சரியாக 25 ஆண்டுகளுக்கு முன்பு மதுரை மாவட்டத்தில் இருந்து சில பகுதிகள் பிரிக்கப்பட்டு புதிதாக தேனி மாவட்டம் உருவாக்கப்பட்டது. தேனி மாவட்டத்தில் நான்கு சட்டமன்ற தொகுதியும், ஒரு மக்களவை தொகுதியும் உள்ளது. ஆண்டிப்பட்டி, பெரியகுளம், போடி, கம்பம் ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகள் இந்த மாவட்டத்தில் அடங்கியுள்ளது. இதில் இரண்டு தொகுதிகளில் திமுகவும், இரண்டு தொகுதிகளில் அதிமுகவும் சட்டமன்ற உறுப்பினர்களை கொண்டுள்ளது. ஆண்டிப்பட்டியில் திமுகவைச் சேர்ந்த மகராஜன் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். பெரியகுளத்தில் திமுகவைச் சேர்ந்த சரவண குமார் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். போடியில் துணை முதல்வர் பன்னீர் செல்வம் வெற்றிபெற்றுள்ளார். கம்பம் தொகுதியில் அதிமுகவின் ஜக்கையன் சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார். கிராமபுற மக்கள் அதிகம் வாழும் இந்த தொகுதியில் பெருவாரியான மக்கள் விவசாயம் செய்து வருகிறார்கள். அதிமுகவின் முக்கிய தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா இருவரும் இந்த மாவட்டத்தில் இருந்து சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தேனி மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் எந்தக் கட்சி பலம், யாருக்குப் பலவீனம் என்பதை இங்கு பார்ப்போம்.
ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி:
அதிமுக பலமாக உள்ள தொகுதிகளில் மிக முக்கிய தொகுதிகளில் ஒன்று ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி. அதிமுக தொடங்கப்பட்ட பிறகு இங்கு 12 முறை சட்டமன்ற தேர்தல் நடைபெற்றுள்ளது. இதில் 9 முறை அதிமுக வெற்றிபெற்றுள்ளது. திமுக மூன்று முறை வெற்றிபெற்றுள்ளது. எம்ஜிஆர் இந்த தொகுதியில் இருந்து 1984ம் ஆண்டு வெற்றிபெற்று முதல்வராக பொறுப்பேற்றார். இங்கு அதிமுகவுக்கு அதிக செல்வாக்கு இருப்பதைப் போன்ற தோற்றம் எப்போதும் இருக்கும். இதே தொகுதியில் இருந்து நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரன் ஒருமுறை அதிமுக சார்பாக சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்தமுறை திமுக சார்பாக தங்க தமிழ்செல்வன் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இந்த முறை இந்த தொகுதி பலத்த போட்டியைச் சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
போடி சட்டமன்ற தொகுதி:
1977ம் ஆண்டுக்குப் பிறகு இந்த தொகுதி இதுவரை 10 முறை சட்டமன்ற தேர்தலைச் சந்தித்துள்ளது. இதில் 7 முறை அதிமுக வெற்றி பெற்றுள்ளது. இரண்டு முறை திமுக வெற்றி பெற்றுள்ளது. ஒருமுறை காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. இந்த தொகுதியில் இருந்து ஜெயலலிதா 1989ம் ஆண்டு வெற்றிபெற்று சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போதைய துணை முதல்வரும் இந்த தொகுதியில் இருந்து இரண்டு முறை சட்டமன்றத்துக்குச் சென்றுள்ளார். தற்போதைய சட்டமன்ற உறுப்பினரும் அவர்தான். அதிமுக சற்று பலமாக இருக்கின்ற தொகுதிகளில் இதுவும் ஒன்று. இந்தமுறை திமுக கடும் போட்டியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எதற்கும் தயாராக ஓபிஎஸ் தரப்பு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
பெரியகுளம் சட்டமன்ற தொகுதி:
விவசாய பெருகுடி மக்கள் அதிகம் இருக்கும் தொகுதிகளில் இந்த தொகுதி பிரதான இடத்தைப் பிடித்துள்ளது. இந்த தொகுதியில் நெல், பருப்பு உள்ளிட்ட பொருட்கள் அதிக மக்களால் பயிரிடப்படுகிறது. 1977ம் ஆண்டு முதல், இதுவரை 11 முறை இந்த தொகுதி தேர்தலைச் சந்தித்துள்ளது. இதில், 7 முறை அதிமுக வெற்றிபெற்றுள்ளது. இரண்டு முறை திமுகவும், ஒருமுறை கம்யூனிஸ்ட் கட்சியும் வெற்றிபெற்றுள்ளது. இதில் கடந்த 2001, 2006ம் ஆண்டு தேர்தலில் அதிமுகவின் சார்பாக தற்போதைய துணை முதல்வர் பன்னீர் செல்வம் வெற்றிபெற்றுள்ளார். இந்த தொகுதி திமுகவின் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
கம்பம் சட்டமன்ற தொகுதி:
கம்பம் சட்டமன்ற தொகுதி விவசாயத்தைப் பிரதானமாக செய்யும் மக்களை அதிகம் கொண்ட பகுதி. கேரள எல்லையை ஒட்டி இந்த தொகுதி அமைந்துள்ளது. 1977ம் ஆண்டு முதல் இந்த தொகுதி தேர்தலைச் சந்தித்து வருகிறது. தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கட்சிகள் அனைத்தும் இந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளன. அதிமுக இத்தொகுதியில் 4 முறை வெற்றிபெற்றுள்ளது. தமாகா இத்தொகுதியில் இரண்டு முறை வெற்றிபெற்றுள்ளது. மதிமுக மற்றும் காங்கிரஸ் இத்தொகுதியில் தலா ஒருமுறை வெற்றிபெற்றுள்ளன. இத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக அதிமுகவின் ஜக்கையன் இருந்து வருகிறார். மீண்டும் இத்தொகுதியில் அதிமுகவின் சார்பாக அவரே போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திமுகவின் சார்பாக இராமகிருஷ்ணன் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொகுதியில் போட்டி கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.