Skip to main content

எங்களுக்கு கரோனாவால பாதிப்பு வருதோ, இல்லியோ? இன்னைக்கு கல்லா நிறையணும்... அதிர வைக்கும் ரிப்போர்ட்!

Published on 26/03/2020 | Edited on 26/03/2020

கரோனா பரவலைத் தடுப்பதற்காக 22-ஆம் தேதி ஊரடங்கு என அறிவித்ததும், ‘இந்த அச்சம் இன்னும் எத்தனை நாட்களுக்கு நீடிக்கப் போகிறதோ?’ என்ற கவலையில், ‘அத்தியாவசியப் பொருட்களை இன்றே வாங்கிவிடுவோம்’ என பரபரப்பானார்கள், மக்கள். ‘ஒரு நாள் கடையடைப்பால் ஏற்படும் நஷ்டத்தை எப்படி ஈடுகட்டலாம்?’ என வழக்கம்போல் கணக்கு போட்டார்கள், வியாபாரிகள்.

21-ஆம் தேதி, மக்களின் அவசரத்தையும் வியாபாரிகளின் உத்தியையும் நேரடியாக அறிய களமிறங்கினோம். நம்மிடம் மக்கள் வெளிப்படுத்திய அங்கலாய்ப்பை இங்கே பதிவிட்டுள்ளோம்.

 

street



போதும்பொன்னு (காரைக்குடி)

எங்களுக்கு கரோனாவால பாதிப்பு வருதோ, இல்லியோ? இந்த வியாபாரிகள் அடிக்கிற பகல் கொள்ளையால், ரொம்பவே பாதிப்பாயிருச்சு. பின்ன என்னங்க? வியாழக்கிழமை ரெண்டு கிலோ தக்காளி 30 ரூபாய்க்கு வாங்கினேன். இன்னைக்கு விலை 40 ரூபாய். முருங்கைக்காய், நாட்டுக்காய்ன்னு எல்லாமே ரெண்டு மடங்கு விலை ஏத்திட்டாங்க. காய்கறி மட்டுமில்ல, மண்ணெண்ணெய் விலையும் கூடிப்போச்சு. லிட்டர் 150 ரூபாய்ங்கிறாங்க. ஊரடங்கு போட்டு மக்களைக் காப்பாற்ற நினைக்கிற அரசாங்கம், இந்த மாதிரி இஷ்டத் துக்கு விலையேத் துறத கண்காணிச்சு தடுக்கணும்.

 

people



லட்சுமி (மதுரை)

இன்னும் எத்தனை நாளைக்கு கொரோனா கொடுமையோ? விலை எல்லாமே எக்குத்தப்பா எகிறிப்போச்சு. கிலோ 30 ரூபாய்க்கு விற்ற வெங்காயம் இன் னைக்கு 90 ரூபாய். இன்னிக்கு ஒரு நாளைக்குத் தானே இந்த விலை. நாளைக்கு வாங்க, குறைச்சுத் தர்றேன்னு சொல்லுறாங்க. இருக்கிற பிரச்சனைல, மக்களை வச்சு காமெடி பண்ணுறாங்க.

 

people



பெமினா (சமயநல்லூர்)

மக்களுக்கு திண்டாட்டம்னா, வியாபாரிக்கு கொண்டாட்டம். இந்த மாதிரி நேரத்துல அத்தியாவசிய பொருட்களோட விலையை ஏற்றக்கூடாதுன்னு ஸ்ட்ரிக்டா ரூல் போடலாம்ல. அட, நாப்கின் விலைகூட கூடிப்போச்சுங்க. சரி, பணம் இருக் கிறவங்க விலை யைப் பற்றி கவ லைப்படாம எல் லாத்தயும் வாங்கி ஸ்டாக் வச்சிக்கிரு வாங்க. இல்லாத ஜனம்.. பாவம் என்ன செய்யும்?
 

shops



மணி (திருப்பரங்குன்றம்)

அதான் இந்த வைரஸ், விலங்கால, பறவையால பரவுதுன்னு சொல்லுறாங் கள்ல. ஒரு மாசத்துக்கு முழுசா கோழிக்கடையை மூடியே ஆகணும்னு விற்கிறத தடை பண்ணலாம்ல. பிராய்லர் கோழிக்கடைகாரர்கிட்ட, பிரச் சனையெல்லாம் முடிஞ்சபிறகு விற்கவேண்டியதுதானேன்னு கேட்டேன். அதுக்கு அவரு, இந்தக் கோழியெல்லாம் 20 நாள் தாக்கு பிடிக்கிறதே கஷ்டம்கிறாரு. அப்படின்னா, இம்புட்டு நாளா நாம சாப்பிட்டுக்கிட்டிருந்த கோழியெல்லாம் செயற்கையானதா? ஆசை ஆசையா சாப்பிட்டோம்ல. அடுத்து என்ன ஆகுமோன்னு ரொம்ப பயமா இருக்கு.


