மும்பைக்குள் பயணம் செய்யவேண்டுமென்றாலே எல்லோரும் நமக்கு முதலில் சொல்வது, லோக்கல் ரயிலிலேயே செல்லுங்கள் என்று, IT வேலையென்றாலும் அரசு வேலையென்றாலும் தொழிலாளிகளென்றாலும் மும்பையில் பயணிப்பதற்கு அதிகமாக பயன்படுத்துவது லோக்கல் ரயில்களைதான். ஒரு நாளுக்கு எல்பின்ஸ்டோன் ரயில் நிலையத்தை மட்டுமே 3.5 லட்சம் பயணிகள் பயன்படுத்துவதாகக் கூறப்படுகிறது. இவ்வளவு அதிக மக்கள் பயணிக்கும் இந்த ரயில் நிலையத்தில் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 29 தேதி ஒரு கோரச்சம்பவம் நிகழ்ந்தது. எல்பின்ஸ்டோன் ரயில் நிலையத்திலிருந்து பரேல்க்கு செல்லும் நடைமேம்பாலத்தில் கூட்ட நெரிசலின் காரணமாக இருபத்தி மூன்று பேர் மரணமும் முப்பத்தி ஒன்பது பேர் காயமும் அடைந்தனர். இந்த சம்பவத்தால் இந்தியாவே அதிர்ந்தது. அந்த ரயில் நிலையத்தை பயன்படுத்திய மக்கள் அரசாங்கத்தை கடுமையாகச் சாடினர்.
லட்சக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வந்த இந்த நடைமேம்பாலம் 45 வருடங்களுக்கு முன்னர் கட்டப்பட்டது. இது குறுகலான நடைபாலம். காலபோக்கில், அந்த ரயில் நிலையத்தை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை அதிகமாகியது. இருந்தும் அரசாங்கம் இந்த குறுகலான பாலத்தைப் பற்றி எந்த கவலையும் இன்றி இருக்க, இறுதியாக யாரும் எதிர்பாராத அந்த துயரசம்பவம் நேர்ந்தது. கடந்த வருடத்தில் இந்தியாவில் பல ரயில்கள் தடம்புரண்டன. இதன்மூலம் முன்னாள் ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு மாற்றப்பட்டு அந்த பதவிக்கு பியூஸ் கோயலை கொண்டுவந்தனர். அவர் பதவியேற்று ஒரு மாதத்தில் தான் இந்த எல்பின்ஸ்டோன் சம்பவம் நடந்தேறியது. 'விரைவில் இந்தப் பாலம் சீரமைக்கப்படும். மேலும் பல நிலையங்களில் நடைமேம்பாலம் சீர்செய்யப்படும்' என்றார்.
எல்பின்ஸ்டோன் ரயில் நிலையம், கரி சாலை, அம்பிவ்லி ரயில் நிலையம் போன்ற மூன்று ரயில் நிலையங்களையும் விரைவில் முடித்து மக்களுக்கு நடைமேம்பாலத்தை பயன்பட இராணுவத்திடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. ரயில்வே நிர்வாகம், 'நாங்கள் நடைமேம்பாலத்தை எடுத்துக் கட்ட வேண்டுமானால் எங்களுக்கு ஓராண்டாவது காலஅவகாசம் தேவை' என்றது. அதன் காரணமாகத்தான் இந்தத் திட்டம் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்திற்கு பின்னர் விழித்த அரசு 56 நடைமேம்பாலங்களை 12 மாதங்களுக்குள் கட்டி முடிக்க டென்டர்விட்டது. இதில் 22 நடைமேம்பாலங்கள் ஜூன் மாதத்துக்குள் கட்டிமுடிக்கப்படும் என்று கூறியிருக்கின்றனர். ஏற்கனவே கடந்த வருடம் அக்டோபர் மாதமே 20 நடைமேம்பாலங்களைக் கட்ட ஆரம்பித்துவிட்டனர். இராணுவத்தால் கட்டப்பட்ட இந்த மூன்று ரயில்நிலைய நடை மேம்பாலங்களும் இதில் சேரும்.
இராணுவத்தால் கட்டப்பட்ட இந்த மூன்று நடைமேம்பாலங்கள், 117 நாட்களிலேயே கட்டிமுடிக்கப்பட்டது. எல்பின்ஸ்டோன் நடைமேம்பாலம் 73 மீட்டர் நீளம். அதை கட்டிமுடிக்க 10 கோடி செலவாகியுள்ளது. கரி ரோடு நடைமேம்பாலம் 30 மீட்டர் நீளம், 3 கோடி செலவாகியுள்ளது. அம்பிவ்லி நடைமேம்பாலம் 20 மீட்டர் நீளம், கட்டிமுடிக்க 3 கோடி செலவுமாகியுள்ளது. இந்த நடைபாலங்கள் 80 டன் வரை தாங்கும் என்கின்றனர். ஜனவரி இறுதிக்குள்ளே முடிக்கப்படும் என்று சொல்லப்பட்ட இந்த மூன்று நடைமேம்பாலங்களும் சில காரணங்களால் காலதாமதம் ஏற்பட்டு பிப்ரவரி 27 தேதி செவ்வாய் கிழமை அன்று மும்பையின் புகழ் பெற்ற டப்பாவாலாஸ், கூலிவேலை செய்பவர்கள் மற்றும் பயனிகள் மூலம் இது திறந்துவைக்கப்பட்டுள்ளது. ரயில்வே மந்திரி பியூஸ் கோயல் பேசுகையில், "முழுக்க முழுக்க இராணுவத்தின் மூலம்தான் இந்த நடைபாலம் இவ்வளவு குறுகிய காலகட்டத்தில் சாத்தியமாகியுள்ளது" என்றார். கூட்ட நெரிசலில் தன் மகனை இழந்த ஒரு தாய், " புதிதாக கட்டிய நடைபாலத்தினால் ஒன்றும் என் மகன் வரப்போவதில்லை" என்று விரக்தியுடன் கூறியிருக்கிறார். பலரின் உயிர்கள் காவு கொடுக்கப்படாமல் இவர்கள் இக்காரியத்தை செய்திருந்தால், இந்த தாயும் பாலத்தை கட்டியதற்கு பாராட்டியிருப்பார். ஆனால், எந்த பிரச்சனையென்றாலும் அரசின் கவனத்தை ஈர்க்க மக்கள் தங்களையே நரபலி கொடுக்கவேண்டுமே!