அ.அருண்பாண்டியன்
விஜய் டி.வி.யில் கமல் நடத்தும் பிக்பாஸ் வீட்டிற்குள்ளே ஏகப்பட்ட களேபரங்களும் பரபரப்பு சம்பவங்களும் நடக்கிறதென்றால், அந்த வீட்டிலிருந்து வெளியே வரும் அல்லது வெளியேற்றப்படும் நடிகைகளால், ஏற்படும் பரபரப்புகள் அதிர்ச்சியாக இருக்கிறது.
போன வாரம் மதுமிதா என்றால், இந்த வாரம் மீரா மிதுன். இப்போது நடந்து கொண்டிருக்கும் பரபரப்பு சம்பவத்தின் ஃப்ளாஷ்பேக் இது. மிஸ் தமிழ்நாடு, மிஸ் சௌத் இந்தியா என ரகம் வாரியாக அழகிப் போட்டியை நடத்துபவர், சென்னை பெரம்பூரைச் சேர்ந்த ஜோ மைக்கேல் பிரவீன் என்பவர். இவரது அலுவலகம் எழும்பூரில் உள்ளது. மாடலிங் துறையிலும் சில சினிமாக்களிலும் நடித்திருக்கும் மீரா மிதுன் என்பவர் "மிஸ் சௌத் இந்தியா 2016' பட்டத்தை வெல்கிறார். 2017-ல் ஜோ மைக்கேலின் நட்பு கிடைக்கிறது மீரா மிதுனுக்கு. பணம் கொடுக்கல்-வாங்கல் பிரச்சினையில், ஜோ மைக்கேலைவிட்டுப் பிரிந்து தனியாக அழகிப் போட்டி நடத்தும் முயற்சியில் இறங்கினார் மீரா மிதுன். இதனால் கடுப்பான ஜோ, அழகிப் பட்டம் தருவதாகச் சொல்லி ஏகப்பட்ட இளம் பெண்களிடம், மீரா மிதுன் பணம் வசூலித்து ஏமாற்றிவிட்டார். எனவே அவர் நடத்தும் அழகிப் போட்டிக்கு தடை விதிப்பதோடு, அவரையும் கைது செய்ய வேண்டும் என சென்னை மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தார்.
போலீசின் எச்சரிக்கையால் அழகிப்போட்டி ரத்தானதால் டென்ஷனான மீரா மிதுன், ஜோ மைக் கேல் ஒரு ஃப்ராடு. அவர்தான் பல பெண்களிடம் வசூல்செய்து ஏமாற்றி விட்டார். ரவுடிகளை வைத்து என் னை மிரட்டினார்'' என கமிஷனர் ஆபீஸ் வாசலிலேயே ஆவேசமாக பேசினார். "விடுவேனா நான்' என களம் இறங்கிய ஜோ, மீரா மிதுனுக்கு கொடுத்த அழகிப் பட்டத்தைப் பறித்து, அதே போட்டியில் இரண்டாம் இடம் பெற்ற மாடலிங் நடிகையான சனம் ஷெட்டிக்கு கொடுத்தார். இப்படி மீரா மிதுனும் ஜோ மைக்கேலும் மாறி மாறி குற்றச்சாட்டு கூறிக் கொண்டிருந்த போதுதான் பிக்பாஸ் வீட்டிற்குள் எண்ட்ரியானார் மீரா மிதுன். அப்போதும் விடாத ஜோ மைக்கேல், போலீசுக்கு பிரஷ்ஷர் கொடுக்க, பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற போலீஸ், விசாரணைக்கு ஆஜராகும்படி மீரா மிதுனுக்கு நோட்டீஸ் கொடுத்துவிட்டுத் திரும்பியது. இதனால் ஜூலை28—ஆம் தேதியன்று பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார் மீரா மிதுன். இவரின் வெளியேற்றத்தால் மிகவும் சந்தோஷப்பட்டவர், அதே பிக்பாஸ் வீட்டிலிருக்கும் தர்ஷன்தான். மீரா மிதுனிடமிருந்து அழகிப் பட்டத்தை வாங்கிய சனம் ஷெட்டியின் லவ்வர்தான் தர்ஷன்.
பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டு ஒரு மாதம் கழிந்த நிலையில், ஜோ மைக்கேலுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக, மீரா மிதுன் மீது எழும்பூர் போலீஸ் இப்போது எஃப்.ஐ.ஆர். போட்டுள்ளது. என்ன பண்ணிவச்சிருக்கான் ஜோ மைக்கேல். என்னைப் பத்தி தப்புத் தப்பா பேசியிருக்கான். அவன ஆள வச்சு தூக்கு அவ்வளவுதான். இதுக்கு மேல என்னால முடியல, அவன் கை, கால ஒடச்சு ஆறு மாசம் ஆஸ்பிட்டல்ல படுக்க வைக்கணும்'' இப்படி கோபாவேசமாக மீரா மிதுன் பேசிய ஆடியோதான் வைரலாகி, போலீஸ் எஃப்.ஐ.ஆர். போடும் அளவுக்குப் போயுள்ளது.
மீரா மிதுனின் இந்தப் பேச்சின் பின்னணியில் காங்கிரஸ் கட்சியின் மகளிரணி தேசிய பொதுச் செயலாளர் அப்சரா ரெட்டி இருப்பதால் கூடுதல் பரபரப்பாகியுள்ளது. காரணம் அப்சரா ரெட்டியும் ஜோ மைக்கேலும் ஒரே நிறுவனத்தில் பணியாற்றியபோது, இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, வேறு நிறுவனத்திற்குச் சென்றுவிட்டார் ஜோ மைக்கேல். அந்த நிறுவனத்தில் ஜோ மைக்கேலுக்கு கிடைத்த மரியாதையால் எரிச்சலான அப்சரா, தனது அரசியல் செல்வாக்கால் அந்த நிறுவனத்தையே சொந்தமாக்க முயன்றார். அதில் தோல்வி அடைந்ததால் தனக்கும் தனது தாயாருக்கும் ஜோ மைக்கேல் கொலை மிரட்டல் விடுத்ததாக நீலாங்கரை போலீசில் புகார் கொடுத்தார்.
உடனே களத்தில் இறங்கிய சப்- இன்ஸ்பெக்டர் பிரபு, ஜோ மைக்கேலை கைது பண்ணி உள்ளே தள்ளியதோடு, எதுக்கு அடம்பிடிக்கிற, மேடம் சொல்ற மாதிரி அந்த கன்சர்னை எழுதிக் கொடுத்துரு என டீல் பேசியுள்ளார். ஆனால் அதற்கும் அசராத ஜோ மைக்கேல் ஜாமீனில் வெளியே வந்த பிறகுதான், அப்சரா ரெட்டியின் கைங்கர்யம் தெரிகிறது. இதன்பின் மீரா மிதுனுடன் ஜோவுக்கு பழக்கம் ஏற்பட்டு, பணப் பரிவர்த்தனை நடக்கிறது. அழகிப் போட்டி நடத்திய வருமானத்தில் பங்கு போடும்போது பிரச்சனை ஏற்பட்டதால் அப்சரா ரெட்டியின் உதவியை நாடியிருக்கிறார் மீரா மிதுன்.
இது குறித்து அப்சரா ரெட்டியிடம் நாம் கேட்டபோது, அந்த ஆடியோவைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. என் மீது அவதூறு கிளப்புகிறார்கள்'' என்றார். "நான் எதார்த்தமாக பேசியதை இப்போது பெரிதாக்கி, என்னைக் களங்கப்படுத்துகிறார் ஜோ மைக்கேல்'' என்கிறார் மீரா மிதுன்.