முனீஸ்வரி (சிவகாசி)

மார்க்கெட்ல கத்தரிக்காயே இல்ல. பச்சை மிளகாய கண்ணுல பார்க்க முடியல. விலை ஜாஸ்தின்னாலும் மக்கள் விழுந்தடிச்சு வாங்கிட்டு போயிடறாங்க. நாளைக்கே உலகம் அழியுதுன்னாலும், இன்னிக்கு கல்லாவ நிரப்பணும்னு மூளையைக் கசக்கிறவங்கதான் வியாபாரிங்க. என்னமோ போங்க, முட்டை விலை மட்டும்தான் குறைஞ்சிருக்கு.

 

 

shops



நவநீதகிருஷ்ணன் (சித்துராஜபுரம்)

ரோட்டுக் கடைக்கு எப்பவும் வர்ற கூட்டம், இப்ப வர்றதில்ல. தக்காளிய மொத்த மொத்தமா வாங்கிட்டு போயிட்டாங்க. 120 ரூபாய்க்கு விற்ற பெட்டி இன்னைக்கு 280 ரூபாய். எரியுற வீட்ல பிடுங்கின வரைக் கும் லாபம்கிற கணக்குலதான் இங்கே வியாபாரம் நடக்குது.


கோமதி (சங்கரன்கோவில்)

35 ரூபாய்க்கு வித்த அவரைக்காய இன்னைக்கு 50 ரூபாய்க்கு விக்கிறாங்க. 35 ரூபாய்க்கு வித்த பீன்சும் பாவக் காயும் 80 ரூபாய்ங் கிறாங்க. எதுவும் வாங்காம திரும்பிப் போயிடலாம்னு தோணுது. ரசத்தையும் துவையலயும் வச்சி சாப்பிட்டா தொண் டைக்குள்ள இறங் காமலா போயிரும்?

மேகலா (நாகர்கோவில்)

ஓணம், பொங்கல் வர்றப்பதான் காய்கறி விலை கூடும். இப்ப அதைவிட கூட்டி விக்கிறாங்க. இஞ்சிய கூட விடல. 100-ல இருந்து 130-ன்னு கூட்டி விக்கிறாங்க. 30-க்கு வித்த முட்டகோஸு இன்னைக்கு 40 ரூபாய். கொரோனாவை விட இது கொடுமைங்க.

நாகு (வலியகரை- குமரி மாவட்டம்)

மட்டன் விலையவிட மீன் விலை கூடிப்போச்சு. ஒரே நாள்ல இஷ்டத்துக்கும் ஏத்திட்டாங்க. சுனாமி வந்தப்ப, bbமீன் பிடிக்க போகாத நேரத்துலகூட இந்த அளவுக்கு விலை ஏறல. சுண்டுவிரல் சைஸ்ல இருக்கிற சாளை மீன் ஒண்ணு 10 ரூபாயாம். நெத்திலி மீனு கூறுபோல பத்தனத்த வச்சிட்டு 50 ரூபாய்னு ரேட்டு சொல்லுறாங்க. அதை வாங்கி எந்தச் சட்டியில போட்டு காய்ச்சுறது? வௌமீனு விக்கிற விலைக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வாங்கிட லாம். கறி சாப்பிட்டா கொரோனா வரும்னு பேச்சு இருக்கிறதால, மீனுக்கு இம்புட்டு கிராக்கி வந்திருச்சு.

கொரோனாவிலிருந்து பாதுகாக்கும் என முகக்கவசம், சானிடைசர் போன்றவற்றை, தேவை கருதி மக்கள் வாங்க ஆரம் பித்ததும், விலையை அதிகரித்து, தட்டுப்பாட்டையும் ஏற்படுத்தியது கொடுமை என்றால், அத்தியாவசியமான உணவுப் பொருட்களின் விலையை, ஊரடங்கை காரணம் காட்டி வியாபாரிகள் ஏற்றியது கொடுமையிலும் கொடுமை!

 

-சக்திவேல், அண்ணல், மணிகண்டன், நாகேந்திரன், ராம்குமார்