Skip to main content

"நீ பொண்ணு, நான் பையன். நான் ஈஸியா தப்பிச்சுடுவேன்'' என்று கெத்தாக பேசுகிறான்... இளம்பெண் கண்ணீர்... காவல்துறை கண்டுகொள்ளவில்லை எனப் புகார்!

Published on 19/08/2020 | Edited on 22/08/2020

 

4543

 

ஒரு பெண்ணிடம் காதல் வலைவீசி, அவளது உடம்பில் பிளேடால் பெயர் எழுதவைத்து விட்டு ப்ளாக்மெயில் செய்து பணம் பறித்தது… இன்னொரு இளம்பெண்ணிடம் அதுவும் போலீஸாக இருப்பவரிடம் டாக்டர் போல் நடித்து உனது காதலன் எங்களது மருத்துவமனையில் அட்மிட் ஆகியுள்ளான். ஆபரேஷனுக்கு பணம் அனுப்புங்கள்’ என சீட்டிங் செய்தது, கல்லூரி மாணவியிடம் காதல் வலை வீசியது என ஒரே இளைஞன் பல பெண்களின் வாழ்க்கையில் விளையாடியிருக்கிறான். பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவர் புகார் கொடுத்தும் மகளிர் போலீஸ் நடவடிக்கை எடுக்கவில்லை.

 

இதுகுறித்து, நாம் விசாரித்தபோது… பாதிக்கப்பட்ட பெண் மே -28 ஆம் தேதி புகார் கொடுத்து, அப்போதைய, கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவுக்குப்பிறகு ஜூன் - 4 ஆம் தேதி வழக்குப்பதிவு செய்து 72 நாட்களாகியும் கைதுசெய்யாமல் அவன் முன்ஜாமீன் வாங்கும்வரை உறுதுணையாக இருந்திருக்கிறது, சென்னை மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல்நிலையம் என்ற அதிர்ச்சித் தகவல் கிடைத்தது. மேலும் பல காவல்துறை உயரதிகாரிகளும் சீட்டிங் இளைஞனைக் காப்பாற்றுவதிலேயே குறியாக இருந்திருக்கிறார்கள்.

 

தெருநாய்கள் மீது பரிவுகாட்டும் சமூகசேவகரும் சென்னை அசோக் நகரைச் சேர்ந்த ஆசிரியையுமான நிஷாவுக்கும் (பெயர் மாற்றப் பட்டுள்ளது) போரூர் மதாநந்தபுரத்தைச் சேர்ந்த ஏரோநாட்டிகல் என்ஜினியரிங் படித்த அனந்தபத்மநாபனுக்கும் நட்பு ஏற்படுகிறது. "நான், ஏற்கனவே லவ் பண்ணின பொண்ணு என்னை விட்டுட்டு போயிட்டா. நீயும் சித்தி கொடுமையால கஷ்டப்படுற. நானும் எங்கப்பாவோட இரண்டாவது மனைவிக்குப் பிறந்ததால கஷ்டப்படுறேன். உன்னோட, வலிகள் எனக்குத் தெரியும். நீ என்னை லவ் பண்ணனும்னுகூட அவசியமில்ல. நான், உன்னை லவ் பண்ணிக்கிறேனே? ப்ளீஸ்'' -இப்படியொரு புது டெக்னிக்குடன் அனந்த பத்மநாபன் காதல் வலை வீச, ஒரு கட் டத்தில் அதில் விழுந்தார் நிஷா. தன்னைவிட வயதில் மூத்தவரான நிஷாவிடம், தெருநாய்களைக் காப்பாற்றி மருத்துவ மனையில் சேர்க்க வேண்டியிருப்பதாகச் சொல்லி அடிக்கடி பணம் வாங்கிக் கொண்டே இருந்தான் அனந்த பத்மநாபன். இதுவே லட்சங்களைத் தாண்ட ஆரம்பித்தது.

 

543

 

திடீரென்று, ஒருநாள் நிஷாவிடம் 50,000 ரூபாய் பணம் மொத்தமாக கேட்க, இருவருக்குள்ளும் கருத்துமோதல் ஏற்படுகிறது. மூன்று நாட்கள் கழித்து வந்த அனந்தபத்பநாபன், "ஸ்வைதாகிட்ட (கனடாவில் போலீஸாக இருக்கும் இளம்பெண்ணின் பெயர் மாற்றப்பட்டுள்ளது) 50,000 ரூபாய் வங்கிட்டேன்'’ என்று நிஷாவுக்கு அதிர்ச்சி கொடுத்தான். "என்ன ஆனந்த்… அவ, ஏற்கனவே உனக்கு ஐ லவ் யூ சொன்னான்னும் அவளுக்கு வேற யார்கூடவே நிச்சயமாகிடுச்சுன்னும் என்கிட்ட சொன்ன. அப்பவே, அவகூட பேசக்கூடாதுன்னு சொல்லியிருந்தேன். இப்படி நடந்துக்கிறது நம்பிக்கை துரோகமில்லையா? யாராவது ஒருத்தரை லவ் பண்ணு. இப்படி, சீட்டிங் பண்ணாத'' என்று பிரேக்-அப் சொன்னார் நிஷா. அனந்த பத்மநாபன் தனது நண்பனின் மூலம் நிஷாவைக் கெஞ்சி சமாதானப்படுத்த மீண்டும் தொடர்ந்தது காதல்.

