மறைந்த முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞரின் 100வது பிறந்தநாள் இந்த ஆண்டு முழுவதும் கொண்டாடப்படும் என முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதனையொட்டி தமிழகம் முழுவதும் கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அமைச்சர் சேகர்பாபு கலைஞர் நூற்றாண்டு விழாவை சென்னையில் ஏற்பாடு செய்திருந்தார். அந்த விழாவில் நடிகர் சத்யராஜ், பொன்வண்ணன், சமூக செயற்பாட்டாளர் வழக்கறிஞர் அருள்மொழி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு பேசினார்கள்.
கூட்டத்தில் வழக்கறிஞர் அருள்மொழி பேசியதாவது, “உன்னுடைய அறிவை கொண்டு சிந்தி என்று கூறிய பெரியாரை கவிதை மொழியில் எழுதும் திறமை இருக்கிறது என்றால் அது தான் கலைஞர். 1978 ஆம் ஆண்டிற்கு முன்னால் தமிழ்நாட்டில் சென்னை பல்கலைக்கழகம் என்ற ஒரே ஒரு பல்கலைக்கழகம் தான் இருந்தது. அன்றைக்கு கல்வித்துறையின் மிக முக்கிய அறிஞரான நெ.து.சுந்தரவடிவேல் பல ஊர்களுக்கு சென்ற பின்பு தமிழ்நாட்டில் மட்டும் பல்கலைக்கழகம் ஒன்று தான் இருக்கிறது என்று கூறிய புள்ளிவிவரத்தை திராவிடர் கழகத்தின் ஆசிரியர் கீ.வீரமணி விடுதலை பத்திரிகையில் வெளியிடுகிறார். அதைப் படித்த கலைஞர் சட்டமன்றத்தில் அறிவிக்கப்படாமலே ‘தமிழ்நாட்டில் விரைவில் இரண்டுக்கும் அதிகமான பல்கலைக்கழகங்கள் அமைக்கப்பட வேண்டும். ஆனால், அதை இங்கே அறிவிப்பது முறையாக இருக்காது என்பதால் அதனை சட்டமன்றத்தில் சபாநாயகர் சட்டப்பூர்வமாக அறிவிப்பார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று திருச்சியில் பெரியார் சிலை திறப்பு விழாவில் பேசுகிறார்.
இப்படி தன்னுடைய பேச்சை மிக நுட்பமாக கையாளுபவர் தான் கலைஞர். பல்கலைக்கழகம் அறிவிப்பை கலைஞர் ஆட்சியில் கொண்டு வந்ததன் பின்பு எத்தனையோ முன்னேற்றம் தமிழ்நாட்டில் நடந்தது என்றால் அதற்கு அடித்தளம் இட்டவர் கலைஞர். தமிழ்நாட்டில் மட்டும்தான் படித்த பெண்களுக்கு அரசு வேலைகளுக்காக 30 சதவீதம் இட ஒதுக்கீட்டை தந்தவர் கலைஞர். அந்த வரலாற்றின் தொடர்ச்சி தான் இன்றைக்கு அரசு பள்ளியில் படித்து கல்லூரியில் பயில வரும் மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உதவி தொகையாக கொடுக்க வேண்டும் என்று திராவிட மாடலின் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். இதனால் தான் இன்று உலகமே ஆச்சரியத்தோடு நம்மை பார்க்கிறது.
இன்று பாஜக ஆண்டுகொண்டிருக்கும் மணிப்பூரில் இரண்டு சாதிக்குள்ளும் கலவரத்தை உண்டாக்கி பல உயிர்கள் பலியாகிக் கொண்டிருக்கின்றனர். இப்படி ஒரு மாநிலம் பற்றி எரிந்து கொண்டிருக்கையில் அதை பற்றி ஒரு வார்த்தை பேசாமல் அமெரிக்காவில் சென்று இந்தியாவின் பெருமையை பற்றி பேசுகிறார் மோடி. அதே சமயம் அவர் பேசும் போது அமெரிக்காவில் அவரை எதிர்த்து கோஷம் எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
மேலும் மணிப்பூர் கலவரத்தை போல தமிழகத்திலும் நடக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சில கருத்துகளை பேசுவதற்கு ஆளுநர் போன்றோரை அனுப்பி வைத்திருக்கிறார்கள். வள்ளலார் சனாதனத்தின் உச்ச நட்சத்திரமாக இருந்தார் என்பதும், குழந்தை திருமணம் செய்த சிதம்பரம் தீட்சிதர்களுக்கு ஆதரவு தருவது போல பேசுவதும் என்று தவறான கருத்துகளைப் பேசி வருகிறார். இப்படி அரசியல் சாசன பொறுப்பில் இருக்கும் ஆளுநருக்கு பதவியில் இருக்க என்ன தகுதி இருக்கிறது. யாரெல்லாம் சனாதனத்தை எதிர்த்தார்களோ அவர்களையெல்லாம் எங்களுடைய ஆள் என்று சொல்லும் முயற்சியில் வள்ளலாரை போல அம்பேத்கரை கூட அவர்கள் கொண்டாடுகிறார்கள். அவர்களால் கை வைக்க முடியாத ஒரே இடம், அது பெரியார், அண்ணா, கலைஞர் வழி வந்த திராவிடத்தைத் தான்” என்று பேசினார்.