கரோனா இரண்டாம் அலை மிக வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் தினசரி பாதிப்பு 3.5 லட்சத்தைக் கடந்து சென்றுகொண்டிருக்கிறது. தமிழகத்தில் தினசரி பாதிப்பு 12 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இந்நிலையில், திமுக சார்பில் பொதுமக்களுக்கு முகக்கவசம், சானிடைசர் வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட ஆயிரம் விளக்கு திமுக வேட்பாளர் எழிலன், மத்திய - மாநில அரசுகளை சாடினார். இதுதொடர்பாக அவர் பேசியவதாவது, "தற்போது கரோனா உச்சத்தில் இருந்து வருகிறது. நம்முடைய தலைவர் தளபதி அவர்களும் இந்தப் பேரிடர் காலத்தில் பொதுமக்களுக்குப் பல்வேறு பாதுகாப்பு உதவிகளை நாம் செய்திட வேண்டும் என்று ஆணை பிறப்பித்துள்ளார். அவரின் உத்தரவுக்கு ஏற்ப இந்த விழா தற்போது நடைபெற்று வருகிறது. நான் ஒரு மருத்துவர், கிட்டத்தட்ட இரண்டாயிரம் கரோனா நோயாளிகளுக்கு இதுவரை சிகிச்சை அளித்துள்ளேன்.
முதல் அலையை விட கரோனா இரண்டாவது அலை ரொம்ப மோசமாக இருக்கிறது. கரோனா கிருமி காற்றில் பரவுகிறது. பொது இடங்களில் முகக் கவசம் அணியவில்லை என்றால் இந்தத் தொற்று மிக எளிதாக பரவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி இருப்பவர்களுக்கு இது இருமல், சளி மாதிரி வந்து மூன்று நான்கு நாட்களில் சரியாகிவிடுகிறது. ஆனால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், நீழிரிவு நோய் உள்ளவர்கள், வயதானவர்களிடம் இந்த நோய் அதீத தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அவர்களின் நுரையீரலைக் கடுமையாக பாதிக்கிறது. நுரையீரல் தேய்மானம் ஆவது நிறைய மக்களுக்குத் தெரிவதில்லை. மருத்துவமனையில் அவர்களின் ஆக்ஸிஜன் அளவை செக் செய்து பார்க்கும்போது, அவர்களுக்கு ஆக்ஸிஜன் அளவு மிக குறைவாக இருப்பதைக் காண முடிகிறது. ஆனால் அவர்களுக்கு அதற்குரிய எந்த அறிகுறிகளும் தெரிவதில்லை. இதனால் செயற்கை சுவாசம் செலுத்தப்பட வேண்டிய நிலைக்குச் சென்ற பின்னர்தான் மருத்துவமனைக்கு வருகிறார்கள்.
உங்கள் அனைவருக்கும் மிக நன்றாக தெரியும், இப்போது இருக்கிற அதிமுக அரசும், மத்திய அரசும் செயலற்ற அரசுகளாக இருந்து வருகிறது. எந்த வகையான அடிப்படை வசதிகளையும் கூட மருத்துவமனைகளுக்கு அவர்கள் ஏற்பாடு செய்து தருவதில்லை. மருந்துகள் தட்டுப்பாடு அதிகமாக இருக்கிறது. ஆக்ஸிஜன் தட்டுப்பாடு அதிகம் இருக்கிறது. மருத்துவர்களும், செவிலியர்களும் அயராது உழைத்து வருகிறார்கள். ஆனால் அவர்களை இந்த அரசு பொருட்டாக நினைக்கவில்லை. விரைவில் நம்முடைய ஆட்சி அமைய இருக்கிறது. தளபதி பொறுப்பேற்க உள்ளார். ஆனால், அதுவரை மக்கள் சிரமத்தை அனுபவிக்க கூடாது, அவர்களின் பாதுகாப்பை நாம் உறுதி செய்ய வேண்டும் என்ற உத்தரவுக்கு இணங்க மக்களுக்கு நாம் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொடுத்து வருகிறோம். வேட்பாளர்கள் அனைவரும் இதை சிரத்தோடு மேற்கொள்ள வேண்டும் என்ற உறுதி எடுத்திருக்கிறோம். இங்கே இருப்பவர்களுக்கு, கடை வைத்திருப்பவர்களுக்கு நான் ஒன்றே ஒன்று சொல்கிறேன். எந்த ஆபத்தான காலகட்டத்திலும் திமுக உங்களுக்கு உற்ற தோழனாக இருக்கும் என்பதை மட்டும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்" என்றார்.