 

சில நாட்களுக்குப் பிறகு, அனந்த பத்மநாபனின் ஃபோனுக்கு திடீரென்று ஒரு அழைப்பு. அதன், ட்ரூ காலரில் ஒரு பெண்ணின் ஃபோட்டோ வருகிறது. போனை பிடுங்கி பரிசோதித்த நிஷாவுக்கு அதிர்ச்சி. யாரிடம் பேசமாட்டேன் என்று சத்தியம் வாங்கினானோ அதே ஸ்வைதாவிடமிருந்துதான் ஃபோன். நிஷாவை போலவே ஸ்வைதாவையும் என்னவளே’ என்று சேவ் செய்து வைத்திருந்தான். விடிய விடிய வாட்ஸ்-அப் காலில் தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்திருக்கிறான்.

 

654

 

"அவ… உன்கிட்ட சொல்லிடுவேன்னு ப்ளாக்மெயில் பண்றா நிஷா. அவளை, சமாளிக்கத்தான் பேசினேன்'' என்று சொல்லி மீண்டும் சமாளித்தான். குடும்பத்தினரை வைத்துப் பேசினான். மீண்டும் காதல் தொடர்ந்தது. திடீரென்று நிஷாவை நிராகரிக்க ஆரம்பித்தான். "இங்கப்பாரு ஆனந்த். உன்னை நான் உண்மையா லவ் பண்றேன்னு நிரூபிக்க என் உடம்புல பிளேடால எழுதவெச்சு, இரத்தம் சிந்தவெச்சிருக்க. அதுவும், கல்யாணம் பண்றேன்னு சொல்லி என்கூட ஒண்ணா இருந்துட்டு இப்போ அவாய்ட் பண்றியே... இது, மிகப்பெரிய குற்றம். தயவு செஞ்சு மன்னிச்சுடு'' என்று காலில் விழுந்து கெஞ்சினார் நிஷா.

 

"நீ எனக்கு மட்டுமே அடிமையா கிடக்கணும்ங்குறதுக்காக உன் உடம்புல பிளேடால என் பேரை எழுத வெச்சேன். ப்ளாஸ்டிக் சர்ஜரி பண்ணினாத்தான் அதை அழிக்கமுடியும். அதனால நான், சொல்றபடி மட்டும் நடந்துக்கோ'' என்று எச்சரித்தபடி தொடர்ந்திருக்கிறான். அதேநேரத்தில், ஸ்வைதாவிடமும் காதல் வலைவீசி பணம் பறித்திருக்கிறான் அனந்த பத்பநாபன். அதற்கு, அவன் போட்ட ட்ராமா தமிழ் சினிமா காட்சிகளையே ஓவர்டேக் செய்கிறது.

 

567

 

கனடாவில் இருக்கும் ஸ்வைதாவுக்கு திடீரென்று ஒரு நாள் பெண் டாக்டர் ஒருவரின் செல் நம்பரிலிருந்து வாட்ஸ்-அப் மெசேஜ் வருகிறது. "உங்க பாய் ஃப்ரெண்டு உடம்பு முடியாம ஹாஸ்பிட்டலில் ஆபரேஷனுக்கு அட்மிட் ஆகியிருக் காரு. அவர்கிட்ட, பணமில்லாததால 22,000 ரூபாய்ல 13,000 ரூபாய் நான் கட்டிட்டேன். ஆனா, மேஜர் சர்ஜரிக்கு 1 லட்ச ரூபாய் ஆகும். உங்க பெயரையேதான் சொல்லிக்கிட்டே இருக்காரு'' என்று மெசேஜ் வந்துள்ளது. ஆனால், பிறகுதான் தெரிந்தது, பெண் டாக்டர் பேசுவதுபோல ஸ்வைதாவிடம் பணம் கேட்டு சாட்டிங் செய்ததே அனந்த பத்பநாபன்தான். அதுவும், நிஷாவிடம் பேசிக்கொண்டிருக்கும் செல்ஃபோன் நம்பர். அது மட்டுமல்ல, அஸ்வினி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்கிற கல்லூரி மாணவியிடமும் ஒரு பக்கம் பேசிக்கொண்டிருப்பது இரண்டு இளம் பெண்களுக்கும் தெரியவந்து அதிர்ச்சி யடைந்திருக்கிறார்கள்.

