தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையேயான கருத்து வேறுபாடுகள் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமாக எழுந்துள்ளது. சனாதனம், மத்திய அரசின் இந்தித் திணிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளில் மத்திய அரசின் குரலாக அவர் தொடர்ந்து செயல்பட்டு வருவதால் திமுக மட்டும் அல்லாமல் திமுக தோழமைக் கட்சிகள் உட்பட பல்வேறு கட்சிகள் ஆளுநரின் பேச்சுக்குத் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
இதன் உச்சக்கட்டமாக ஆளுநரைத் திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி திமுக அதற்கான முன் ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. மேலும் தமிழகத்தில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கையெழுத்து பெற்று ஆளுநரைத் திரும்பப்பெற வேண்டும் என்று குடியரசுத் தலைவரிடம் திமுக மனு கொடுக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இதுதொடர்பாக மருத்துவரும் அரசியல் விமர்சகருமான காந்தராஜிடம் நாம் கேள்விகளை முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு:
தமிழகத்தில் ஆளுநர் ஆர்.என். ரவியின் செயல்பாடு மத்திய அரசுக்கு ஆதரவாகவும், தமிழக அரசுக்கு எதிராகவும் தொடர்ந்து இருந்து வருகிறது. தமிழக அரசோடு தொடர்ந்து மோதல் போக்கைக் கடைப்பிடித்து வரும் ஆளுநரைத் திரும்பப் பெற வேண்டும் எனக் கோரி தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் திமுக கையெழுத்துக்களைப் பெற்று குடியரசுத்தலைவரிடம் கொடுக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
ஆளுநரைத் திரும்பப் பெறுவதால் என்ன நடந்துவிடப் போகிறது. இந்த ரவி போனால் வேறு ஒரு குருவி வரப் போகிறது. அதனால் என்ன பயன் ஏற்படப்போகிறது. ஆளுநர் பதவியை அடியோடு மாற்ற வேண்டும். பன்வாரி லால் போனாரு, ரவி வந்தாரு. எப்படி இருந்தாலும் ஆர்எஸ்எஸ் கூட்டத்திலிருந்து ஒருவர்தானே ஆளுநராக வரப் போகிறார்கள். இந்தப் பதவியையே தூக்க வேண்டும். தமிழிசை தெலுங்கானா ஆளுநராக இருக்கிறார், கூடுதலாகப் பாண்டிச்சேரிக்கும் ஆளுநராக இருக்கிறார். தமிழிசையால் தெலுங்கானாவிற்குப் போக முடிகிறதா? அதனால்தான் அவர் பாண்டிச்சேரி, தமிழகத்திலேயே இருக்கிறார். சாப்பாட்டுக்குக் கூட பணம் தரமாட்டேன் என்கிறார் அம்மாநில முதல்வர். அதைத் தமிழகத்தில் ஆளுநருக்குச் செய்ய முடியாதா? தெலுங்கானா முதல்வரால் முடிகின்றபோது தமிழக முதல்வர் ஏன் செய்ய முடியாது.
ஒழுங்கா இருந்தா இருங்க, இல்லைனா சோறு தண்ணீ தர மாட்டோம்ன்னு ஏன் சொல்ல முடியல, நம்முடைய பணத்தைத்தானே அவருக்கு செலவு செய்கிறோம். அதனால் தமிழகத்திற்கு எதிராக அவர் செயல்படுகிறார் என்றால் அவருக்கு எதற்கு நாம் பணம் போட்டு சோறு போட வேண்டும். தமிழிசையால் தெலுங்கானா செல்ல முடியவில்லை பாருங்கள். அதைப்போல் செய்தால்தான் இவரும் திருந்துவார். இவர் அரசியல் கட்சித் தலைவர்கள் போல் பேசுவதை யாரும் ஏற்றுக்கொள்ள முடியாது.
ஆனால் தமிழிசை, ஆளுநர்கள் அவர்களுக்குத் தோன்றியதைப் பேசுவார்கள். அதை யாரும் தடுக்க முடியாது. அதைத் தடுக்க முயன்றாலும் ஆளுநர்கள் அதை முறியடிப்பார்கள் என்று கூறியுள்ளார். தமிழிசையின் இந்தக் கருத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?
தமிழிசை சொல்வதுபோல ஓப்பனாக சொல்லிவிட வேண்டியது தானே? நாங்கள் கட்சிக்காரர்கள் தான், மத்திய அரசின் குரலாக நாங்கள் செயல்படுவோம் என்று சொல்லிவிட்டால் நாம் அதற்குத் தகுந்த மாதிரி நடந்துகொள்ளப் போகிறோம். ஆளுநர் நடுநிலை தவறாமல் இருக்க வேண்டும். அதுவே அந்தப் பதவிக்கு அழகு, ஆளுநர் பொறுப்பு வகிப்பவருக்கும் அழகு. அதை அவர் மீறும்போதும் அதற்குரிய எதிர் நடவடிக்கையை எடுத்தாக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. என்னைக்கு நீ அரசியல் பேச ஆரம்பித்தாயோ, அப்போது நீ அரசியல்வாதி ஆகிவிட்டாய். உங்க கட்சில செலவுக்குப் பணம் வாங்கிக் கொள்ள வேண்டியதுதானே?
உங்கள் கருத்துக்களை எங்கள் மீது திணிக்க நீங்கள் இருக்கத் தேவையில்லை. நல்ல முறையில் நடந்தால் இங்கு இருக்கலாம், நாங்கள் நல்ல முறையில் செயல்படுவோம். எங்களிடம் அத்துமீறவோ, அவமதிக்கவோ ஆரம்பித்தால் அதற்கு நாங்களும் பதில் தருவோம். எனவே நல்ல முறையில் இருந்தால் சந்தோஷமாக போகலாம் என்பதை ஆளுநர் தற்போதாவது உணர வேண்டும். இல்லை, தமிழிசை போல நான் பேசுவேன் என்று எதிர்ப்பு அரசியலைக் கையிலெடுத்தால் அதற்குரிய பலனை ஆளுநர் விரைவில் அனுபவிப்பார்.