மலையேறுதலில் ஆர்வம் கொண்டு உலகம் சுற்றும் வாலிபன் என்கிற பட்டத்துக்கு தகுதியான ஒருவராகத் தன்னை வளர்த்துக் கொண்டுள்ள யூடியூபர் தமிழ் டிரெக்கர் புவனிதரணுடன் ஒரு சிறப்பு நேர்காணல்...
தஞ்சாவூரில் இருந்து வந்த நான் இவ்வளவு நாடுகளுக்குப் பயணம் செய்துள்ளேன் என்பதை நினைக்கும்போது எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது. பயணங்களில் ஈடுபாடு கொண்ட நான், பணம் சம்பாதிப்பதற்கான ஒரு கருவியாகவும் அதைப் பயன்படுத்துவதற்காக யூடியூப் சேனல் தொடங்கினேன். வெறும் 10000 ரூபாயை வைத்துக்கொண்டு கென்யா சென்றேன். சேனல் நன்கு வளர்ந்தது. இதன் பிறகு நிறைய நாடுகளுக்குச் செல்லும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. கென்யாவில் இந்தியர்கள் பலர் விவசாயம் செய்து அங்கிருப்பவர்களுக்கு வேலை கொடுக்கின்றனர்.
சில நாடுகளில் இந்தியர்கள் அதிகம் இருப்பதால் அங்கு நமக்கு அதிக மரியாதை இருக்கும். ரஷ்யாவில் இந்தியர்களைப் பார்த்தால் அவர்களோடு சேர்ந்து செல்ஃபி எடுத்துக்கொள்ளும் பழக்கம் இருக்கிறது. பயணம் என்பது குறுகிய வட்டத்துக்குள் இருக்கும் நமக்கு நிறைய விஷயங்களைக் கற்றுக்கொடுக்கும். நம்முடைய கோபம் குறையும். தனியாக ட்ராவல் செய்வதால் எனக்குள்ளேயே நான் நிறைய மாற்றங்களை உணர முடிகிறது. பயணத்தின்போது ஆங்கிலம் தெரிந்தவர்களிடம் நமக்குத் தேவையான விஷயங்களைப் பெற்றுக்கொண்டால் எந்த பிரச்சனையும் வராது.
இருப்பதை வைத்து எளிமையாக வாழ்வது எப்படி என்பதைப் பல நாடுகளில் கற்றுக்கொள்ளலாம். அந்தந்த நாடுகளில் கிடைக்கும் உணவையே நான் அருந்துவேன். ரஷ்யா போன்ற நாடுகளில் ஆங்கிலம் பேச மாட்டார்கள். எனவே நான் செல்லும் நாடுகளில் உள்ள மொழிகளில் சில வார்த்தைகளையாவது கற்றுக்கொண்டாக வேண்டும். பல நாடுகளில் என்னைத் தடுத்து நிறுத்தியிருக்கிறார்கள். பொதுவாகவே இந்திய பாஸ்போர்ட்டுக்கு மதிப்பு குறைவு தான். இந்தோனேசிய நாட்டில் பழைய கலாச்சாரங்களே இன்னும் பின்பற்றப்படுகின்றன.
எந்தெந்த நாடுகளில் எவ்வளவு செலவு ஆகும் என்பது குறித்த புரிதல் இப்போது எனக்கு வந்துவிட்டது. பல நாடுகளில் மக்கள் நம்மிடம் அதிக அன்பு செலுத்துவார்கள். சிரியாவில் அப்படிப்பட்ட அனுபவங்கள் எனக்கு ஏற்பட்டன. சோமாலியா பயணம் கொஞ்சம் ஆபத்தானதாக இருந்தது. வீடியோ எடுத்ததற்காக சிறைக்கு போன அனுபவமும் உண்டு. ஒருநாள் முழுவதும் சிறையில் அடைத்தார்கள். எப்போதும் துப்பாக்கி வைத்திருக்கும் நபர்களோடு தான் நான் செல்ல வேண்டியிருந்தது. தாலிபான் ஆளும் ஆப்கானிஸ்தானில் பெண்களை அதிகம் வெளியே பார்க்க முடியாது.
விரைவில் வடகொரியா செல்ல வேண்டும் என்கிற திட்டத்தில் இருக்கிறேன். சில நேரங்களில் தனியாகப் பயணம் செய்வது சலிப்பாக இருந்தால் நண்பர்களையும் உடன் இணைத்துக் கொள்வேன். பாகிஸ்தானிலும் மக்கள் அன்பாகவே இருக்கின்றனர். பல நாடுகளுக்கு சென்றுவிட்டு இந்தியாவுக்குத் திரும்பும்போது முதலில் பிரியாணி, இட்லி, தோசை என்று நம்ம ஊர் உணவுகளை உண்ண வேண்டும் என்கிற ஆசைதான் வரும். மற்ற நாடுகளில் இந்த உணவுகள் நம்முடைய டேஸ்டில் பட்ஜெட்டில் கிடைக்காது.
சில இடங்களில் இனவெறி பிரச்சனைகள் இருக்கும். ஆனால், அதை நாம் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். இத்தனை நாடுகளில் என்னுடைய ஃபேவரட் துபாய் தான்.