Skip to main content

காவிரி பிரச்சனை - ஓர் உண்மை வரலாறு! #2 - 1977 எம்ஜியார் ஆட்சி முதல் 2018 இறுதித் தீர்ப்பு வரை…!

Published on 07/04/2018 | Edited on 07/04/2018

1977 மார்ச் மாதம் நெருக்கடி நிலை வாபஸ் பெறப்பட்டது. அதன்பிறகு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தோற்றது. ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தது. ஆறுமாதங்கள் கழித்து நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றிபெற்றது. முதல்வராக பொறுப்பேற்ற எம்ஜியார் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும்போது கர்நாடகாவிடம் பேசி தண்ணீரைப் பெறும் போக்கு நீடித்தது. காவிரியில் தண்ணீர் திறக்க முடியாத நிலை ஏற்படும்போது திமுகமீது பழிபோடும் வழக்கத்தை அவர்தான் தொடங்கி வைத்தார்.

 

Mgr with indhra

 

(ஆனால், 1979 ஆம் ஆண்டு முல்லைப் பெரியார் அணையின் நீர்மட்டத்தை 152 அடியிலிருந்து 136 அடியாக குறைத்துக்கொள்ள ஒப்புதல் அளித்தார். அந்த விவகாரமே இப்போதுவரை நீடித்துக் கொண்டிருக்கிறது என்பது வேறு விஷயம்)

 

சுமார் 12 ஆண்டுகள், காங்கிரஸுடன் மிக நெருக்கமான உறவு வைத்திருந்த அதிமுக ஆட்சியில் 1983 ஆம் ஆண்டு தமிழ்நாடு காவிரி நீர்ப் பாசன விளைபொருட்கள் விவசாயிகள் நல உரிமைப் பாதுகாப்புச் சங்கத்தினர் காவிரி நடுவர்மன்றம் அமைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கைத் தொடர்ந்தனர். அந்த வழக்கில் 1986 ஆம் ஆண்டு தமிழக அரசும் தன்னையும் இணைத்துக் கொண்டது.

 

எம்ஜியார் இறந்தபிறகு 1989 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்தது. மத்தியில் வி.பி.சிங் தலைமையிலான தேசிய முன்னணி அரசு அமைந்தது. வி.பி.சிங்குடன் கலைஞருக்கு இருந்த நெருக்கத்தை பயன்படுத்தி, தமிழக அரசு தொடர்ந்திருந்த வழக்கு விசாரணையை விரைவுபடுத்தினார். இதன் விளைவாக 1990 ஆம் ஆண்டு மே மாதம் காவிரி நடுவர் மன்றம் அமைக்கும்படி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அடுத்த மாதமே பிரதமர் வி.பி.சிங் நடுவர் மன்றத்தை அமைத்து உத்தரவிட்டார்.

 

mgr with gundu rao

 

 கர்நாடக முதல்வர் குண்டப்பா ராவ்வுடன் எம்.ஜி.ஆர்  

 

காவிரி நதிநீர் பிரச்சனை குறித்து விசாரித்த நடுவர் மன்றம் ஆண்டுதோறும் தமிழகத்துக்கு 205 டிஎம்சி தண்ணீரை கர்நாடகம் திறந்துவிட வேண்டும் என்று 1991 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 25 ஆம் தேதி உத்தரவிட்டது. ஆனால், நடுவர் மன்றத்துக்கு இடைக்கால உத்தரவு வழங்கும் அதிகாரம் இல்லை என்று கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. அதை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம் இடைக்காலத் தீர்ப்பை உறுதிசெய்தது. அடுத்த மாதமே 1991 டிசம்பர் 10 ஆம் தேதி அந்த உத்தரவை அரசிதழில் பதிவு செய்தது. இதையடுத்து, கர்நாடகாவில் பெரிய அளவில் வன்முறை வெடித்தது.

