Skip to main content

“அது தான் அதிமுகவுக்கு விழுந்த முதல் அடி” - திமுக வேட்பாளர் பிரகாஷ்

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
DMK candidate Prakash interviewed and says That was the first blow to AIADMK

நாடாளுமன்றத் தேர்தல், ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. அந்த வகையில், தி.மு.க. அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகிறது. அதில், ஈரோடு மக்களவைத் தொகுதியில் தி.மு.க. கட்சி சார்பாக தி.மு.க. வேட்பாளராக பிரகாஷ் போட்டியிடுகிறார். நக்கீரன் சார்பாக அவரை பேட்டி கண்டோம். நம்முடைய கேள்விகளுக்கு  பிரகாஷ் அளித்த பேட்டி பின்வருமாறு...

அ.தி.மு.க வேட்பாளர்கள் எல்லாம் சாதாரண பின்னணி கொண்டவர்கள். ஆனால், தி.மு.க நிறுத்தும் வேட்பாளர்கள் எல்லாம் பொருளாதார பின்னணி கொண்டவர்களையும், வலுவான ஆட்களை தான் நிறுத்துகிறது என்று எடப்பாடி பழனிசாமி சொல்கிறாரே?

“நான் சாதாரண விவசாய குடும்பத்தில் இருந்து வந்தவன். சாதாரண வேட்பாளராக தான் நிற்கிறேன். அதனால், இந்த ஈரோடு நாடாளுமன்ற தேர்தல் பணமா? குணமா?. அவர்கள் பணத்தை நம்பி நிற்கிறார்கள்”.

ஏழைக் குடும்பங்களுக்கு வருடத்திற்கு ஒரு லட்ச ரூபாய் என்ற வாக்குறுதியை காங்கிரஸ் கொடுத்திருக்கிறது என்று நீங்கள் பிரச்சாரம் செய்து வருகிறீர்கள். ஆயிரம் ரூபாய் கொடுக்கும் இந்த திட்டத்தில் நிதிச்சுமை இருக்கிறது என்று நீங்கள் சொல்கின்ற இந்த நிலையில் ஒரு லட்ச ரூபாய்க்கான நிதி ஆதாரங்கள் எல்லாம் எங்கிருந்து வரும் என்ற கேள்வி வருகிறதே?

“சாதாரண, அதானி அம்பானிக்கு எப்படி இத்தனை லட்சம் கோடி இன்றைக்கு வந்தது. ரெண்டு பேருக்கு மட்டும் குவியும் பணத்தை மக்களுக்கு பிரித்து கொடுக்க போகிறோம் அவ்வளவுதான்”.

அகில இந்திய அளவில் நீங்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு மேல் இந்தியா கூட்டணி வெற்றி பெறும் பட்சத்தில், தி.மு.க.விற்கு அமைச்சரவையில் எந்த மாதிரியான மரியாதை கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?

“எங்களுக்கு பதவி என்பது ஒரு பொறுப்பு தான். வாஜ்பாய் ஆட்சியிலும் அண்ணன் டி.ஆர். பாலு இருந்திருக்கிறார். அதேபோல், மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவையிலும் டி.ஆர்.பாலு இருந்திருக்கிறார். மந்திரி சபை என்பது எங்களுக்கு முக்கியம் கிடையாது. எங்களைப் பொறுத்தவரை இந்திய நன்றாக இருக்க வேண்டும், இந்தியா வலுப்பெற வேண்டும், சிறந்த ஆட்சி கொடுக்க. அதற்கு பக்கபலமாக இருக்க வேண்டும் என்பதுதான் எங்கள் தலைவருடைய குறிக்கோள். அந்த குறிக்கோளுக்கு பின்னாடி எங்களுடைய இந்தியா கூட்டணியினுடைய 40 வேட்பாளர்களும் பின் தொடர்ந்து செல்வார்கள் என்று உறுதியாக கூறுகிறேன்”.

