சிவகாசி கிழக்கு பகுதியிலுள்ள நேரு காலனியில் மாசி பொங்கல் 4-ஆம் ஆண்டு அன்னதான விழா என்று போர்டு வைத்திருந்தார்கள். அங்கே பந்தலுக்கு உள்ளே மக்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். வெளியே நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்தனர். ‘கோவிலில் அன்னதானத்தின் போது உணவு சாப்பிடுவதன் மூலம் வயிறும் மனமும் ஒருசேர நிறைகிறது..’ என்றார், அங்கே நாம் சந்தித்த பாலமுருகன்.
தமிழக அரசும் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் வரும் கோவில்களில் அன்னதான திட்டத்தின் மூலம் மதிய வேளையில் உணவளித்து வருகிறது. இதனடிப்படையில், நாளொன்றுக்கு குறைந்தபட்சம் 25 பேருக்கும், அதிகபட்சம் 100 பேருக்கும் அன்னதானம் வழங்கப்படுகிறது. ‘உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே..’ என்றொரு நல்வாக்கியம் உண்டு. உணவளித்தல் என்பது ஒருவருக்கு உயிரைத் தருவது போலத்தான். அதனாலேயே, தானத்தில் சிறந்தது அன்னதானம் என்று சொல்லப்படுகிறது.
‘எவன் தனக்காக மட்டும் ஆகாரம் தேடி சாப்பிட்டுக் கொள்கிறானோ, அவனுடைய பாவத்தையும், முழுக்க முழுக்க அவனேதான் அனுபவித்தாக வேண்டும். வேறு எவரும் அதில் பங்கெடுத்துக்கொள்ள மாட்டார்.’ என்கிறது கீதை. பணமோ, நகையோ, நிலமோ, வீடோ, உடையோ எது கொடுத்தாலும், எவ்வளவு கொடுத்தாலும் வாங்கிக்கொள்வார்கள். போதும் என்று சொல்ல மனம் வராது. உணவளிக்கும் போதுதான் ‘போதும்..’ என்று திருப்தியோடு சொல்வார்கள்.
ஆம். மனித மனம் எதிலும் முழுமையாக திருப்தி கொள்ளாது. ஒன்று கிடைத்தாலும் அடுத்ததற்காக ஏங்கும். எவ்வளவு பசித்தாலும் சாப்பிடும் போதுதான் வயிறோடு சேர்ந்து மனமும் நிறைகிறது. எதையுமே கதை சொல்லி புரியவைப்பது நமக்கு கைவந்த கலை. அன்னதானம் குறித்த கதையும் காலம் காலமாகச் சொல்லப்பட்டு வருகிறது. பாரதப் போர் முடிந்ததும் சொர்க்கம் சென்றானாம் கர்ணன். அங்கே அவனுக்கு சகல வசதிகளும் செய்து தரப்பட்டிருந்தது.
ஆனாலும், பசி வாட்டியது. சொர்க்கத்தில் யாருக்கும் பசியெடுக்காமல் இருக்கும்போது, கர்ணனை மட்டுமே அகோரப்பசி நிலைகுலைய வைத்தது. ‘எனக்கு ஏன் இந்தக் கொடிய தண்டனை?’ என்று நாரதரிடம் புலம்பினானாம். அதற்கு நாரதர், ‘கர்ணா.. நீ பூமியில் இருந்தபோது பொன்னும் மணியும் தானம் செய்தாய். ஆனால், அன்னதானம் செய்யவில்லை. உனது பசிக்கு இதுவே காரணம்.’ எனச்சொல்லி, ‘உனது ஆள்காட்டி விரலை வாயில் வைத்துச் சுவை..’ என்றாராம். கர்ணன் விரலைச் சுவைத்ததும் பசி பறந்து போனதாம். அதற்கான காரணத்தை விளக்கிய நாரதர் ‘முன்பு ஒருமுறை வழிப்போக்கன் ஒருவன் உன்னிடம் அன்னதானம் நடக்கும் இடத்துக்கு வழி கேட்டபோது, உன் ஆள்காட்டி விரலால் அந்த திசையைக் காட்டினாய். அதன் பலனால்தான், உன் பசி விலகியது. அன்னதானத்தின் புண்ணியத்தை உன் ஆட்காட்டி விரல் பெற்றிருக்கிறது என்பதை நான் சொல்லவும் வேண்டுமோ?’ என்றாராம்.
வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் பசியில் வாடும் வறியவர்களைப் புசிக்கச் செய்வோம்! புண்ணியம் கிடைக்கிறதோ என்னவோ, அதனால் அவர்களின் வயிறு நிறையும்! நம் மனமும் நிறையும்!