Skip to main content

இறந்து போகும் மாணவர்களின் இடத்திற்கு யார் வருகிறார்கள்..? - வழக்கறிஞர் அருள்மொழி கேள்வி!

Published on 20/11/2019 | Edited on 20/11/2019


சென்னை ஐஐடியில் கேரளாவை சேர்ந்த பாத்திமா லத்தீப் என்ற மாணவி கடந்த 9ம் தேதி தற்கொலை செய்து கொண்டு இறந்ததாக கூறப்படும் நிலையில், இதுதொடர்பாக பல்வேறு சந்தேகங்களை அவரின் குடும்பத்தினர் எழுப்பி வருகிறார்கள். இந்நிலையில் இதுதொடர்பாக வழக்கறிஞர் அருள்மொழி பேசியதாவது, " ஒரு பக்குவப்பட்ட இந்த மாநிலத்தில் இந்த மாதிரியான தற்கொலைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த பெண்ணின் அம்மா சொல்கிறார், தன்னுடைய மகளுக்கு அவளுடைய பெயரே பிரச்சனையாக இருந்துள்ளது என்று. அந்த பெண்ணுக்கு என்ன பெயர், பாத்திமானு பெயர் இருக்கு. பாத்திமானு இருக்கிற பெயர் எப்படி பிரச்சனை ஆக முடியும். அதற்கு ஏதாவது சாத்திய கூறுகள் இருக்கிறதா? பெயர் ஒரு இடத்தில் பிரச்சனை ஆகிறது என்றால் அதனை யாராவது ஏற்றுக்கொள்ள முடியுமா? சாதி ரீதியாக கொடுக்கப்பட்டிருந்த தாக்குதலை தற்போது மத ரீதியாக கொடுத்தால் அந்த சின்ன பசங்க என்ன ஆவார்கள். அவர்களால் அதனை தாக்குபிடிக்க முடியவில்லை என்பதே உண்மை. ஐஐடி ரொம்ப காலமாக இருக்கிறது. தமிழக அரசுக்கு சொந்தமான வனத்துறை நிலத்தில்தான் அது உள்ளது. ஆனால் இந்த மாதிரியான தற்கொலைகள் கொஞ்ச நாட்களாக நடைபெற்று வருகிறது. அதுவும் இட ஒதுக்கீட்டை பயன்படுத்தி நாம் எல்லாம் அங்கே சென்ற பிறகுதான் நடைபெறுகிறது. நீ அங்கே வந்தால் நாங்கள் என்ன செய்வோம் என்று சொல்கிற மாதிரியான தன்மையில் இந்த சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 
 

KJ


 

தொடர்ந்து 12 ஆண்டுகளாக இந்தமாதிரியான தற்கொலைகள் நடைபெற்று வருகிறது. அதற்கான காரணங்களை இதுவரையில் யாராவது கண்டுபிடித்தார்களா? ஏன் அதுகுறித்து யாரும் பேசவில்லை. அவ்வாறு தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் இடங்களுக்கு யார் வருகிறார்கள், இதை கண்டுப்பிடித்தாலே காவல்துறையினரின் வேலை வெகு சுலபமாகுமே? ஏன் அதனை கண்டுபிடிக்க தயங்குகிறார்கள். யாருக்காக பயப்படுகிறார்கள்.  அது மக்களின் வரி பணத்தில் நடக்கும் ஒரு நிறுவனம். அதற்கு குறிப்பிட்ட நபர்கள் உரிமை கொண்டாட முடியாது. இறந்தவர்கள் யாரும் சாதாரணமாக அந்த இடத்திற்கு வந்துவிட வில்லை. பாத்திமா அகில இந்திய அளவில் இரண்டாவது இடத்தை பிடித்ததன் மூலமாகவே ஐஐடியில் சேர்ந்துள்ளார்.


வேறு மாநிலத்தை சேர்ந்தவர், அதுவும் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த அவள் பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் அந்த இடத்திற்கு வந்திருப்பாள் என்பது நமக்கு தெரியும். இன்னும் சிலர், இந்த மாதிரியான கல்வி நமக்கு தேவையா என்று கேள்வி எழுப்புகிறார்கள். பழமைவாதிகளின் கேள்விகளை எல்லாம் கடந்துதான் ஒரு இஸ்லாமிய பெண் படிக்க வருகிறாள். அந்த சமூக பெண்கள் படிக்க வருவது என்பதே மிகப்பெரிய சாதனையாக உள்ள நிலையில், அவர்களுக்கு இந்த மாதிரியான தொல்லைகளும் கல்வி நிறுவனங்களால் கொடுக்கப்படுகிறது. அதில் இருந்து தப்பித்து யார் எப்படி போனால் நமக்கென்ன என்று இருப்பவர்கள் படித்து வெளியே வரலாம். இல்லை என்றால் பாத்திமா நிலைமைதான் ஏற்படும் என்ற நிலையில்தான் தற்போது ஐஐடிகளில் சூழ்நிலைகள் நிலவுகிறது" என்றார்.