அ.தி.மு.க என்றால் கொங்கு மண்டலம் தான். கொங்கு மண்டலம் என்றால் அ.தி.மு.க தான், என்ற அந்த நம்பிக்கையில் தான் எடப்பாடி பழனிச்சாமி இருக்கிறார் என்று சொல்கிறார்களே?

“அந்த நம்பிக்கை எல்லாம் உள்ளாட்சி தேர்தலிலே உடைந்து விட்டது. உள்ளாட்சி தேர்தலில், அவர்கள் எந்த ஒரு மாநகராட்சியும் பிடிக்கவில்லை, எந்த ஒரு நகராட்சியும் பிடிக்கவில்லை. எல்லாமே தி.மு.க. பிடித்து விட்டது. அதுதான் அவர்களுக்கு முதல் அடி. இனிமேல் அடிமேல் அடி விழும். இனி, அதிமுகவுக்கு மேற்கு மண்டலமோ, கொங்கு மண்டலமோ அவர்களது கோட்டை கிடையாது. இந்த நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு தி.மு.க.வின் கோட்டையாக மாறப்போகிறது. ஏழு நாடாளுமன்ற தொகுதி இருக்கிறது. இந்த ஏழு நாடாளுமன்ற தொகுதியிலும் பா.ஜ.க.வும், அ.தி.மு.க.வும், நோட்டாவும் யார் முன்னாடி வருவார்கள் என்று போட்டி போடுவார்கள். இந்த ஏழு தொகுதிகளிலும் தி.மு.க மிகப்பெரிய வெற்றி பெறும். கடந்த உள்ளாட்சித் தேர்தலிலே அவர்கள் கோட்டை எல்லாம் உடைந்து விட்டது”.

இந்திய கூட்டணியில் திமுக டெபாசிட் கூட வாங்காது என்று எடப்பாடி பழனிசாமி கூறுகிறாரே?

“அவர் எடப்பாடியில் தூங்கி கொண்டே இருப்பார் போல. வெளியே வந்து பார்க்க சொல்லுங்கள். ஏனென்றால், அவர் கட்சியையே எடப்பாடியில் தான் நடத்துகிறார் என்று அவரது கட்சிகாரர்களே சொல்கிறார்கள்”.

370, 400 தொகுதிகளிலும் பா.ஜ.க வெற்றி பெறும் என்று பிரதமர் மோடி சொல்கிறாரே?

“மோடி தூக்கத்தில் உளறிக் கொண்டிருக்கிறார். உறுதியாக சொல்கிறேன் 400 தொகுதிக்கும் மேல் இந்தியா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். நூறு தொகுதிகளில் தான் பாஜக வெல்லும்”.

முதலமைச்சரும், அமைச்சர் உதயநிதியும் இத்தனை கூட்டங்களில் பேசியும் ஒரு கூட்டத்தில் கூட விவசாயிகளைப் பற்றி பேசவே இல்லை என்று எடப்பாடி பழனிச்சாமி கூறுகிறாரே?

“அவர் ஒரு விவசாயியாக இருந்து கொண்டு, விவசாயிகளின் கஷ்டம் தெரியாமல் இருக்கிறாரே. எத்தனையோ பிரச்சினைகள் இருந்திருக்கிறது. விவசாயிகளுக்கு தனி பட்ஜெட்டை நாம் உருவாக்கினோம். ஆனால் அவர்கள் பத்தாண்டு கால கட்சியில் அதை செய்ய முடியவில்லை. அவர் ஒரு போலி விவசாயி என்று தான் சொல்வேன். மக்களுடைய உணர்வை புரிந்து கொள்ள வேண்டும். அதனால், எங்களுடையது விவசாயிகளை காப்பாற்றக்கூடிய அரசு”.

தி.மு.க மீண்டும் வந்துவிட்டால் தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என்று எடப்பாடி கூறுகிறாரே?

