உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானம் நடைபெற்று வருகிறது. இது தற்போது நிறைவடையும் தறுவாயில் உள்ளது. இந்தக் கோயில் இம்மாதம் 22ம் தேதி திறக்கப்படவிருக்கிறது. இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், கோயில் அறக்கட்டளை சார்பில் சமீபத்தில் மொத்தம் 7 ஆயிரம் சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல், ராமர் கோயில் அமைவதற்கு ஆதரவாக இருந்த பத்திரிகையாளர்களுக்கும், ராமர் கோயிலுக்காகப் பாடுபட்ட 50 கரசேவகர்களின் குடும்பத்தினருக்கும், குறைந்தபட்சம் 50 நாடுகளில் இருந்து தலா ஒரு பிரதிநிதிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த விழாவில் பங்கேற்க இந்தியா மற்றும் வெளிநாடுகளில் 7,000க்கும் மேற்பட்டவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவுடன் தொடர்புடைய பல்வேறு சம்பவங்கள் தற்போது வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. சமீபத்தில் உத்தரப் பிரதேச மாநிலம், கான்பூர் அரசு மருத்துவமனையில் 30க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள் ராமர் கோவில் திறப்பு நாளான ஜனவரி 22 ஆம் தேதி அன்று குழந்தை பெற்றுக்கொள்ள விருப்பம் தெரிவித்ததாக மருத்துவமனை தரப்பிலிருந்து கூறப்பட்டது. இந்த நிலையில், 30 ஆண்டுகளாக மெளன விரதம் மேற்கொண்ட, 85 வயது மூதாட்டி ஒருவர் ராமர் கோவில் திறப்பு நாள் அன்று தனது மெளன விரதத்தை நிறைவு செய்கிறார்.
ஜார்க்கண்ட் மாநிலம், தன்பாத் நகரைச் சேர்ந்தவர் சரஸ்வதி தேவி (85). ராமர் மீது அளவு கடந்த பக்தி கொண்ட இவர், 1986 ஆம் ஆண்டில் தனது கணவர் தேவகி நந்தன் இறந்த பிறகு, தனது வாழ்க்கையை ராமருக்காக அர்ப்பணித்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, கடந்த 1992 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது, ராமரின் தீவிர பக்தரான சரஸ்வதி தேவி, அங்கு ராமர் கோவில் கட்டப்படும் வரை மெளன விரதம் இருக்கப்போவதாக அறிவித்துள்ளார்.
1992 ஆம் ஆண்டு முதல் மெளன விரதம் மேற்கொண்டு வரும் சரஸ்வதி தேவி, 2020 ஆம் ஆண்டு வரை தினமும் 23 மணி நேரம் மெளன விரதமும், 1 மணி நேரம் மட்டும் பேசிக்கொண்டும் இருந்திருக்கிறார். 2020 ஆம் ஆண்டில் பிரதமர் மோடி, ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்ட பின் 24 மணி நேரமும் மெளன விரதம் இருந்துள்ளார். அன்றிலிருந்து, தனக்கு வேண்டியதை சைகை மொழியிலும், காகிதத்தில் எழுதிக் காண்பித்தும் வந்துள்ளார்.
இது குறித்து சரஸ்வதி தேவியின் குடும்பத்தினர் தெரிவிக்கையில், ‘சரஸ்வதி தேவி தினமும் அதிகாலை 4 மணிக்கு எழுந்து, ஒரு மணி நேரம் தியானத்தில் ஈடுபடுவார். மேலும் அவர், மாலையில் ராமாயணம், பகவத்கீதை போன்ற சமயப் புத்தகங்களை படிப்பார். ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே உணவு எடுத்துக்கொள்வார். காலையிலும், மாலையிலும் ஒரு டம்ளர் பால் மட்டும் குடிப்பார்.
ராமர் கோவில் திறப்பு விழாவில், பங்கேற்க தன்பாத் நகரிலிருந்து ரயில் மூலம் அயோத்திக்கு புறப்படவுள்ளார். அவர் ஜனவரி 22 ஆம் தேதி அன்று தனது மெளன விரதத்தை முடித்துக்கொள்ள இருக்கிறார்’ என்று தெரிவித்தனர். ராமர் கோவில் திறப்பு நாளன்று, சரஸ்வதி தேவி தனது 30 ஆண்டுக்கால மெளன விரதத்தை நிறைவு நாளை அவரது குடும்பத்தினர் மட்டுமல்ல, ராம பக்தர்கள் பலரும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.