 

மத்தியிலும் மாநிலத்திலும் இணக்கமான அரசு இருந்ததால், 15 ஆண்டுகள் கழிந்தாலும் ஒன்றரை ஆண்டுகளில் நடுவர் மன்றம் அமைத்து இடைக்காலத் தீர்ப்பை பெற்று அரசிதழிலும் வெளியிடும்படி செய்ய முடிந்தது.

 

நடுவர் மன்றம் அமைக்கப்பட்டபோது அதை பல்லில்லாத மன்றம் என்று கேலி பேசினார் ஜெயலலிதா. ஆனால், 1993 ஆம் ஆண்டு இதே நடுவர் மன்றம் வழங்கிய இடைக்காலத் தீர்ப்பின்படி தண்ணீரை திறக்க வேண்டும் என்று உண்ணாவிரத நாடகம் நடத்தினார் என்பது தனிக்கதை. உண்ணாவிரதம் இருந்தாரே தவிர, பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவர ஒரு துரும்பையும் கிள்ளிப்போடவில்லை என்பதே உண்மை. அவர் உண்ணாவிரதம் இருந்ததால் இரு மாநில உறவுகளிலும் விரிசல்தான் அதிகரித்தது.

 

jeyalalitha fasting

 ஜெயலலிதா உண்ணாவிரதம்

 

 

1996 ஆம் ஆண்டு மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தபிறகு, 1996 ஆகஸ்ட் முதல், 1997 ஜனவரி வரை கர்நாடக முதல்வர் ஜே.எச்.படேலை 5 முறை சந்தித்து பேசினார். ஆனால், அதில் சுமுகமான தீர்வு எட்டப்படவில்லை. அதேசமயம், கலைஞருக்கு பிறகு வந்த எம்ஜியாரும், ஜெயலலிதாவும் இப்படிப்பட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தவே இல்லை என்பதை யாரும் மறுக்க முடியாது.

 

காவிரி நடுவர்மன்றம் இடைக்காலத் தீர்ப்பை வழங்கிய நிலையிலும், அந்த தீர்ப்பின் அடிப்படையில் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கும்படி உச்சநீதிமன்றத்தையே நாடவேண்டியிருந்தது. உச்சநீதிமன்றம் உத்தரவிட்டாலும் உரிய தண்ணீரை திறக்க கர்நாடகா அரசு மறுப்பதும் வாடிக்கையாக இருந்தது.

 

காவிரி நடுவர் மன்றத்தின் விசாரணையை தாமதப்படுத்த கர்நாடகா அரசு பல்வேறு உத்திகளைப் பயன்படுத்தியது. சுமார் 16 ஆண்டுகள் விசாரணை நடத்திய நடுவர் மன்றம் 2007 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில்தான் இறுதித் தீர்ப்பை வழங்கியது. அதன்படி தமிழகத்துக்கு 192 டிஎம்சி தண்ணீரை மாதாந்திர அடிப்படையில் திறந்துவிட வேண்டும் என்று கூறப்பட்டது. மேலும் அந்தத் தீர்ப்பில்தான், காவிரி மேலாண்மை வாரியத்தையும், காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவையும் அமைக்க மத்திய அரசுக்கு நடுவர் மன்றம் உத்தரவிட்டது.

 

ஆனால், இந்த இறுதித் தீர்ப்பை எதிர்த்து கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் மீண்டும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன. நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை கெஜட்டில் வெளியிட வேண்டும் என்றும் தமிழக அரசு சார்பில் முறையிடப்பட்டது.