“காமெடியாக இருக்கிறது. கடந்த 1996 ஆம் ஆண்டிலேயே நாங்கள் சொல்லிவிட்டோம். திருப்பி அந்த டயலாக்கை அவர் சொல்லிக் கொண்டிருக்கிறார். அன்றைக்கு இருந்த அ.தி.மு.க வேறு. அது எம்ஜிஆருடைய அ.தி.மு.க, ஜெயலலிதாவின் அ.தி.மு.க. ஆனால், இன்றைக்கு இருப்பது வியாபார அ.தி.மு.க. அதை உண்மையான அ.தி.மு.க தொண்டர்கள் அனைவரும் புரிந்து  விட்டார்கள்” என்று கூறினார்.

Next Story

'குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்கப்படும்' - அமைச்சர் முத்துசாமி

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் தண்ணீர் வேகமாகக் குறைந்து வருகிறது. இருப்பினும் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று வீட்டு வசதி துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி கூறியுள்ளார்.

அவர் ஈரோடு காந்திஜி சாலையில் திமுக சார்பில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 'பவானி சாகர் அணையில் மட்டுமல்லாமல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மின் உற்பத்தி அணைகளிலும் தண்ணீர் மிக குறைவாக உள்ளது. எங்களுக்கு கீழ் பவானி பாசனப்பகுதியில் உள்ள புஞ்சை பயிர்களுக்கு ஐந்தாவது நினைப்பிற்கு தண்ணீர் விட வேண்டும் என்பது ஆசைதான். ஆனால் நீர் இருப்பு அணையில் இல்லை. தமிழக முதலமைச்சர் 22 மாவட்டங்களுக்கு குடி தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க ரூபாய் 150 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலும் எந்தக் குடிதண்ணீர் பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார். ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டு அதிக உஷ்ணம் நிலவுகிறது. சாலை விரிவாக்கத்திற்காக பல இடங்களில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. அவ்விடங்களில் மரக்கன்றுகள் நட நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் 26 நிமிடங்கள் பழுது அடைந்தது குறித்து திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

ஈரோடு மாநகர மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியம் பகுதிச் செயலாளர் அக்னி சந்துரு மூன்றாம் மண்டல தலைவர் சசிகுமார் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Next Story

நீலகிரியைத் தொடர்ந்து ஈரோடு; தேர்தல் அதிகாரியிடம் திமுக மனு

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து வாக்கு பெட்டிகள் அனைத்தும் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளன.

இத்தகைய சூழலில் நேற்று முன்தினம் நீலகிரியில் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் திடீரென செயலிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதீத வெப்பம் காரணமாக கேமராக்கள் செயலிழந்திருக்கலாம் என மாவட்ட ஆட்சியர்  விளக்கம் அளித்திருந்தார். இந்நிலையில் ஈரோட்டில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமில் நள்ளிரவில் சிசிடிவி கேமரா பழுதானதால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஈரோடு மக்களவைத் தொகுதியின் வாக்கு எண்ணும் மையம் சித்தோடு ஐ.ஆர்.டி.டி. அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது. அதில் ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூம் அறையின் சிசிடிவி கேமரா நேற்று (28.04.2024) இரவு 11.30 மணியளவில் பழுதாகியுள்ளன. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தேர்தல் அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அதன் பின்னர் இன்று (29.04.2024) அதிகாலை 3.30 மணியளவில் வேறு கேமராக்கள் பொறுத்தப்பட்டன. ஈரோடு மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் பிரகாஷும், அதிமுக சார்பில் ஆற்றல் அசோக் குமாரும், பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் விஜயகுமாரும், நாம் தமிழர் கட்சி சார்பாக கார்மேகனும் போட்டியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த இரு சம்பவங்களும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் வாக்கு இயந்திரங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனத் திமுக சார்பில் மனு கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவை நேரில் சந்தித்த திமுக எம்.பி, என்.ஆர்.இளங்கோ இதற்கான மனுவை அளித்துள்ளார். அதில் 'வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் சிசிடிவி முறையாக இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வாக்கு இயந்திரங்கள் உள்ள அறையை சுற்றி 500 மீட்டர் சுற்றளவில் ட்ரோன் பறக்க தடை விதிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.