எடப்பாடி அமைச்சரவையில் அமைச்சர்களாக இருப்பவர் கள் பற்றியும் ஜெ. முதல்வராக இருந்த காலக்கட்டத்தில் நடந்த ஊழல்கள் பற்றியும் டிசைன் டிசைனாக செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் அவை அடுத்தகட்டத்தை நோக்கி நகர்வதில்லை. ஏன் இந்த ஊழல் புகார்கள் தொடர்ந்து நகராமல் ஊனமாகிவிடுகின்றன என நக்கீரன் விசாரித்தபோது, அனைத்துக் கரங்களும் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைதான் காரணம் என சுட்டிக்காட்டினார்கள் சமூக ஆர்வலர்கள்.
ஊழல் வழக்கில் ஏ1 குற்றவாளியாக தண்டனை பெற்ற ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரது சொத்துக்கள் இதுவரை அரசால் கைப்பற்றப்படவில்லை. அந்த சொத்துக்களின் இன்றைய மதிப்பு சுமார் 30 ஆயிரம் கோடி. ஜெ.வின் போயஸ் கார்டன், சிறுதாவூர், கொடநாடு, ஐதராபாத் திராட்சைத் தோட்டம் உள்பட தமிழ்நாடெங்கும் 91-96 ஆண்டு மதிப்பில் 66.66 கோடிக்கு ஜெ. சசி குடும்பத்தினர் சொத்துக்களை வாங்கி குவித்தார்கள். அது குற்றம் என நிரூபிக்கப்பட்டது. அந்த வழக்கை நடத்திய தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அதை கைப்பற்ற முன்வர வில்லை.
கொடநாடு எஸ்டேட்டில் தேயிலை பறிக்கப்பட்டு இன்றளவும் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட அனைத்து சொத்துக்களும் சசிகலா குடும்பத்தினாரால் கையாளப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய குன்ஹா நீதிபதியாக இருந்த கோர்ட்டில் இருந்து அனுமதி பெற்று, அந்த சொத்துக்களை கைப்பற்றும் வேலைகளை தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைதான் செய்ய வேண்டும். தீர்ப்பு வந்து அதற்காக சிறை சென்ற சசிகலா விடுதலையாகி வருகிறார். ஆனால் அந்த வழக்கில் சம்மந்தப்பட்ட சொத்துக்கள் சசிகலாவின் ஆளுமையில்தான் இருக்கிறது.
பவளம், வைரம், கோமேதகம் ஆகிய விலை உயர்ந்த கற்கள் இணைக்கப்பட்ட ஜெயலலிதா, சசிகலா ஆகியோருக்கு சொந்தமான நகைகள் பெங்களூரு நகரத்தில் உள்ள அரசு கருவூலத்தில் தூங்கிக்கொண்டிருக்கிறது. அதைப்பற்றி தமிழக லஞ்சஒழிப்புத்துறை கவலைப்படவே இல்லை. ஆனால் எடப்பாடி அமைச்சரவையில் உள்ள மந்திரிகள்மீது ஊழல் புகார் சொன்னால் கோட்டைக்கே வந்து அதில் உண்மை இல்லை என சொல்வதற்கு தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை தயாராக இருக்கிறது என்கிறார் அறப்போர் இயக்கத்திற்கான ஜெயராமன்.
""தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலு மணி. இவருக்கு எதிராக பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்கள் அவ்வப்போது வந்துகொண்டே இருக்கும். நாங்கள் அறப்போர் இயக்கத்தின் சார்பில் அவர் மீது ஒரு ஊழல் ஒன்றை கொடுத்தோம். அந்த ஊழல் புகாரில் உண்மை இருக்கிறதா என விசாரிக்க சத்தியநாராயணன், ஹேமலதா ஆகியோர் நீதிபதிகளாக இருக்கும் அமர்வு உத்தரவிட்டது.
