Skip to main content

“உதயநிதி தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்தோம்; அதன்பிறகு அன்றைய ஆளுநர் வெளியில் வரவில்லை..” - திமுக சிவ ஜெயராஜ்

Published on 17/12/2022 | Edited on 17/12/2022

 

dmk advocate siva jeyaraj talks about dravidian model and old age pension scheme  
சிவ ஜெயராஜ்

 

திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கடந்த 14ம் தேதி இளைஞர் நலன்  மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக ஆளுநர் மாளிகையில் பதவியேற்றுக் கொண்டார். அமைச்சராக உதயநிதி பதவியேற்றதை வாரிசு அரசியல் என எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில், வழக்கறிஞரும் திமுக செய்தித்தொடர்பு இணைச் செயலாளருமான சிவ ஜெயராஜ் நக்கீரன் டிவி யூடியூப் சேனலுக்கு நேர்காணல் அளித்தார். அதிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்வி, பதில்கள் கீழே...

 

அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தில் திமுக கருத்து தெரிவிக்கலாமா என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்புகிறாரே?

தேர்தலில் நின்று ஜனநாயக முறைப்படி வெற்றிபெற்று நிரூபித்து கலைஞரின் மகனாக இருந்தாலும் ஸ்டாலின் முதலமைச்சராக 50 ஆண்டுக்காலம் ஆனது. ஆனால், பழனிசாமி யார் காலில் விழுந்தார் என்று தமிழக மக்களுக்குத் தெரியும். ஜெயலலிதா இருக்கும்போது எத்தனை தேர்தலில் பிரச்சாரம் பண்ணினார் எடப்பாடி.

 

திமுக தனது வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்று எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டுகிறாரே...

90 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டோம். தமிழகத்தின் கடனை 6 லட்சம் கோடியாக அதிமுக விட்டுவிட்டுச் சென்றார்கள். அதற்கான நிதி ஆதாரத்தைப் பற்றி ஆராய்ந்து கொண்டிருக்கிறோம். மகளிருக்கான உரிமைத்தொகை தொடர்பான கணக்கெடுப்புப் பணி நடந்து கொண்டிருக்கிறது. 2011 இல் ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது, அதிமுகவின் தேர்தல் வாக்குறுதியின் பக்கம் எண் 122 இல் தந்த வாக்குறுதியில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பேருந்தில் இலவசப் பயணம் என்று சொன்னீர்கள். 10 வருட ஆட்சியில் இருந்தபோது உங்களால் அதை நிறைவேற்ற முடிந்ததா?

 

24 நான்கு மணிநேரமும் தடையில்லாத மின்சாரம் செல்லக்கூடிய கொடநாடு எஸ்டேட்ல 27 கேமராக்கள் அணைத்து வைக்கப்பட்டுக் கொள்ளையடிக்கப்பட்டது. மேலும், அங்கிருந்த மூன்று பேர் இறந்து போனார்கள். கொள்ளையடித்த குற்றவாளிகளே இதற்கு எடப்பாடி பழனிசாமிதான் காரணம் என்று பேட்டிக் கொடுத்தார்கள். இதைத்தான் நிறைவேற்றவில்லை என்று எடப்பாடி பழனிச்சாமி கூறுகிறார். கொடநாட்டைக்கூட உங்களால் பாதுகாக்க முடியவில்லை. இதற்குக் காரணமான எடப்பாடி பழனிசாமியைக் கைது செய்யவேண்டும். வேலுமணியை சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யவேண்டும் என்று தேர்தல் வாக்குறுதியில் சொன்னோமே, அதையும் பழனிசாமி படித்துக்காட்ட வேண்டியதுதானே.

 

திமுக ஆட்சியில் முதியோர் உதவித்தொகை நிறுத்தப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டுகிறாரே...

முதியோர் உதவித்தொகை என்ற ஒன்றை உருவாக்கியவர் கலைஞர்தான். எடப்பாடி பழனிசாமிக்கு இது தெரியாது. 300 ரூபாயில் இருந்து கலைஞர் திட்டத்தை உருவாக்கினார். திருமண உதவித்தொகையும் உருவாக்கியது; 10-வது வரைக்கும் படித்திருந்தால் 10 ஆயிரம் ரூபாய், 12 ஆம் வகுப்பு வரை படித்திருந்தால் 25 ஆயிரம் ரூபாய் என அறிவித்தது எல்லாம் கலைஞர் முதலமைச்சராக இருந்தபோதுதான். இதுவெல்லாம் ‘உமன் எம்பவர்மெண்ட்’ என்பதற்கான அடிப்படைக் கொள்கைகள்தான். எடப்பாடி ஆட்சியில் 40 சதவீத பேருக்குத்தான் அவர்கள் கொடுத்தார்கள். தற்போது 65 சதவீத மக்களுக்கு உயர்த்திக் கொடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

 

dmk advocate siva jeyaraj talks about dravidian model and old age pension scheme  

 

அதிமுக கொண்டு வந்த திட்டங்களை திமுக நிறுத்தியதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டுகிறாரே...

தமிழகத்திற்கு வர வேண்டிய நிதியைக் கொடுங்கள் என்று உண்மையான எதிர்க்கட்சி தலைவராக இருந்தால் பிரதமரைச் சந்தித்துக் கோரிக்கை வையுங்கள். அதிமுக ஆட்சியின் போது ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித் துணைவேந்தர் நியமனங்களில் தலையிடுகிறார், சுற்றுப்பயணம் செய்து தமிழக அரசில் தலையிடுகிறார் என்று ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு உதயநிதி தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்தோம். அதன்பிறகு அவர் வெளியில் வரவில்லை.

 

விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, அவரது தலைமையில் திமுக பிரதிநிதிகள் பிரதமரைச் சந்தித்து மனு கொடுத்தோம். அப்படி பிரதமரைப் பார்த்து தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய நிதியை வாங்கி வாருங்கள். தமிழகத்திற்கு இந்தியாவிலேயே எந்த மாநிலத்திற்கும் இல்லாத குறைந்த தொகையை விளையாட்டுத் துறைக்கு நிதி ஒதுக்கி இருக்கிறார்கள். மருத்துவத்திற்கு நிதி ஒதுக்க மறுக்கிறார்கள். செங்கல்பட்டுக்கு அருகில் உள்ள தடுப்பூசி உற்பத்தி நிலையத்தில் தடுப்பூசி உற்பத்தி செய்ய பயோ-டெக்குக்கு அனுமதி கொடுங்கள் என்றோம். அவர்கள்  அனுமதி மறுக்கிறார்கள். மத்திய அரசு தமிழகத்தை இரண்டாம் தர மக்களாக வஞ்சிக்கிறது.