டெல்லியில் அதிகரித்து வரும் கரோனா பாதிப்புகளால் தேவையான படுக்கை வசதிகள் இல்லாமல் பல சவால்களை எதிர்கொண்டு வருகிறார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்! கரோனா வைரஸ் பரவிய ஆரம்பக் கட்ட காலத்திலிருந்தே முதல்வர் கெஜ்ரிவாலுக்கும், மாநில அரசை கட்டுப்படுத்தும் துணை நிலை ஆளுநர் அனில் பைஜாலுக்கும் முட்டல் மோதல் அதிகரித்தபடியே இருக்கிறது.
கரோனா பரவலை தடுப்பதில் கெஜ்ரிவால் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் முட்டுக்கட்டைப் போடும் விதத்தில் குற்றசாட்டுகளை கூறி வந்தார் அனில் பைஜால். அவரின் குற்றசாட்டுகளுக்குப் பின்னணியில் மத்திய பாஜக அரசின் அரசியல் அழுத்தம் இருப்பதாக ஆம் ஆத்மி குற்றம்சாட்டியது. அதற்கேற்ப, பைஜாலை முன்னிறுத்தி இப்போது வரை அரவிந்த் கெஜ்ரிவாலோடு மோதல் போக்கினை நடத்திக் கொண்டிருக்கிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா.
டெல்லியில் 80 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கான சிகிச்சை மையங்கள், கரோனா தடுப்பு நடவடிக்கைகள் என அனைத்து நடவடிக்கைகளையும் துரிதமாக எடுத்திருக்கிறது ஆம் ஆத்மி அரசு.
டெல்லி அரசு மருத்துவமனைகளில் கோவிட் 19-க்காக உருவாக்கப்பட்ட படுக்கைகளை மத்திய உள்துறை அமைச்சகம் ஆக்ரமிக்க திட்டமிட்ட நிலையில்தான், தலைநகரில் வசிப்பர்களுக்குத்தான் படுக்கைகளில் முன்னுரிமையளிக்கப்படும் என அறிவித்தார் கெஜ்ரிவால். இதனை சர்ச்சையாக்கிய மத்திய பாஜக அரசு, உச்சநீதிமன்றத்தில் முறையிட்டது. உச்சநீதிமன்ற உத்தரவினால் முந்தைய கருத்தை திரும்ப பெற்றுக் கொண்டார் கெஜ்ரிவால்.
ஆனால், கரோனா படுக்கை விஷயங்களை மையப்படுத்தி தொடர்ச்சியான அரசியலை செய்து வருகிறார் அமித்சா. துணை ஆளுநர் பைஜாலை தூண்டிவிட்டு, எந்த ஒரு நோயாளிக்கும் சிகிச்சை அளிக்க மறுக்கப்படக்கூடாது என சொல்ல வைத்ததுடன், கோவிட்-19 அறிகுறிகளை கொண்டவர்களை மட்டுமே பரிசோதிக்கும் கெஜ்ரிவால் அரசின் உத்தரவை ரத்து செய்ய வைத்தார் அமித்சா.
இதற்கு பதிலடி தந்த கெஜ்ரிவால், “அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள அனைத்து கோவிட் 19 சிகிச்சை வசதிகளையும் எந்த பாகுபாடு காட்டாமல் செய்து வருகிறோம். மத்திய அரசுதான் மாநில அரசின் நடவடிக்கைகளில் குறுக்கீடு செய்தபடி இருக்கிறது. துணை நிலை ஆளுநரின் உத்தரவு டெல்லி மக்களுக்கு ஒரு பெரிய பிரச்சனையையும், சவாலையும் உருவாக்கியுள்ளது” என குற்றம் சாட்டினார்.
கெஜ்ரிவால் அரசின் அதிகாரிகள், “டெல்லி மருத்துவமனைகளில் கரோனா பாதிப்பாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காகவே 90 சதவீத படுக்கை வசதிகளை ஏற்படுத்தியிருக்கிறோம். ஜூன் இறுதிக்குள் மேலும் 15,000 படுக்கைகள் தேவைப்படும். அதற்கான வேகமான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். இதற்காக, 5 பேர் கொண்ட மருத்துவ குழுவின் அமைத்தார் முதல்வர் கெஜ்ரிவால். மருத்துவ குழுவின் ஆலோசனைகளை முழுமையாக நிறைவேற்றும் வகையில் நாங்கள் செயலாற்றி வருகிறோம்” என தெரிவித்தனர். துணை நிலை ஆளுநர் அனில்பைஜால் மூலம் அமித்ஷா முன்னிறுத்தும் அரசியலை சுகாதார அதிகாரிகளை அவைத்து உடைக்கத் துவங்கியிருக்கிறார் கெஜ்ரிவால்.
