தமிழ்நாட்டிலேயே அதிக நிலப் பரப்பளவு கொண்டுள்ள ஒரே மாவட்ட ஆட்சியர் அலுவலகம் புதுக்கோட்டை. ஆம் 100 ஏக்கர் நிலத்தின் மையத்தில் உள்ளது ஆட்சியரின் கோட்டை. சுற்றிலும் வனம். 100 வகைக்கு மேல் மரங்கள், ஆங்காங்கே பறவைகள், விலங்குகளை ஈர்த்து வைக்கும் பழ மரங்கள். இப்படியான இடத்தில் தான் இன்று மரங்கள் கருகி வருகிறது. பறவைகளும், குரங்குகளும் இடம் பெயர்ந்து சென்று செத்து மடிகிறது.
அதாவது மயில்களின் சரணாலயம் விராலிமலை என்றாலும் அங்கே போதிய பாதுகாப்பும், வசதிகளும் இல்லாமல் மயில்கள் வெளியேறத் தொடங்கிவிட்டது. அதே போல மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைந்துள்ள வனத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை சுமார் ஆயிரம் மயில்கள் இருந்தது. குரங்குகள், பல ஆயிரம் பறவைகள் வாழ்ந்தது. ஆனால் இப்போது எல்லா சில என்ற அளவில் மாறிவிட்டது. ஏன் இப்படி ஆனது என்றால் பறவை, விலங்குகளுக்கு போதி தண்ணீர் வசதி செய்யவில்லை என்பதால் இறை தேடியும், தண்ணீருக்காகவும் இடம் பெயரும் போது விபத்துகளில் சிக்கி உயரிழக்கிறது.
இந்த நிலையில் தான் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு மயில், போன்ற பறவைகளுக்காகவும், குரங்குகள் போன்ற உயிரினங்களுக்காகவும் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய வனத்தில் ஆங்காங்கே தண்ணீர் தொட்டிகளை அமைத்தார்கள். அதில் ஜெ ஜெயலலிதாவின் பெயரை காட்டும்விதமாக ஜெ ஜெ என்ற எழுத்தில் தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டது. அந்த தொட்டிகள் இப்போது உள்ளதா என்று பார்த்தார் குப்பை குழியாக காட்சி அளிக்கிறது. ஜெ மறைந்த பிறகு அவர் பெயரில் உள்ள தொட்டியும் குப்பைக் குழியாக்கிவிட்டார்கள் என்பது தான் வேதனை.
இந்த நிலையில் தான் இயற்கை விவசாயி தனபதி உயர்நீதிமன்றம் சென்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தண்ணீர் இல்லாமல் மயில், முயல், குரங்கு பறவைகள் போன்ற உயிரினங்கள் அழிந்து வருகிறது அதனால் தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட வேண்டும் என்று வழக்கு தொடுத்தார். அதில் மாவட்ட ஆட்சியர் தண்ணீர் தொட்டிகளை அமைக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனால் தற்போது 3 அடி வட்டமுள்ள முக்கால் அடி உயரத்தில் 20 இடங்களில் தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டு உள்ளது. சில இடங்களில் பானைகளில் தண்ணீர் வைக்கப்பட்டு சாலைகளில் அரிசிகள் இறைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறும் போது.. முன்பு ஆட்சியர் அலுவலக வனத்தில் ஆயிரக்கணக்காண மயில்கள் சுற்றி வரும், குரங்குகள், முயல்கள், பறவைகள் ஓடி திரியும். கடுமையான வறட்சி ஏற்பட்டதால் தண்ணீர் இல்லை. அந்த நேரத்தில் தான் அப்போதைய முதல்வரின் இரண்டு எழுத்துகளை ஜெ.ஜெ என்று ஆங்கிலத்தில் தண்ணீர் தொட்டிகளில் வடிவமைத்தார்கள். கொஞ்ச நாள் தண்ணீர் ஊற்றி உயிரினங்களை காத்தவர்கள். பிறகு விட்டுவிட்டார்கள். தற்போது புயல் தாக்கி பல ஆயிரம் மரங்கள் ஒடிந்து விட்டது எஞ்சியுள்ள மரங்களில் தெண்ணீர் இன்றி உணவின்றி பறவைகளும், விலங்குகளும் உள்ளது. அவைகளும் ஓடிவிடாமல் தடுக்க தண்ணீர் தொட்டிகள் அமைக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கை. ஆனால் நீதிமன்றம் சொன்ன நீதிமன்றத்திற்கு காட்டுவதற்காக 3 அடி வட்டத்தில் உறை தொட்டிகளை வைக்கிறார்கள். அடிக்கிற வெயிலுக்கு அதில் ஊற்றப்படும் தண்ணீர் ஆவியாகி காணாமல் போய்விடும் நிலை தான் உள்ளது. அதனால் தான் 20, 30 அடி நீலத்திற்கு அகலமான உயரம் குறைவான தொட்டிகளின் உள்ளே சில தடுப்பு சுவர்களை கட்டி தண்ணீர் நிரப்பினால் அந்த தண்ணீர் தேங்கி நிற்கும். மழை காலங்களிலும் தண்ணீர் தேங்கி நிற்கும். அதை செய்யாமல் நீதிமன்றத்திற்கு காட்டுவதற்காக அவசர கோலத்தில் சின்ன சின்ன தொட்டிகளை வைப்பதால் தண்ணீர் தான் வீணாகும் என்றனர்.
செய்யும் வேலையை பயனுள்ள வேலைகளாக செய்தால் நல்லது.