 

இதற்கிடையே 2011 தேர்தலில் வெற்றிபெற்று ஜெயலலிதா மீண்டும் முதல்வரானார். 2013 ஆம் ஆண்டு நடுவர் மன்றத்தின் இறுதித்தீர்ப்பை கெஜட்டில் பதிவுசெய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன் காவிரியில் நீர் திறப்பதை மேற்பார்வையிட ஒரு குழுவை அமைக்கவும் உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

 

நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிடவும், காவிரி மேற்பார்வைக் குழுவை அமைக்கவும் நடவடிக்கை எடுத்தது திமுக பங்கேற்ற காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு. திமுக ஆட்சியில் நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு வெளியானது. அதை திமுக தனதென்று உரிமை கொண்டாடவில்லை. ஆனால், அரசிதழில் வெளியிடப்பட்டதை மிகப்பெரிய சாதனை என்று ஜெயலலிதாவும் அதிமுகவினரும் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஜெயலலிதாவை தஞ்சைக்கு அழைத்து காவிரித்தாய் பட்டத்தை வழங்கினார்கள்.

 

ஆனால், காவிரியில் தண்ணீரைப் பெற முடியவில்லை. இந்நிலையில்தான் 2014 ஆம் ஆண்டு மத்தியில் மோடி தலைமையில் பாஜக அரசு அமைந்தது. அதிமுக 37 எம்.பி.களுடன் பலம் பொருந்திய கட்சியாக வந்தது. ஆனாலும், காவிரியில் தமிழக உரிமையை பெற முடியவில்லை.

 

அதேசமயம் 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி, சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கும் சசிகலா உள்ளிட்டோருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது, “காவிரியை வச்சுக்கோ, அம்மாவைக் கொடு” என்று போஸ்டர் அடிக்கிற அளவுக்கு அதிமுகவினர் சென்றனர்.

 

kaviriyai vachuko ammavai kodu poster admk

 

அந்த வழக்கில் தண்டனை பெற்ற ஜெயலலிதாவை நீதிபதி குமாரசாமி விடுவித்ததும், 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மர்மமான முறையில் ஜெயலலிதா அப்போலோவில் அனுமதிக்கப்பட்டதும் வரலாறு.

 

ஜெயலலிதா அப்போலோவில் சிகிச்சை பெறும் சமயத்தில் அன்றைய பொதுப்பணித்துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மத்திய நீர்வளத்துறை அமைச்சரான உமாபாரதி முன்னிலையில் கர்நாடகா முதல்வர் சித்தராமய்யாவுடன் பேச்சு நடத்தினார். அதில் உடன்பாடு எட்டவில்லை.

 

அடுத்த மாதமே, 2016 அக்டோபர் 3 ஆம் தேதி, பாஜக அரசு உச்சநீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தது. அதில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது. இதுதொடர்பான தீர்ப்பில் திருத்தம் வேண்டும் என்று கோரியது.

 

அந்த மனுவை ஏற்ற உச்சநீதிமன்றம், தமிழ்நாடு, கர்நாடாகாவில் காவிரி பாசனப்பகுதியை ஆய்வு செய்ய ஒரு தொழில்நுட்ப குழுவை அமைத்தது. அந்தக் குழுவின் அறிக்கையைப் பெற்ற உச்சநீதிமன்றம், தனது இறுதிக்கட்ட விசாரணையை தொடங்கியது.

 

2017 ஜூலை 11 முதல் 2017 செப்டம்பர் 20 ஆம் தேதிவரை கர்நாடகா 9 நாட்களும், கேரளா 2 நாட்களும், தமிழ்நாடு அரசு 13 நாட்களும், புதுச்சேரி அரசு மற்றும் மத்திய அரசு தலா 1 நாளும் வாதங்களை முன்வைத்தன. இதையடுத்து, 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 20 தேதி தனது தீர்ப்பை ஒத்தி வைப்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்தது.

 

அதன்பிறகு சுமார் 5 மாதங்கள் கழித்தி தீர்ப்பை வழங்கிய உச்சநீதிமன்றம் காவிரி நடுவர் மன்றம் இறுதித் தீர்ப்பில் வழங்கிய 192 டிஎம்சி தண்ணீர் அளவிலும் 14.75 டிஎம்சி யை குறைத்து உத்தரவிட்டது. அத்துடன் இறுதி தீர்ப்பை செயல்படுத்துவதற்கு ஒரு திட்டத்தை 6 வாரங்களுக்குள் மத்திய அரசு அமைக்க வேண்டும் என்றும் கூறியது.