இதற்கிடையே, மருத்துவ உபகரணங்கள் விஷயத்தில் கெஜ்ரிவால் அரசை குற்றம்சாட்ட மத்திய பாஜக அரசு பல்வேறு தகவல்களை கசியவிட்டன. இதற்கு பதிலளித்த துணை முதல்வர் சிசோடியா, “பிபிஇ கிட் மற்றும் வெண்டிலேட்டர் கொள்முதல் மோசடியில் பாஜகவினர்தான் பிஸியாக இருக்கிறார்கள். அந்த பேரழிவை ஒடுக்க டெல்லி அரசு முயற்சிக்கிறது. இதனை ஜீரணிக்க முடியாமல் மலிவான அரசியலை விளையாடுகிறார்கள் பாஜகவினர்” என ஆவேசப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், “மக்களை பாதுகாக்க டெல்லி கெஜ்ரிவால் அரசு தவறும் போதெல்லாம் அவர்களை மீட்கும் ரட்சகராக வருகிறார் அமித்சா. அவரது வழிகாட்டுதலின் பேரில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் கரோனா பராமரிப்பு மையம் செயல்படுகிறது’’ என்கின்றனர் பாஜக தலைவர்கள்.
அதற்கேற்ப, படுக்கை மற்றும் சிகிச்சை வசதிகளில் விளையாடத் துவங்கியுள்ள மத்திய உள்துறை அமைச்சகம், 10,000 படுக்கை வசதிகளுடன் சர்தார் வல்லாபாய் படேல் கரோனா மையத்தை உருவாக்கியது.
அதேபோல, மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பல விளையாட்டு மையங்களையும் கரோனா சிகிச்சை வசதிகளுக்காக மாற்றப்பட்டுள்ளது. இங்கு துணை ராணுவ படைகளின் 1000-த்திற்கும் மேற்பட்ட டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் என பலர் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால், இந்த படுக்கை வசதிகளையும், அங்குள்ள மருத்துவ முறைகளையும் கெஜ்ரிவால் அரசு பரிந்துரைக்கும் கரோனா நோயாளிகளுக்கு தருவதில்லை உள்துறை அமைச்சகம்.
இதற்கிடையே, கரோனா தாக்கத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கையை கெஜ்ரிவால் அரசு மறைப்பதாக ஒரு குற்றச்சாட்டை வீசியது பாஜக. அதற்கேற்ப, “இறப்பவர்களின் எண்ணிக்கையை டெல்லி மக்கள் அறிந்து கொள்ள உரிமை உண்டு. அதனால் இறப்பு விகிதங்களை மறைக்காமல் தெரிவிக்க வேண்டும்’’ என அரசு மருத்துவமனை நிர்வாகத்துக்கு மத்திய அரசு உத்தரவிட்டது.
இதற்கு பதிலளித்த ஆம் ஆத்மி அரசு, “கரோனா நோயாளிகள் விசயத்தில் எதையும் மறைக்க வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை. இறப்பு அறிக்கைகளை விரைவாக அனுப்புங்கள் என மருத்துவமனைகளை கேட்டுக்கொண்டிருக்கிறோம். அவர்கள் தரும் புள்ளி விபரங்கள் மறைக்கப்படாமல் வெளியிடப்படுகிறது” என பாஜகவின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி தந்திருக்கிறது.
இப்படி இரு தரப்புக்கும் மல்லுக்கட்டு அதிகரித்து வரும் நிலையில், கோவிட்-19 தாக்கிய நோயாளிகளுக்கான மருத்துவ சிகிச்சை அளிப்பதில் கெஜ்ரிவால் அரசுக்கு எந்த வகையிலும் உதவாமல் அவரோடு மோதல் போக்கினை கையாண்டு வருகிறது உள்துறை அமைச்சகம். கெஜ்ரிவாலுக்கு எதிராக கரோனா அரசியல் விளையாட்டை ஓங்கி அடித்து விளையாடி வருகிறார் அமைச்சர் அமித்ஷா! இதனால், கரோனா தாக்கத்தை விட அமித்ஷாவின் அரசியால் விளையாட்டு உச்சத்தில் இருப்பதால் பரிதவித்துக் கொண்டிருக்கிறார்கள் கரோனா நோயாளிகள் என டெல்லியில் பரபரப்பாக எதிரொலிக்கிறது.