அந்த வழக்கை விசாரித்த பொன்னி என்கிற லஞ்ச ஒழிப்புத்துறையைச் சேர்ந்த உயர் அதிகாரியோ, அமைச்சர் மேல் கொடுத்த புகாரை விசாரித்தோம். அதில் உண்மை இல்லை என அவரே ஒரு அறிக்கை எழுதி அதை நீதிமன்றத் திற்குக்கூட தெரிவிக்காமல் அரசுக்கு அனுப்பி விட்டார். நீதிமன்ற உத்தரவின் பேரில் அமைச்சருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட ஊழல் புகாரை அரசு ரத்து செய்து விட்டது.
இதைப் பார்த்த நீதிமன்றம் நீதிமன்றத்திற்கு தெரிவிக்காமல் அரசுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி எப்படி அறிக்கை சமர்பிக்கலாம். நாங்கள்தானே இந்த ஊழல் புகாரை பற்றி விசாரிக்கச் சொன்னோம். எங்களுக்கே தெரியாமல் அரசு இந்த ஊழல் புகாரை ரத்து செய்த தன் மர்மம் என்ன என தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையை கண்டித்ததோடு, அமைச்சர் வேலுமணி மீதான ஊழல் புகார் தொடர்பான வழக்கை தமிழக அரசு ரத்து செய்தது தவறு என தீர்ப்பளித்தது.
அத்துடன் அமைச்சர் வேலுமணி மீது அறப்போர் இயக்கம் தொடுத்த மற்றொரு வழக்கையும் சேர்த்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது'' என்கிறார் அறப்போர் இயக்க தலைவர் ஜெயராமன். இவையெல்லாம் நீதிமன்றத்தில் உள்ள வழக்குகள். கோவையில் சுகா தாரத்துறை ஆய்வாளர் அலுவலகத்தை ஓலைக்குடிசைக்கு மாற்றிவிட்டு அந்த அலுவலகம் இருந்த இடத்தில் அம்மா ஐ.ஏ.எஸ். அகாடமி என்ற பெயரில் பல மாடிகள் கொண்ட புதிய கட்டிடத்தை அமைச்சர் வேலுமணி, அவர் நிர்வாகி யாக இருக்கும் தனியார் டிரஸ்டுக்காக திறந்தார்.
இதுதவிர ஜெ. ஆட்சிக் காலத்தில் ஒரு கிலோ இரண்டாயிரம் ரூபாய் என இருந்த நிலக்கரியை ஆறாயிரம் ரூபாய் விலை கொடுத்து வாங்கினார் என முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மற்றும் மோடிக்கு நெருக்கமான தொழிலதிபரான அதானி ஆகியோர் மீதான புகார் ஒன்று லஞ்ச ஒழிப்புத்துறையால் விசாரிக்கப்பட்டு வருகிறது.
முன்னாள் தலைமைச் செயலாளரான ராம்மோகன்ராவ் மகன் விவேக் பாபிசெட்டி ஆகியோருக்கு நெருக்கமான பாஸ்கர் நாயுடு என்பவர் தமிழக முழுவதும் உள்ள 37 அரசு மருத்துவமனைகள், 20 மருத்துவக் கல்லூரிகளை பாதுகாப்பு மற்றும் துப்புரவு பணிகளை மேற்கொள்ள பத்மாவதி ஹாஸ்பிடாலிட்டி அண்டு பெசிலிட்டி மேனேஜ்மெண்ட் என்கிற நிறுவனத்தின் பெயரில் டெண்டர் எடுத்தார். அதன் மதிப்பு 520 கோடி ரூபாய். அந்த நிறுவனத்திற்கு அளிக்கப்பட்ட பணிகளுக்கு சாட்சியாக அப்போதைய தலைமைச் செயலாளர் ராம்மோகன் ராவே கையெழுத்திட்டார். அப்பொழுது மருத்துவ சேவை நிறுவனத்தின் இயக்குநராக இருந்த அபூர்வா ஐ.ஏ.எஸ்., தலைமைச் செயலாளர் ராம்மோகன் ராவுக்கு நெருக்கமான பத்மாவதி ஹாஸ்பிடாலிட்டி நிறுவனத்திற்காக அந்த டெண்டரில் பல குளறுபடிகளை செய்தார்.