 

உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியம் என்று குறிப்பிடாமல், ஸ்கீம் என்ற வார்த்தையை பயன்படுத்தியது. ஆனால், அதை தமிழக அரசும், மத்திய அரசும் உடனடியாக கேள்வி கேட்காமல், 6 வாரம் முடிந்தபிறகு நீதிமன்றம் சென்றன.

 

இதையடுத்தே, தமிழகம் கொந்தளித்திருக்கிறது. ஆனால், இங்குள்ள கட்சிகளோ, திமுகவை குறைகூறுவதையே இன்றுவரை வாடிக்கையாக கொண்டுள்ளன. இதன்மூலம் தமிழ்நாட்டின் விவசாயிகளுக்கு மறைமுகமாக துரோகம் செய்கின்றன என்பதை அவை உணரவில்லை.

 

மாநில  முதல்வராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமியே கூசாமல் பொய் சொல்லும் நிலைதான் நீடிக்கிறது. ஏப்ரல் 3 ஆம் தேதி அதிமுக நடத்திய உண்ணாவிரத்தில் கலந்துகொண்டு பேசிய அவர், 1974 ல் சர்க்காரியா கமிஷனுக்கு பயந்துதான் காவிரி ஒப்பந்தத்தை கலைஞர் புதுப்பிக்கவில்லை என்கிறார்.

 

ஆனால், சர்க்காரியா கமிஷன் அமைத்தது 1976 ல் என்பதுதான் உண்மை. அதாவது, 1924 ஆம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தம் புதுப்பிக்கவில்லை என்பதே பொய். 1974 ஆம் ஆண்டு அந்த ஒப்பந்தத்தில் கூறியுள்ளபடி,  மறுஆய்வு செய்யப்பட்டது. மூன்று மாநில முதல்வர்கள் அமர்ந்து பேசி, நடுவர் மன்றம் அமைக்கும் யோசனையை ஏற்றனர். எனவே, 1924 ஒப்பந்தம் செல்லும் என்று காவிரி நடுவர் மன்றம் தீர்ப்பு அளித்துள்ளதையே பழனிச்சாமி மறைக்கிறார்.

 

மேலும் காங்கிரஸ் கூட்டணி அரசில் இருந்தபோதே திமுக அழுத்தம் கொடுத்து காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்திருக்கலாம் என்றும், இல்லையென்றால் காங்கிரஸ் அரசிலிருந்து வெளியேறுவோம் என திமுக கூறியிருந்தால் வாரியம் அமைக்கப்பட்டிருக்கும் என்றும் எடப்பாடி கூறியிருக்கிறார்.

 

Cauvery protest

 

இதிலும் உண்மை இல்லை. அதாவது, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில்தான், 2007 ஆம் ஆண்டு காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பு வந்தது. அந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடகா மற்றும் தமிழக அரசுகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க வேண்டும் என்று ஜெயலலிதாவும்கூட அன்று கூறியதை எடப்பாடி மறைக்கிறார். பிறகு எப்படி அப்போது காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க முடியும். 6 வார காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு தற்போது 2018ல் தான் வந்துள்ளது. அதையே மத்திய அரசும், எடப்பாடி அரசும் குழப்பிவிட்டன என்பதுதான் உண்மை.

 

காவிரி விஷயத்தில் இதுவரை நடந்த வரலாற்றை யாரும் மறைத்துவிட முடியாது. முன்பைவிட இப்போது காவிரி தொடர்பாக ஏராளமான விவரங்கள் ஆதாரபூர்வமாக வெளியாகத் தொடங்கியிருப்பது உண்மையை உணர உதவியாக இருக்கிறது. இனியாவது, தமிழர்களாய் இணைய முயற்சிப்போம்.

 

(முடிந்தது)

 

 

Karunanidhi with Indhra