Skip to main content

கருத்துக்கணிப்புகள் ஜெயிக்குமா?

Published on 20/05/2019 | Edited on 20/05/2019

2016 தேர்தல் தமிழகத்துக்கே புதிய தேர்தல். அதிமுக தனித்து நிற்கிறேன் என்று 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டது. அதாவது காங்கிரஸ் முஸ்லிம் லீக் தவிர மற்ற எந்தக் கட்சிகளையும் திமுகவுடன் சேரவிடாமல் தனி அணி அமைத்து போட்டியிடச் செய்து, தனது கூட்டணிக் கட்சிகளையும் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிடச்செய்தது.
 

loksabha election 2019



அந்தத் தேர்தலில் மக்கள் நலக்கூட்டணி என்ற பெயரில் ஒரு அணி அமைந்து மாற்றத்தை முன்னிறுத்தி போட்டியிட்டது. பாமக தனியாகவும், பாஜக தனி அணியாகவும் போட்டியிட்டன.

இந்தத் தேர்தலில் அதிமுக கூட்டணி 87 தொகுதிகளிலும், திமுக கூட்டணி 141 தொகுதிகளிலும், ம.ந.கூ. 1 தொகுதியிலும், பாமக 2 தொகுதியிலும், பாஜக கூட்டணி 1 தொகுதியிலும், 2 தொகுதியில் இழுபறி நிலை என்றும் நியூஸ் 7, தினமலர் நாளிதழ் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பு கூறியது.

அதிமுக கூட்டணி 164  தொகுதிகளிலும் திமுக கூட்டணி 66 இடங்களிலும் வெற்றிபெறும் என்று புதிய தலைமுறை தொலைக்காட்சி கணித்திருந்தது. வேறு எந்தக் கட்சிக்கும் தொகுதி கிடைக்காது என்று கூறியிருந்தது. இரண்டு கணிப்புகளுமே பொய்யாகியது. புதிய தலைமுறை கணிப்பில் வேறு எந்தக் கூட்டணிக்கும் இடங்கள் கிடைக்காது என்பது மட்டும் சரியாகியது.

1999 தேர்தலில் பாஜக வெற்றிபெற்று வாஜ்பாய் தலைமையில் ஆட்சி அமைந்தது. ஓரளவு நல்ல விஷயங்கள் நடந்தன. ஆனால், கோத்ரா கலவரம் சர்வதேச அளவில் இந்தியாவுக்கு அவமானத்தை ஏற்படுத்தியது. 2004 தேர்தலில் காங்கிரஸ் தலைமையில் திமுக உள்ளிட்ட மாநிலக் கட்சிகள் அணி அமைத்து போட்டியிட்டன. அந்தத் தேர்தலில் ஒளிரும் இந்தியா என்று பாஜக கோடிக்கணக்கில் பணம் செலவழித்து விளம்பரம் செய்தது. கருத்துக்கணிப்புகளும் பாஜகதான் ஜெயிக்கும் என்று கூவின. ஆனால், காங்கிரஸ் தலைமையிலான அணி வெற்றிபெற்று மன்மோகன்சிங் தலைமையில் ஆட்சி அமைத்து.

 

 

loksabha election 2019



2009ல் நடந்த தேர்திலிலும் காங்கிரஸே மீண்டும் ஆட்சி அமைத்தது. 2014 தேர்தலுக்காக 2011 ஆம் ஆண்டிலிருந்து மோடியை புரமோட் செய்து, இல்லாத போட்டோஷாப் வேலைகளையெல்லாம் செய்து பில்டப் செய்து, 56 இன்ச் மார்பன் என்றெல்லாம் பட்டம்கட்டி சந்தித்த தேர்தலில் பாஜக கூட்டணிக்க்கு கிடைக்கும் இடங்கள் என்று வெவ்வேறு கருத்துக்கணிப்புகள் வெளியாகின. பாஜக அதிகபட்சமாக 340 பெறும் என்று ஒரு கருத்துக்கணிப்பு வெளியானது. காங்கிரஸ் கூட்டணி அதிகபட்சம் 148 பெறும் என்று ஒரு கருத்துக்கணிப்பு வெளியாகியது.

அந்தத் தேர்தலில் பாஜக கூட்டணி 336 இடங்களையும், காங்கிரஸ் கூட்டணி 59 இடங்களையும், இதரக்கட்சிகள் 148 இடங்களையும் பெற்றன. அப்போதிருந்த கூட்டணியும் இப்போது இல்லை. அப்போதிருந்த பொருளாதார நிலையும் இப்போது இல்லை. மோடியால் விளைந்த கேடுகள்தான் அதிகம். இப்படி இருக்கும்போது இப்போது வரிசைகட்டி வரும் கருத்துக்கணிப்புகள் எப்படி உண்மையாக இருக்கும்?
 

 

loksabha election 2019



இந்தக் கருத்துக்கணிப்புகளின் பின்னணியில் பாஜகவின் மலிவான தந்திரம் இருக்கிறது. இந்த தந்திரத்துக்கு ஊடகங்கள் பலியாகி இருக்கின்றன. அதாவது, தேர்தல் முடிவுகளுக்கு முன் எதிர்க்கட்சிகள் இணைந்து ஒரு கூட்டணியை அமைத்து, அரசு அமைப்பது தொடர்பாக உடனடி முடிவுக்கு வந்துவிடக்கூடாது என்ற மலிவான நோக்கம் பாஜகவுக்கு இருக்கிறது.

அதாவது, வாக்கு எண்ணிக்கை முடிவுகள் காங்கிரஸுக்கு அதிக இடங்கள் கிடைத்தால் யார் பிரதமர் வேட்பாளர்? எதிர்க்கட்சிகளுக்கு அதிக இடம் கிடைத்தால் யாருக்கு பிரதமர் பதவி? எந்தெந்தக் கட்சிகளுக்கு அமைச்சரவையில் என்ன இடம் என்பதையெல்லாம் பேசி இறுதி செய்து குடியரசுத் தலைவருக்கு விண்ணப்பம் அளித்துவிடாமல் தடுக்கவே இந்த ஏற்பாடு என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள்.

அதாவது, பாஜக தனிப்பெருங்கட்சியாக வந்துவிட்டால், தன்னை அரசு அமைக்க அழைக்கும்படி குடியரசுத்தலைவரிடம் பாஜக விண்ணப்பம் கொடுக்கலாம். அவர் அழைத்துவிட்டால் எதிர்க்கட்சிகளை பேரம்பேசி வளைக்க பாஜக திட்டமிடலாம். அதற்கான வாய்ப்பை பாஜகவுக்கு கொடுக்காமல் தங்களுக்குள் உடன்பாடு எதையும் எதிர்க்கட்சிகள் எட்டிவிடக் கூடாது என்பதே இத்தகைய கருத்துக்கணிப்பு கண்றாவிகள் என்றும் அவர்கள் கருதுகிறார்கள்.