உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 16 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது. 95 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 150-க்கும் மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். 5000க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்நிலையில் தமிழ்நாடு மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கத்தின் தலைவர் செல்லபாண்டியன், கரோனா தொடர்பாக எடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பாக பேசியுள்ளார். அவர் இதுதொடர்பாக கூறும்போது, "இன்றைக்கு தமிழ்நாடு முழுவதும் தலைவரே கடைய தொறக்க சொல்லுங்க என்ற கோரிக்கை எனக்கு அதிகம் வருகிறது. இருந்தாலும் இந்த நேரத்தில் நம்முடைய குடும்பத்தை பாதுகாக்க வேண்டிய தேவை அதிகம் இருக்கிறது. தமிழகத்தில் டாஸ்மார்க் கடைகளில் 450 வகையிலான சரக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 10 மது ஆலைகள் தமிழகத்தில் உள்ளது. தெலுங்கானாவில் உள்ள புகழ்பெற்ற பகாடியா மது ஆலை இந்த கரோனா பாதிப்புக்கு பிறகு, தங்கள் ஆலைகளில் மதுவுக்கு பதிலாக சானிடைசர் தயாரிக்க போவதாக கூறியிருக்கிறார்கள். அப்படி கூறியதுடன் மட்டுமில்லாமல் நாள் ஒன்றுக்கு 70 ஆயிரம் லிட்டர் சானிடைசர் தயாரிக்கப்படும் என்றும் சொல்லியிருக்கிறார்கள்.
ஆனால் தமிழ்நாட்டில் பத்து மது ஆலைகள் இருந்தும், இந்த மாதிரியான எந்த அறிவிப்பையும் செய்யவில்லை. நான் தமிழக அரசிடம் சொல்வெதல்லாம் ஒன்றுதான், டாஸ்மாக் கடைகளில் உள்ள சரக்கை எல்லாம் திருமணம் மண்டபங்களில் கொண்டு போய் வைப்பதற்கு பதிலாக இந்த மாதிரி டானிடைசராக மாற்ற வேண்டும். அதை சானிடைசராக மாற்ற பெரிய ஆய்வுகள் எல்லாம் செய்ய தேவையில்லை. இத்தனை லிட்டர் ஆல்ஹகாலுக்கு இவ்வளவு தண்ணீர் ஊற்ற வேண்டும் என்ற விதிமுறைகளின் அடிப்படையில் குவார்ட்டர் பாட்டிலில் இருந்து அனைத்து பாட்டில்களையும் நம்மால் சானிடைசராக மாற்ற முடியும். அதனை தமிழக முதல்வர் பச்சை தமிழர் பழனிசாமி அவர்கள் செய்ய வேண்டும். நம்முடைய சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் சிறப்பான முறையில் பணியாற்றி வருகிறார்கள். அவ்வாறு நம்முடைய தமிழக அரசு செய்யுமானால், பச்சை தமிழர் பழனிசாமி 2021ம் ஆண்டு முதல்வர் ஆவதை யாராலும் தடுக்க முடியாது" என்றார்.