 

மேற்கண்ட தகவல்களை நம்மிடம் கூறி கண்ணீர்வடித்த நிஷா, "இப்படி, தொடர்ந்து என்னைப்போன்று பல பெண்களை காதல் என்கிற பெயரில் ஏமாற்றி பணம் பறிப்பதை அவன் நிறுத்தணும். அவன் இஷ்டத்துக்கு அனுபவிக்கணும்னு தான் காதல்ங்குற பெயர்ல பெண்களின் உடலில் பிளேடால் பெயரை எழுதச் சொல்றான். இனிமேலும் வேறு எந்தப் பெண்ணும் இவ்ளோ கொடூரங்களையும் ஏமாற்றங்களையும் அனுபவிக்கக்கூடாதுன்னுதான் எனது குடும்பத்தினருடன் அவனது வீட்டிற்குப் போயி நியாயம் கேட்டோம். கூலாகக் கேட்டுக்கொண்டிருந்த அவனது அம்மா துளசியும் அப்பா பார்த்தசாரதியும், "என் பையன் கேவலமானவன்தான். நாங்களே, ஒத்துக்கிறோம். இவ்ளோ கேவலமானவன்னுதான் தெரியுதுல்ல. நீ எதுக்கும்மா அவன்கூட பேசின?''ன்னு அசால்டா கேட்டாங்க. அவங்க அம்மாவும் அவனுக்கு சப்போர்ட்டு.

 

"உன்னால ஒண்ணும் பண்ண முடியாது. போலீஸ்கிட்ட போவியா... மீடியாக்கிட்ட போவியா... யாராலையும் என்னை ஒண்ணும் பண்ணமுடியாது. நீ பொண்ணு, நான் பையன். நான் ஈஸியா தப்பிச்சுடுவேன்'' என்று கெத்தாக பேசி அனுப்பினான் அனந்தபத்மநாபன். அவன், சொன்னது போலவேதான் காவல்துறையில் நடந்தது'' என்று கண் கலங்குகிறார்.

 

தான், வேலைபார்க்கும் லிமிட்டில் மயிலாப்பூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். மகளிர் இன்ஸ்பெக்டர் ஜெயபாரதியும் டி.சி. ஜெயலட்சுமியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. "உன் புகாரை மட்டும்தான் உட்கார்ந்து பார்த்துக்கிட்டிருக்க முடியுமா?'' என்று அலட்சியப்படுத்தி அனுப்பிவிட்டார் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் பிரிவு டி.சி. ஜெயலட்சுமி. வேண்டுமென்றே, அனந்தபத்மநாபனை கைதுசெய்யாமல் பாதிக்கப் பட்டவர்களையே அலைக்கழித்திருக்கிறார்.

 

"அப்போதைய, கமிஷனர் உத்தரவுப்படி எஃப்.ஐ.ஆர். போட்டபிறகும் கூட அவனது, அப்பா பார்த்தசாரதி ஸ்டேஷனுக்கு வந்து அவனுக்கு உடம்பு சரியில்லாம ஹாஸ்பிட்டலில் இருக்கான்னு பொய் சொல்லிட்டுப்போறாரு. அட்மிட் ஆகியிருக்கானான்னுகூட செக் பண்ணாம பேசி அனுப்பிட்டாங்க இன்ஸ்பெக்டர் ஜெயபாரதியும் எஸ்.ஐ. மாணிக்கவாசுகியும்'' என்ற குற்றச்சாட்டு எழ, மயிலாப்பூர் மகளிர் இன்ஸ்பெக்டர் ஜெயபாரதியை தொடர்புகொண்டு கேட்டபோது, "நீங்க எதுக்கு இதுபற்றி கேட்குறீங்க?'' என்றவர், "ஹலோ… ஹலோ'' என்று வேண்டுமென்றே சொல்லிவிட்டு ஃபோனை துண்டித்தார். மீண்டும் தொடர்புகொண்ட போது அட்டெண்ட் செய்யவில்லை.

 

http://onelink.to/nknapp

 

டி.சி. ஜெயலட்சுமிக்கு மெசேஜ் அனுப்பியும் ஃபோன் அட்டெண்ட் செய்யவில்லை. இப்போதும், புகார் கொடுத்த பெண்ணை மிரட்டிக் கொண்டிருக்கிறது அனந்தபத்ம நாபன் தரப்பு. இதுகுறித்து, குற்றஞ்சாட்டப்பட்ட அனந்தபத்மநாபனை தொடர்புகொண்டபோதும் மெசேஜ் அனுப்பியபோதும் விளக்கம் அளிக்கவில்லை.

