சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் திறக்கப்படாமல் இருந்த மதுக்கடைகள் ஆகஸ்ட் 18ஆம் தேதி முதல் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தன. இருப்பினும் தமிழக அரசு அறிவித்தப்படி, இன்று டாஸ்மாக் கடைகளைத் திறந்தது. டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதற்கு சென்னையில் பெண்கள் கண்டனம் தெரிவித்து போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது குறித்து அரியலூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் எஸ்.எஸ்.சிவசங்கர் நம்மிடம் பேசுகையில்,
"அவசர, அவசரமாக அறிவிப்பை வெளியிட்டு சென்னையில் டாஸ்மாக் கடைகளை இன்று திறந்திருக்கிறது எடப்பாடி அரசு. கடந்த வாரம் இ-பாஸ் தளர்வுகள் அறிவித்தபோது, இந்த அறிவிப்பை வெளியிடாமல் விட்டுவிட்டு, இப்போது மதுக்கடையைத் திறந்திருக்கிறார்கள்.
இன்றே சென்னை ராயபுரத்தில் டாஸ்மாக் கடையைத் திறக்கக்கூடாது என்று பொதுமக்கள் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். பொதுமக்கள் உணர்வைப் புரிந்து கொள்ளாமல் அரசு டாஸ்மாக் கடையைத் திறந்திருக்கிறது என்பதற்கு இது எடுத்துக்காட்டு.
சென்னையில் கரோனா வேகமாக பரவியபோது, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையின் அமைப்பு குறித்து விளக்கினார், தெருக்கள் எல்லாம் நெருக்கமாக இருக்கிறதென. "சென்னையில் மக்கள் நெருக்கம் அதிகம் இருப்பதால் கரோனா வேகமாக பரவுகிறது", என்ற கண்டுபிடிப்பையும் வெளியிட்டார். ஆனால், இப்போது டாஸ்மாக் கடையைத் திறக்கும்போது இது மறந்து போனது தான் கொடுமை. டாஸ்மாக் கடையில் மக்கள் நெருக்கமாக நிற்பார்கள் என்பதை எடப்பாடி பழனிசாமி நினைத்து பார்க்கவில்லை போல.
சென்னை தவிர்த்த மற்ற மாவட்டங்களில் டாஸ்மாக் கடையைத் திறப்பது என எடப்பாடி பழனிசாமி அறிவித்தபோதே, திறக்கக்கூடாது என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். டாஸ்மாக் கடையைத் திறக்கக் கூடாது என வலியுறுத்தி, தமிழகம் முழுதும் தி.மு.க சார்பாக ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது. ஆனால் எடப்பாடி அலட்சியம் செய்தார்.
இதை எல்லாம் தாண்டி, சென்னை தவிர்த்து தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் டாஸ்மாக் கடையைத் திறந்த பிறகு தான், மாவட்டங்களில் கரோனா பரவல் வேகம் பிடித்தது. இன்னும் வேகமாக பரவிக் கொண்டிருக்கிறது.
இதுகுறித்து மருத்துவர்கள் சொல்லும்போது, மதுக்கடைக்கு வருவோர் முகக்கவசம் அணிவதில்லை. அணிந்து வருவோரும், குடித்த பிறகு முகக்கவசம் அணிவது குறித்து கவலை கொள்வதில்லை. மதுகுடித்த போதையில், கரோனா குறித்த பயம் போய், சகஜமாக நடமாடுகின்றனர். எனவே டாஸ்மாக் கடை திறப்பு, கரோனா பரவலை அதிகப்படுத்தும் எனக் கருத்து தெரிவிக்கிறார்கள்.
எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி தலைவர்களின் கருத்தை கேட்க வேண்டும் என கூறியபோது, அவர்கள் என்ன மருத்துவ வல்லுநர்களா?, அவர்களிடம் என்ன ஆலோசனை கேட்பது என்று நக்கல் செய்தார் முதலமைச்சர் பழனிசாமி. இப்போது டாஸ்மாக் கடை திறப்பு குறித்து மருத்துவர்கள் கருத்தை கேட்காமலே செயல்படுகிறார்.
தமிழகம் முழுதும், தனியார் டாக்ஸி ஓட்டுநர்கள் அரசின் கட்டுப்பாட்டால் வருமானம் இன்றி தவிக்கிறார்கள். டாக்ஸியில் 3 பேருக்கு மேல் பயணம் செய்தால், கரோனா பரவும் என்றால், டாஸ்மாக் கடைகளில் கூடும் கூட்டத்தால் கரோனா பரவாதா?
சென்னையில் டாஸ்மாக் கடைகளைத் திறக்கும் போது, கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டையும் திறக்க வேண்டுமென வணிகர் பேரவையின் தலைவர் விக்கிரமராஜா வேண்டுகோள் விடுத்திருக்கிறார். கிட்டத்தட்ட 50 ஆயிரம் பேர் வாழ்வாதாரமாகக் கோயம்பேடு காய்கறி மார்க்கெட் விளங்குகிறது. கோயம்பேடு மார்க்கெட் திறந்தால், சென்னை மக்களுக்கும் நியாயமான விலையில் காய்கறிகள் கிடைக்கும்.
டாஸ்மாக் கடையில் கூடும் கூட்டத்தால் கரோனா பரவாது என்றால், காய்கறி மார்க்கெட்டில் சேரும் கூட்டத்தால் மட்டும் கரோனா எப்படிப் பரவும். அப்படி என்றால், டாஸ்மாக்கில் விற்பது கரோனா தடுப்பு மருந்தா? எனக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.