அந்த டெண்டரை எடுத்த பத்மாவதி நிறுவனம் அந்த வேலைகளை முழுமையாக செய்யவில்லை. நூறு பேரை வைத்து வேலை செய்துவிட்டு, இருநூறு பேர் வேலைக்கு வருகிறார் கள் என போலி கணக்குகளை அந்த நிறுவனம் அரசுக்கு அளித்தது. அந்த நிறுவனத்தின் சார்பில் மருத்துவமனைகளில் பணியாற்றும் பணியாளர் களும் நோயாளிகளை மிரட்டி லஞ்சம் வாங்கினார் கள். இப்படி ஏகப்பட்ட புகார்கள் எழவே இதையும் ஒரு வழக்காக அறப்போர் இயக்கம் மத்திய மாநில அரசுகளிடம் மனு அளித்தது.
இந்தப் புகாரையும் லஞ்ச ஒழிப்புத்துறைதான் விசாரிக்கிறது. லஞ்ச ஒழிப் புத்துறையைச் சார்ந்த இராமச்சந்திரன் என்கிற அதிகாரிதான் இந்த வழக்கின் விசாரணை அதிகாரி. கடந்த சில மாதங்களாக இந்த வழக்கு திடீரென வேகம் பெற்றதாக லஞ்ச ஒழிப் புத்துறை அதிகாரிகள் சொல்கிறார்கள். இரவோடு இரவாக டாக்டர்கள், லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்திற்கு அழைத்து வரப்படுகிறார்கள். அவர்களிடம் பத்மாவதி ஹாஸ்பிடாலிட்டி நிறுவனம் சிறப்பாக செயல்படுகிறது என சாட்சியங்கள் பதிவு செய்யப்படுகின்றன. லஞ்ச ஒழிப்புத்துறையின் தலைவராக இருப்பவர் விஜயகுமார். அவர் இந்த மாதம் 31ஆம் தேதி யோடு ஓய்வு பெறுகிறார். அவர் ஓய்வு பெறுவதற்குள் பத்மாவதி நிறுவனத்தின் மீதான இந்த வழக்கை முடித்துவிட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர். அதற்காக விசாரணை அதிகாரியான இராமச்சந்திரனுக்கு ஏகப்பட்ட நெருக்குதல்களை கொடுத்து வருகின்றனர்.
அவர் அந்த நெருக்குதல்களை தாங்க முடியாமல், பத்மாவதி ஹாஸ்பிடாலிட்டி நிறுவனத்திற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என்றும், அந்த வழக்கில் தொடர்புடைய முன்னாள் தலைமைச் செயலாளர் ராம்மோகன்ராவின் மகனுக்கு நெருக்கமான பாஸ்கர் நாயுடு எந்த குற்றமும் செய்யவில்லை என அறிக்கை தரும்படி உயர் அதிகாரிகள் எனக்கு அழுத்தம் தருகிறார்கள் என அந்த வழக்கு தொடர்பான பைல்களிலேயே எழுதி வைத்துவிட்டார்.
லஞ்ச ஒழிப்புத்துறையில் மூன்று ஐ.ஜி. பதவிகள் உள்ளன. லஞ்ச ஒழிப்புத்துறையின் ஐ.ஜி.யாக இருந்த முருகன், தென்மண்டல ஐ.ஜி.யாக மாற்றப்பட்டுவிட்டார். வேறுயாரும் அந்தப் பதவிக்கு நியமிக்கப்படவில்லை. டி.ஐ.ஜி.யாக ராதிகாவும், எஸ்.பி.யாக சண்முகமும் இருக்கிறார்கள். இவர்கள்தான் விசாரணை அதிகாரிக்கு அழுத்தம் கொடுத்து ராம்மோகன்ராவ் தொடர்புடைய வழக்கை லஞ்ச ஒழிப்பு துறை தலைவரான விஜயகுமார் ஓய்வு பெறுவதற்குள் முடித்துவிட வேண்டும் என கோப்புகள் தயார் செய்துள்ளார்கள். இப்பொழுது அந்த கோப்புகள் விஜயகுமாரின் பரிசீலனையில் இருக்கிறது என்கிறார்கள் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள்.
-வணங்காமுடி