 

இதுபோன்ற, சீட்டிங் இளைஞர்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் தைரியமாக புகார் கொடுப்பதே அரிது. அப்படிப் புகார் கொடுக்கும் போது நடவடிக்கை எடுக்காமல் முன்ஜாமீன் வாங்கும்வரை அமைதியாக இருந்துவிட்டு நீதிமன்றத்தைக் காரணம் காண்பித்துத் தப்பித்துக்கொள்கிறார்கள் காவல் துறையினர். இந்தப் புகாரிலேயே, நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இவனிடம் பாதிக்கப்பட்ட மற்ற பெண்கள் எப்படிப் புகார் கொடுக்க முன்வருவார்கள்?

 

பொள்ளாச்சி காமக் கொடூரர்களையும் கன்னியாகுமரி காசி போன்ற பாலியல் மிருகங்களையும் உருவாக்குவதற்கு போலீஸின் இத்தகைய அலட்சியப் போக்கே காரணமாகிறது.

 

 

Next Story

சிகிச்சையின் போது இளைஞர் பலி; சுகாதாரத்துறை விசாரணை!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Youth sacrifice during treatment Health investigation

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு கடந்த 24 ஆம் தேதி (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருந்தது.

இதனையடுத்து உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என உயிரிழந்த இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் உறுதியளித்திருந்தார். அப்போது மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலையும் அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து இது தொடர்பாக விசாரணை நடத்த 2 இணை இயக்குநர்கள் கொண்ட குழுவை அமைத்து தமிழக மருத்துவத்துறை உத்தரவிட்டிருந்தது. இந்த குழு 2 நாட்களில் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஹேமச்சந்திரன் உயிரிழந்தது தொடர்பாக சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் செங்கல்பட்டு மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் மருத்துவர் தீர்த்தலிங்கம் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

Next Story

2024 ஆம் ஆண்டிற்கான விசிக விருதுகள் அறிவிப்பு!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
2024 Vck Awards Announcement!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழகம் மற்றும் இந்திய அளவில் ஆண்டுதோறும் பல்வேறு தளங்களில் சாதனைகள் படைத்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதாவது சமூகம், அரசியல், பண்பாடு, கலை-இலக்கியம் போன்ற தளங்களில் சீரிய முறையில் தொண்டாற்றுபவர்கள் உள்ளிட்ட பல்வேறு ஆளுமையினருக்கு, “அம்பேத்கர் சுடர், பெரியார் ஒளி, காமராசர் கதிர், அயோத்திதாசர் ஆதவன், காயிதேமில்லத் பிறை மற்றும் செம்மொழி ஞாயிறு” ஆகிய விருதுகள் 2007 முதல் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. 2022 ஆம் ஆண்டு முதல் ‘மார்க்ஸ் மாமணி’ விருதும் வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், மேனாள் கர்நாடக முதலமைச்சர் சித்தாரமையா, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, எழுத்தாளர் அருந்ததி ராய், தோழர் து.ராஜா, இலக்கியச் செல்வர் குமரிஅனந்தன், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, பாவலரேறு பெருஞ்சித்திரனார், உணர்ச்சிப் பாவலர் காசி ஆனந்தன், சொல்லின் செல்வர் ஆ.சக்திதாசன், பாவலர் வை.பாலசுந்தரம், பேராசிரியர் காதர்மொய்தீன், பேராசிரியர் ஜவாஹிருல்லா, ஏ.எஸ். பொன்னம்மாள், கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் உள்ளிட்டோருக்கு  இதுவரை விசிக விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் 2024 ஆம் ஆண்டுக்கான விசிக - விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் அம்பேத்கர் சுடர் விருது - நடிகர் பிரகாஷ்ராஜ், பெரியார் ஒளி விருது - வழக்கறிஞரும், திராவிடர் கழக பிரச்சாரச் செயலாளருமான அருள்மொழி, மார்க்ஸ் மாமணி விருது - இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், காமராசர் கதிர் விருது - இந்திய சமூக நீதி இயக்கத்தின் தலைவர் பேராயர் எஸ்றா சற்குணம், அயோத்திதாசர் ஆதவன் விருது - பேராசிரியர் ராஜ்கௌதமன், காயிதேமில்லத் பிறை விருது - வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியா அமைப்பின் முன்னாள் மாநிலத் தலைவர்  எஸ்.என். சிக்கந்தர், செம்மொழி ஞாயிறு விருது - கல்வெட்டியலறிஞர் எ. சுப்பராயலுவுக்கும் வழங்கப்பட உள்ளது. இந்த விருதுகள் வழங்கும் விழா மே 25 ஆம் தேதி (25.05.2024) சென்னையில் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை விசிக தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. வெளியிட்டுள்ளார்.