தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த ஜூலை 28ம் தேதி ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் ‘என் மண்; என் மக்கள்’ எனும் பெயரில் பாத யாத்திரையைத் துவங்கினார். இதனை மத்திய அமைச்சர் அமித்ஷா துவக்கி வைத்தார். குறிப்பாக இந்த பாத யாத்திரை துவங்கியபோது, பல மத்திய அமைச்சர்கள் இதில் கலந்துகொண்டு பாஜகவின் ஒன்பது ஆண்டுக் கால ஆட்சி சாதனையை மக்களிடம் எடுத்துச் சொல்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்தப் பாத யாத்திரையைப் பலகட்டங்களாக வகுத்த அண்ணாமலை, முதல் கட்டமாகக் கடந்த 22ம் தேதி நெல்லையில் முடித்தார். இந்த முதல் கட்ட பாத யாத்திரையில், 7 நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் 41 சட்டமன்றத் தொகுதிகளை அவர் கவர் செய்திருந்தார். தனது இரண்டாம் கட்ட பாத யாத்திரையை வரும் செப். 3ம் தேதி தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தில் இருந்து அவர் துவங்க இருக்கிறார்.
இந்தப் பாத யாத்திரைக்காக அவர் தயார் செய்திருந்த பிரச்சார வாகனம் பெரும் பேசுபொருளானது. அந்த வாகனத்தில் பல்வேறு சொகுசு வசதிகள் செய்யப்பட்டிருந்தன எனப் பலராலும் விமர்சிக்கப்பட்டது. அதேபோல், தினமும் சில கி.மீ. தூரம் வரையே அவர் நடப்பதாகவும், பிறகு அந்த சொகுசு வாகனத்தில் தொகுதியில் பயணிப்பதாகவும் பலராலும் விமர்சிக்கப்பட்டது.
முதல்கட்ட ‘என் மண்; என் மக்கள்’ பாத யாத்திரையை அண்ணாமலை நிறைவு செய்துவிட்டு, 10 நாள் ஓய்வில் இருக்கிறார். இதுகுறித்து பாஜக தரப்பில் விசாரித்தபோது, தனது பாத யாத்திரைக்கான ஏற்பாடுகள் சரியில்லை என்பது அவருக்கு இருக்கும் பெரும் ஆதங்கமாம். டெல்லியில் இருந்து ஏகத்துக்கும் இது தொடர்பாகக் கேள்வி எழுப்புகிறார்களாம். அதனால் தனது குழுவினரிடம் அவர், “இந்தப் பயணத்தின் போது உறுப்பினர்கள் சேர்க்கையைக் கையில் எடுக்கச் சொன்னேன். அதைச் செய்யவில்லை. ஒன்றிய அரசின் திட்டங்களைப் பற்றிய பிரச்சாரத்தையும் நாம் செய்யவேண்டும் என்று சொன்னேன். அதையும் நீங்கள் யாரும் கேட்கவில்லை. அதனால் டெல்லியின் பார்வையில், நாம் சும்மா நடந்து அலப்பறை செய்தது போல் ஆகிவிட்டது” என்று மிகவும் கடிந்துகொண்டாராம். அடுத்தகட்ட பயணத்தில் இதுபோன்ற குறைகள் இருக்கக்கூடாது என்று அவர்களைக் கடுமையாக எச்சரித்ததாகவும் சொல்கிறார்கள் பா.ஜ.க.வினர்.