





‘கல்விக் கடவுள் காமராஜர் பிறந்த நாளில், கலைக்கடவுளின் அன்பு இதயங்கள் வணங்குகிறோம்..’ என்று மதுரையில் சிவாஜி ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியிருக்கின்றனர். அந்த போஸ்டர்களைப் பார்த்ததும், பழைய நினைவுகள் நிழலாடியது.
அறிஞர் அண்ணாதுரையை, சினிமாவில் எப்படி எம்.ஜி.ஆர். போற்றி வந்தாரோ, அதுபோல், சினிமாவில் கர்மவீரர் காமராஜரின் புகழ்பாடினார், சிவாஜி.
1972-ல் வெளியான பட்டிக்காடா பட்டணமா திரைப்படத்தில்,
‘சிவகாமி உமையவளே முத்துமாரி –
உன் செல்வனுக்கும் காலமுண்டு முத்துமாரி
மகராஜன் வாழ்கவென்று வாழ்த்து கூறி – இந்த
மக்களெல்லாம் போற்ற வேண்டும் கோட்டை ஏறி’
என, மீண்டும் காங்கிரஸ் ஆட்சி மலர்ந்து, காமராஜர் தமிழக முதல்வராக வேண்டும் என்ற எதிர்பார்ப்போடு, ‘அம்பிகையே.. ஈஸ்வரியே..’ என்ற பாடலில், இந்த வரிகள் இடம்பெற்றன.
1974-ல் ரிலீஸான சிவகாமியின் செல்வன் திரைப்படத்தில் –
‘சிவகாமி பெற்றெடுத்த செல்வனல்லவோ!
நாளை இந்த மண்ணையாளும் மன்னன் அல்லவோ!’
என, ’எதற்கும் ஒரு காலம் உண்டு பொறுத்திரு மகளே..’ என்ற பாடலில் வரும் வரிகள் இவை.
காமராஜர் இயற்கை எய்திய ஆண்டான 1975-ல் வெளிவந்தது ‘மன்னவன் வந்தானடி’ திரைப்படம். அதில், ‘நான் நாட்டை திருத்தப் போறேன்..’ என்ற பாடலில்,
நாட்டிலுள்ள பெருந்தலைவர்
காட்டி வச்ச பாதையிலே
நாட்டையே ஆளப் போறேன்..’
என்று சிவாஜி பாடுவார்.
1977-ல் வெளிவந்த ‘அவன் ஒரு சரித்திரம்’ திரைப்படத்தில் வரும் ‘நாளை என்ன நாளை.. இன்றுகூட நமதுதான்..’ என்ற பாடலில் கீழ்க்கண்ட வரிகளை இடம்பெற செய்திருந்தனர்.
‘மாபெரும் தலைவர் சொன்ன மானத்தோடு வாழ்வோம்!
நாட்டு மக்கள் நல்லவருக்கு வாக்கு சீட்டு தருகவே!’
என்று, காமராஜரின் கொள்கையை விளக்கி, வாக்காளர்களிடம் கோரிக்கை வைக்கும் விதத்தில் அந்த பாடல் காட்சியை அமைத்திருந்தனர்.
சிவாஜி கணேசனையும், கவிஞர் கண்ணதாசனையும் காமராஜரின் பக்தர்கள் என்று சொல்வதே சரியாக இருக்கும். அதனால்தான், சினிமாவை அவ்வளவாக பிடிக்காத காமராஜரை, திரையிலும் போற்ற முடிந்தது.
சிவாஜி ரசிகர்கள் சாதிகளுக்கு அப்பாற்பட்டவர்கள் ஆவர். அந்த போஸ்டர்களுக்கிடையே, காமராஜரை வாழ்த்திய வேறு சில போஸ்டர்களையும் காண நேரிட்டது.
ஒரு போஸ்டரில் ’நாடார்களின் இரட்டை திருவிழா’ என, நாடாண்ட முதல்வரே! நாளை நாடாளும் முதல்வரே!’ என்று குறிப்பிட்டு, காமராஜரோடு, நடிகர் சரத்குமாரையும் இணைத்து வாழ்த்தியிருக்கின்றனர். இன்னொரு போஸ்டரில், ‘பெருந்தலைவர் பிறந்தநாள் திருவிழா’ என்பது சிறிய எழுத்துகளிலும், ‘நாடார் சமுதாயமே!’ என்பது பெரிய எழுத்துகளிலும் போட்டிருந்தனர்.
தமிழகம் மட்டுமல்ல, தேசமே கொண்டாட வேண்டியவர் பெருந்தலைவர் காமராஜர் என்பதே நிதர்சனம்!