Skip to main content

உள்ளே அழுகிறேன் வெளியே சிரிக்கிறேன் வேட்பாளர்களின் நிலை !

Published on 01/04/2019 | Edited on 01/04/2019

தி.மு.க.வின் முதல் எம்.பி.யாக திருவண்ணாமலையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர் இரா.தர்மலிங்கம். அதன்பிறகு திருப்பத்தூர் தொகுதியாக மாறியபோது ஐந்து முறை இதே தொகுதியில் வெற்றி பெற்றார் வேணுகோபால். தொகுதியின் இப்போதைய எம்.பி.யாக இருப்பவர் அ.தி.மு.க.வின் வனரோஜா. திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், கலசப்பாக்கம், செங்கம்(தனி), திருப்பத்தூர், ஜோலார்பேட்டை ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகள் அடங்கிய திருவண்ணாமலை எம்.பி.தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 14,54,657 பேர். 
 

agri krishnamoorthy



இத்தொகுதியைப் பொறுத்தவரை வன்னிய சமூக வாக்குகள் முதலிடத்திலும் அதற்கடுத்தடுத்த இடங்களில் பட்டியலினத்தவர், முதலியார், இஸ்லாமியர் வாக்குகளும் உள்ளன. தி.மு.க. மா.செ. எ.வ.வேலுவின் பலத்த சிபாரிசு இருந்ததால், கடந்த தேர்தலில் வெற்றியைப் பறிகொடுத்த சி.என்.அண்ணாதுரையே மீண்டும் தி.மு.க. வேட்பாளராக களம் காண்கிறார். விருப்பமனு கொடுத்தவர்களிடம் அண்ணா அறிவாலயத்தில் நேர்காணல் நடந்தபோது, திருப்பத்தூர், ஜோலார்பேட்டை கட்சி நிர்வாகிகளுக்கும் அண்ணாதுரை ஆதரவாளர்களுக்கும் இடையே சில மனக்கசப்புகள் வெளிப்பட்டன. அதனால் இப்போது  இரண்டு தரப்பையும் சமாதானப்படுத்தி வருகிறார் எ.வ.வேலு.
 

e.v.velu


மாவட்ட இளைஞரணி அமைப்பாளரான அண்ணாதுரைக்கு மற்ற நிர்வாகிகள் முக்கால்வாசிப் பேரின் ஒத்துழைப்பு கிடைப்பது சிரமமாக இருந்ததால், அந்த சிரமத்தையும் சரிப்படுத்தியிருக்கிறார் வேலு. நிலைமை சுமுகமானதும் வேட்புமனுவைத் தாக்கல் செய்தார் அண்ணாதுரை. மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தேர்தல் பிரச்சாரத்தை சென்ட்டிமென்ட்டாக மங்கலம் கிராமத்தில் தொடங்கினார் எ.வ.வேலு. தி.மு.க.தலைவரான மு.க.ஸ்டாலினும் அண்ணாதுரைக்காக வாக்கு கேட்டு, திருவண்ணாமலையில் நடந்த பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பேசிச் சென்ற பின், தி.மு.க. ஏரியாவில் சுறுசுறுப்பு கூடியுள்ளது.

சிட்டிங் எம்.பி.யான வனரோஜா, மீண்டும் எம்.பி.யாவதற்கு எவ்வளவோ முயற்சித்தார். ஆனால் அ.தி.மு.க.வில் மீண்டும் லைம்லைட்டுக்கு வந்துள்ள மாஜி அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி சீட்டைக் கைப்பற்றிவிட்டார். நெல்லையில் வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை செய்துகொண்ட வழக்கில், அமைச்சராக இருந்தபோதே கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டை மத்திய சிறையில் இருந்தவர் அக்ரி. அந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இப்போது நடந்துகொண்டிருந்தாலும் துணைசபா பொள்ளாச்சி ஜெயராமன், தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி தளவாய்சுந்தரம், மாவட்ட அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் ஆகியோர் மூலம் எம்.பி. வேட்பாளராகிவிட்டார் அக்ரி கிருஷ்ணமூர்த்தி. 

 

vanaroja



அப்போதிலிலிருந்து இப்போது வரை அக்ரிக்கு எதிராக அரசியல் பண்ணியே பழக்கப்பட்டவர்கள் கலசப்பாக்கம் எம்.எல்.ஏ. பன்னீர்செல்வமும், மாஜி மா.செ.வான ராஜனும், மாஜி பால்வள அமைச்சர் ராமச்சந்திரனும். மேலும்  தனது அண்ணன் அழகிரிக்கு சீட் வாங்கிவிட பகீரத பிரயத்தனம் செய்தும் முடியாததால் அப்செட்டில் இருக்கிறார் அமைச்சர் வீரமணி. இதன் எதிரொலிதான் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை ஏரியாக்களில் முதல்வர் எடப்பாடி பிரச்சாரம் செய்தபோது கூட்டம் களைகட்டவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த அக்ரி, சண்டைக்காரர்களுடன் சமாதானமாகி வருகிறார். இதில் எம்.எல்.ஏ.பன்னீர்செல்வமும் மாஜி ராமச்சந்திரனும்  சமாதானமாகிவிட்டார்கள். மா.செ.ராஜன் மட்டும் இன்னும் பிடி கொடுக்காமல் இருக்கிறார். வன்னியர் ஓட்டுகளைக் குறிவைத்து பா.ம.க. நிர்வாகிகளை குளிர்விக்கும் அக்ரி, தே.மு.தி.க.வினரை கண்டுகொள்வதேயில்லையாம்.

தினகரனின் அ.ம.மு.க.வில் ஓட்டல்கள் அதிபரான ஞானசேகரன் வேட்பாளராகி களத்தை பரபரப்பாக்கியுள்ளார். "டி.எம்.கே.வும் சரி, ஏ.டி.எம்.கே.வும் சரி, எப்போதுமே திருவண்ணாமலைக்காரர்களுக்குத்தான் சீட் கொடுக்குது. இப்போது நம்ம திருப்பத்தூரைச் சேர்ந்த ஞானசேகரன் நிற்பதால், கட்சி கடந்து அவரை ஆதரியுங்கள்' என பிரச்சாரத்தை முன்னெடுக்கின்றனர் அ.ம.மு.க.வினர். கரன்சியை இறக்குவதிலும் ஞானசேகரன் தாராளம் காட்டுவதால் அ.ம.மு.க. முகாமில் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி. 

கடந்த தேர்தலில் வனரோஜா வாங்கிய ஓட்டு, பா.ம.க. வாங்கிய ஓட்டு, இதையெல்லாம் கணக்குப் போட்டு தெம்பாக இருக்கிறார் அக்ரி கிருஷ்ணமூர்த்தி. எடப்பாடி அரசின் எட்டு வழிச்சாலைத் திட்டத்தால் ஏற்பட்ட கொந்தளிப்பு, தினகரன் கட்சி பிரிக்கும் அ.தி.மு.க. ஓட்டுகள், பா.ஜ.க. மீதிருக்கும் அதிருப்தி வாக்காளர்களின் ஓட்டுகள் இதெல்லாம் தங்களுக்கு கைகொடுக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறது தி.மு.க. தரப்பு.  "உள்ளே அழுகிறேன்... வெளியே சிரிக்கிறேன்' என்பதுபோல இருக்கிறார்கள் இரண்டு பெரிய கட்சிகளின் வேட்பாளர்களும்.