இந்தியாவில் கரோனா தாக்கியவர்களின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்ததற்கு காரணம்,டெல்லியில் நடைபெற்ற ஒரு இஸ்லாமிய மாநாடுதான் என்பதே தலைநகரம் முதல் குக்கிராமம் வரை வாட்ஸ் ஆப் பரவலாகவும்,பரபரப்பு பேச்சாகவும் இருக்கிறது.கரோனா தாக்கத்திற்குப் பின்னால்,இஸ்லாமிய சதி இருப்பதாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு விவாதங்கள் நடக்கின்றன.கரோனா ஜிகாத் என்ற பெயரில் ஹேஷ்டேக்கும் ட்விட்டரில் ட்ரெண்டாகிறது.
அப்படி என்னதான் நடந்தது?
டெல்லியின் நிஜாமுதீன் பகுதியில் நூற்றாண்டு பழமையான பெங்காலிவாலி மசூதி இருக்கிறது.தப்லீக் ஜமாஅத் என்ற அமைப்பின் சர்வதேச தலைமையகமான இந்த மசூதியில், ஆண்டுதோறும் முக்கியப் பிரதிநிதிகள் ஒன்றுகூடி மாநாடு நடத்துவது வழக்கம். அதுபோலவே,இந்த ஆண்டும் மார்ச் 8, 9, 10 மற்றும் 20-ம் தேதி வாக்கில் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில், மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து, இலங்கை உள்ளிட்ட ஏராளமான நாடுகளில் இருந்தும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் இரண்டாயிரத்துக்கும் அதிகமான பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். கரோனா தொற்று நாடெங்கிலும் பரவிய நிலையில், இந்த மாநாடுதான் அதற்கு காரணம் என்ற குற்றச்சாட்டே பிரதானமாகியுள்ளது.
தப்லிக் அமைப்பினர் கரோனா வைரஸைத் திட்டமிட்டுப் பரப்பினார்களா என்ற கேள்வியை ஆராய்வதற்கு முன், தப்லீக் ஜமாஅத் அமைப்பைப் பற்றி அறிந்துகொள்வது அவசியமாகிறது. எல்லா மதத்தினரிலும் இறை மறுப்பாளர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படி இஸ்லாமிய மதத்தில் இருப்பவர்களை இனங்கண்டு, அல்லாவை முழுமையாக ஏற்றுக்கொள்ள வைப்பதுதான் இவர்களது தலையாய கடமை. அதைத் தவிர உலக நடவடிக்கைகள் எதிலும் இவர்களின் பங்கு இருக்காது.
நேரு பிரதமராக இருந்தபோது உள்துறை அமைச்சராக இருந்த வல்லபாய் பட்டேலுக்கு, தப்லீக் ஜமாஅத் பற்றி உளவுத்துறை ஒரு அறிக்கை கொடுத்தது.அதில்கூட, இவர்கள் வானத்துக்கு மேலேயும்,பூமிக்குக் கீழேயும் நடப்பதைத்தான் விவாதிப்பார்களே தவிர, நாட்டு நடப்பில் எந்தத் தலையீடும் இருக்காது.இவர்களால் எந்தப் பிரச்சனையும் வரப்போவதில்லை’என்று சொல்லப் பட்டிருக்கிறது.அதனால்தான், இவர்கள் நடத்தும் மாநாட்டிற்கு எப்போதும் தடை விதிக்கப்பட்ட தில்லை.பாபர் மசூதி இடிப்புக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றுமாறு பிற இஸ்லாமிய அமைப்புகள் கேட்டபோது, அந்த மசூதி போனாலென்ன? வேறு மசூதிகளில் நாம் தொழுவோம்.அல்லா நம்மைக் காப்பார் என்று சொன்னவர்கள் இந்த தப்லீக் ஜமாஅத்-தைச் சேர்ந்தவர்கள்.
தற்போது நடந்து முடிந்த மாநாட்டிற்குக் கூட, பல மாதங்களுக்கு முன்பே இவர்கள் அனுமதி பெற்றுத் தான், ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். ஒருபுறம், ஒரு கொடிய வைரஸை உடலில் வைத்துக்கொண்டு, ஊரெல்லாம் சுற்றித்திரிந்தது இவர்களது அலட்சியமாக இருப்பினும், இதில் மத்திய, மாநில அரசுகளின் அலட்சியப் போக்குகளையும் சுட்டிக்காட்டாமல் இருக்கமுடியாது.கரோனா வின் தாக்கம் வேகமெடுத்திருந்த போதும், மார்ச் 9ந்தேதியில் இருந்துதான், விமான நிலையங்களில் வெளிநாட்டுப் பயணிகள் சோதனையிடப்பட்டு அனுமதிக்கப்பட்டனர்.உலக சுகாதார நிறுவனம் மார்ச் 11ந்தேதியே, கரோனாவைத் தொற்று வியாதி என்று அறிவித்தது.ஆனால், கரோனாவால் மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்படவில்லை என்று மார்ச் 13-ம் தேதி சொல்லிவிட்டு சாதாரணமாகப் பிரச்சனையைக் கடந்துசென்றது மத்திய அரசு.
