந்தையில் காய்கறி விற்றுச் சேர்த்து வைத்த தொகையைக் கொடுத்து ‘இல்லாதவங்களுக்கு உதவி செய்ங்கப்பா’ என்று ஒருவர் சொன்னபோது நெகிழ்ந்து போனார்கள்.
நலிவுற்றவர்களைத் தேடிக் கண்டுபிடித்து ஒவ்வொரு ஆண்டும் பல லட்ச ரூபாய்க்கு பலருக்கு உதவிகள் செய்து வருகின்றனர். இந்த நிலையில் தான் தற்போது கீரமங்கலம், கொத்தமங்கலம், குளமங்கலம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் தாய், தந்தையை இழந்து பாட்டிகளின் பாதுகாப்பில் உள்ள, நலிவுற்ற குடும்பங்களில் உள்ள குழந்தைகள் 25 பேரைக் கண்டறிந்து அவர்களை வேனில் அழைத்துச் சென்று பெரிய ஜவுளிக்கடையில் குழந்தைகள் விரும்பிய உடைகளையும் கண்ணாடி, செப்பல்கள், அலங்காரப் பொருட்களை வாங்கிக் கொடுத்து மதியம் அசைவ உணவு கொடுத்து கீரமங்கலம் பிரமாண்ட சிவன் சிலை, தலைமைப் புலவர் சிலை கொண்ட மெய்நின்றநாத சுவாமி ஆலயம், தஞ்சை மாவட்டம், புதுப்பட்டினம் பீச் ஆகிய இடங்களுக்கும் அழைத்துச் சென்று குழந்தைகளை சந்தோசமாக விளையாடவிட்டு சிற்றுண்டி வாங்கிக் கொடுத்து குதிரை ஏற்றம், ரயில் பயணம் செய்ய வைத்து 1000 ரூபாய் மதிப்புள்ள பட்டாசு பெட்டிகளையும் கொடுத்து ஒரு நாள் அந்த குழந்தைகளை மகிழ்வித்து மகிழ்ந்துள்ளனர்.
இது குறித்து பாரதப் பறவைகள் இளைஞர்கள் கூறும்போது, “ஒவ்வொரு ஊரிலும் தொடங்குவது போல இளைஞர் மன்றம் தொடங்கி நலிவுற்றவர்களுக்கு உதவிகள் செய்யும் அமைப்பானது 'பாரதப் பறவைகள்'. குளமங்கலத்தில் தொடங்கிய அமைப்பு இன்று கடல் கடந்தும் விரிந்துள்ளது. தனியாக ஒருவருக்கு உதவி செய்வதைவிட கூட்டாகப் பலருக்கு உதவி வருகிறோம்.
இந்த வருடம் தீபாவளிக்காக பல நலிவுற்ற குடும்ப குழந்தைகள், தாய் தந்தையை இழந்து நிற்கும் குழந்தைகளை மகிழ்விக்க நினைத்தோம். 25 குழந்தைகளை அழைத்துச் சென்று உணவு, உடை, பட்டாசு வாங்கிக் கொடுத்து கடற்கரைக்கு அழைத்துச் சென்று கடலில் குளிக்க வைத்து ரயிலில் ஏற்றிச் சுற்ற வைத்து குதிரை ஏற அழைத்துச் சென்றபோது குதிரை ஓட்டும் அய்யா இந்தக் குழந்தைகளுக்காக நான் பணம் வாங்கவில்லை என்று குழந்தைகளை குதிரையில் ஏற்றிக் கடற்கரையை சுற்றிக் காட்டி மகிழ்ந்தார். அந்தக் குழந்தைகளின் முகங்களில் அந்த ஒரு நாள் சந்தோசம் எல்லையற்றதாக இருந்தது. குழந்தைகளின் மகிழ்ச்சியால் நாங்களும் மகிழ்ச்சியடைந்தோம்” என்றனர்.
தங்களின் எவ்வளவோ வருமானத்தில் சிறு துரும்பு அளவு உதவிகள் செய்யும்போது ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவில்லை தான். இதேபோல ஒவ்வொரு ஊரிலும் நலிவுற்ற குழந்தைகளுக்கு சின்னச் சின்ன உதவிகள் செய்வதால் அவர்களும் மகிழ்வார்கள் உதவிகள் செய்யும் நமக்கும் மனம் நிறைவாக இருக்கும்.