டெல்லியில் கரோனாவின் வேகம் அதிகமானதும், மிகச்சில கெடுபிடிகளை விதித்தார் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்.அது போதாதென்பதைத் தாமதமாக உணர்ந்த பிறகுதான், மார்ச் 16-ம் தேதி முதல் கெடுபிடிகள் வலுவாகின.ஐம்பது பேருக்கு மேல் ஒரே இடத்தில் கூடக்கூடாது என்று உத்தரவு பறந்தது.அதையும்விட தாமதமாக, மார்ச் 22-ம் தேதி மக்கள் ஊரடங்கை கடைப்பிடிக்கச் சொல்லி மார்ச் 19-ம் தேதி அறிவித்தார் பிரதமர் மோடி. அதற்குள் தப்லீக் மாநாட்டில் கலந்துகொண்ட பலர் இந்தியா முழுவதும் பயணமாகி இருந்தனர்.
தெலங்கானா மாநிலத்தில் கரோனா தொற்றுள்ளவர்கள் அடையாளம் காணப்பட்ட போது, அவர்கள் தப்லீக் மாநாட்டோடு தொடர்பு கொண்டிருப்பதை மார்ச் 17-ம் தேதியே மத்திய அரசுக்கு அறிவுறுத்தியாகவும், அதேபோல், தமிழ்நாட்டில் தப்லீக் மாநாட்டில் தொடர்புடையவர்களுக்கு கரோனா தொற்று இருப்பதாகத் தமிழக அரசு தெரியப் படுத்தியதாகவும் செய்திகள் வெளியாகின.ஆனால், மத்திய அரசோ அனைத்து மாநில அரசு களுக்கும் தப்லீக் ஜமாஅத் மாநாடு தொடர்புபற்றி அறிவுறுத்தியது மார்ச் 21-ல்தான்.
இதற்கிடையே, நிசாமுதீன் மசூதியில் சிக்கித் தவிக்கும் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர் களை மீட்கக்கோரி பலமுறை டெல்லி போலீசில் தப்லீக் ஜமாஅத் நிர்வாகிகள் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.மார்ச் 31-ம் தேதி அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு,அங்கிருந்து 1,033 பேர் மீட்கப்பட்டனர்.அவர்களில் முதற்கட்டமாக 24 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப் பட்டது. 700 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் தெரிவித்திருக்கிறார்.இந்த மாநாட்டை ஒருங்கிணைத்த தலைவர்கள் மீது தொற்று நோயைப் பரவவிட்ட குற்றத்திற்கான பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.தற்போது, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் இந்த விவகாரத்தில் கிடுக்குப் பிடி பிடித்தாலும், மாநாட்டில் கலந்துகொண்ட சிலர் அல்லா மீது பாரத்தைப் போட்டுவிட்டு தலைமறைவாக இருக்கின்றனர். பலர் தாமாகவே முன்வந்து பரிசோதனைக்கு ஒத்துழைக்கின்றனர். தமிழ்நாட்டைப் பொறுத்த வரை முதலமைச்சர் எடப்பாடியும், சுகாதாரத்துறைச் செயலாளர் பீலா ராஜேஷூம் விடுத்த வேண்டுகோளை ஏற்று,டெல்லியிலிருந்து திரும்பியிருந்த அனைவரும் தங்களைப் பரி சோதனைக்குட்படுத்திக் கொண்டார்கள்.இதனைச் சுகாதாரத் துறைச் செயலாளர் அவர்களே உறுதிப்படுத்தியிருக்கிறார்.
ஜனவரி வாக்கில் கரோனா தொற்று பரவலானபோது, விமானநிலையங்களில் கட்டுப்பாடு தேவை என்று பிப்ரவரி 12-ம் தேதியே வலியுறுத்தினார் ராகுல்காந்தி.விமானப் போக்கு வரத்தைக் கையில் வைத்திருக்கும் மோடி அரசு இதைக் கண்டு கொள்ளவில்லை.டெல்லி அரசின் கட்டுப்பாடுகளை மீறி தப்லீக் மாநாடு நடந்தபோதே தடுக்காமல், சட்டம் ஒழுங்கைக் கட்டுப் பாட்டில் வைத்திருக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் நழுவவிட்டது.மாநில அரசுகளும் மத்திய அரசின் உத்தரவுக்காகக் காத்திருந்து, மற்ற செயல்பாடுகளைத் துரிதப்படுத்த தவறிவிட்டன.
நோய்தான் உலகின் எதிரி. நோயாளிகளை எதிரியாகப் பார்த்து, மதச்சாயம் பூசுவது ஆபத்தானது என்கிற சமூக ஆர்வலர்களும் அரசியல் நோக்கர்களும், “தமிழ்நாட்டில் கரோனா நோயாளிகள் அதிகரித்ததற்கு டெல்லி மாநாடுதான் காரணம் என்று மக்கள் மனதில் பதிய வைப்பதில் பா.ஜ.க.வுக்கு அ.தி.மு.க. தரப்பும் துணை போகிறது.மதப்பிரிவினை அரசியலைத் தமிழ்நாட்டிற்குள் இதுவரை செயல்படுத்த முடியாத பா.ஜ.க தரப்பு இதனைப் பயன்படுத்திக் கொள்ளப் பார்க்கிறது’‘என்றும் எச்சரிக்கின்றனர்.
-ச.ப.மதிவாணன்